Saturday, November 21, 2009

மூன்றாம் பால்

அரவானிகள் விரும்பினால், வாக்காளர் பட்டியலில் தங்களை "மற்றவர்' என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை முதன்முறையாக அறிவித்துள்ளது. அரவானிகளின் பத்தாண்டுகளுக்கும் மேலான கோரிக்கைக்குத் தேர்தல் ஆணையம் முதன்முதலாக செவி சாய்த்திருக்கிறது. இதற்காகத் தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும்.

இதுநாள்வரையிலும் அரவானிகளில் பெரும்பாலோர் வாக்களித்து வந்தாலும்கூட, அவர்கள் ஆண் அல்லது பெண் என்றே பால் பாகுபாடு செய்யப்பட்டு வந்தனர். வேலைவாய்ப்புகள், கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) உள்ளிட்ட ஆவணங்களிலும்கூட இந்த பாகுபாடு ஆண் அல்லது பெண் என்றாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கி வைத்துள்ள இந்த நல்ல நடைமுறை, அனைத்து துறைகளுக்கும் பரவும் என்பதில் சந்தேகமில்லை.

அரவானிகளில் சிலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்தார்கள். ஆனால், வடஇந்தியாவில் சில நகராட்சித் தேர்தல்களில் அரவானிகள் சிலருக்கு கிடைத்த வெற்றியைப் போல தமிழ்நாட்டில் பெற இயலவில்லை.

தேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் தங்களை ஆண் அல்லது பெண் என்ற ஏதோ ஒரு பாலினத்தைத் தேர்வு செய்துதான் போட்டியிட முடிந்தது. ஆனால் இப்போது மற்றவர்கள் என்பதைத் தேர்வு செய்து போட்டியிட முடியும். பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் தொகுதிகளில் மற்றவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் இதற்கான தனி வரையறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்பது நிச்சயம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கிராமத்தில் அரவானிகள் நடத்தும் திருவிழாவுக்கும் அழகிப் போட்டிக்கும் சமூகமும் அரசும் கொடுத்த முக்கியத்துவம் அவர்களது கோரிக்கைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. காரணம், இவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மற்றவர்கள் எண்ணிக்கை வரும்போது இவர்களது சரியான எண்ணிக்கை தெரியவரும். இவர்களுக்கென ஒரு வாக்குவங்கி இருப்பது தெரிந்தால் ஒருவேளை அரசியல் கட்சியினரும் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதிகளை அளிப்பார்கள்.

பிறப்பிலேயே அரவானிகளாக இருப்போர் எண்ணிக்கையைவிட, வளரும் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உளவியல் மாற்றங்களால் தங்களை அரவானிகளாக மாற்றிக்கொள்வோர் எண்ணிக்கை அதிகம். இவர்கள்தான் தங்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பாலின மாற்றுச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல்களும், புகார்களும் இருந்து வருகின்றன. இவர்கள் பிறப்புச் சான்றிதழில் பாலினத்தை மாற்றிப் பதிவு செய்வதிலும் சிக்கல்கள் இருந்து வருகின்றன.

அரவானிகளுக்கு தமிழக அரசு எப்போதும் கனிவாகவே நடந்து வந்திருக்கிறது. அரவானிகளின் பாலினமாற்று அறுவைச் சிகிச்சைக்கு மும்பை செல்லும் நிலைமையை மாற்றி, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அரவானிகளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கிடப் புகைப்படங்கள் எடுக்கும்பணி சென்னையில் நடைபெற்றுள்ளது. அரவானிகள் சிலர் தங்களுக்குக் குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். இவை யாவும் அவர்களுக்கு ஆதரவாக அமையும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தரம் தாழ்த்திக் கொள்ளாமல் தனித்து வாழ உதவியாக இருக்கும்.

கடைவீதியிலும், ஓடும் ரயில்களிலும் அரவானிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து வெறுப்பு ஏற்படுவது இயற்கையே. அவர்களது நிலையைப் புரிந்துகொண்டால் இந்த வெறுப்பு மறையும். மேலும் அரவானிகளும் பெருகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு சமூகம் வெறுக்கும் இந்தப் பழக்கவழக்கங்களை விட்டுவிடும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு கூடும். ஒரு தொலைக்காட்சியில் "இப்படிக்கு ரோஸ்' தொடர் மூலம் அரவானிகள் பற்றிய எண்ணத்தை ஒரு அரவானி மாற்ற முடிகிறதென்றால், இதை நிச்சயமாக எல்லா அரவானிகளாலும் செய்ய முடியும்.

கவிஞர் நா. காமராஜன் கவிதையில், அரவானி தன்னைப் பற்றி சொல்லும் கவிதை வரி இது: "சந்திப் பிழை போல நாங்கள் சந்ததிப் பிழைகள்'. அவர்கள் சந்திப்பிழை அல்ல. தனிச்சொல். எல்லாச் சொல்லும் பொருளுடைத்து!
நன்றி : தினமணி

No comments: