Wednesday, November 11, 2009

சத் சங்கமாகுமா ஜாதி விழாக்கள்...!

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள்...!

அத்தகைய நிலைக்கு ஜாதித் தலைவர்கள், அரசியல் கட்சியினரின் செயல்பாடே பல நேரங்களில் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. ஒவ்வோர் ஆண்டும், மறைந்த தலைவர்களுக்கு விழா எடுக்கப்படுகிறது.

சில விழாக்களை, பொதுமக்களின் நலன் கருதி (?) அரசே முன்னின்று நடத்துகிறது.

விழா நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அதில் மேற்கொள்ளப்படும் முடிவுகளின்படி, விழா நடக்கும் இடத்துக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து குவியும் தொண்டர்களுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

விழா நாள், நெருங்க நெருங்க பதற்றம் கூடிக் கொண்டே போவதால், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் போலீஸ் படை குவிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்கள்தான் எத்தனை..! எத்தனை..!

விழாவையொட்டி, நகரங்களில் போக்குவரத்தை அடியோடு மாற்றுவதால் நிலைகுலையும் வாகனங்கள்.

எல்லாத் தலைவர்களும் விழா நாளன்று ஒரே இடத்தை நோக்கி அணிவகுப்பதால், மேற்கொள்ளப்படும் பல அடுக்குப் பாதுகாப்பு.

எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அதனைப் பொருட்படுத்தாமல், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கையில் நீண்ட கழிகளுடன் (கொடிகள்..!) ஆர்ப்பரித்தபடி வரும் தொண்டர்கள்.

குடிநீர் கூட கிடைக்காத, ஆள் அரவமற்ற இடங்களில் தாற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் வெறுப்பில் அதனைக் கண்டும், காணாதிருக்கும் போலீஸôர்.

அறிவிக்கப்படாத "பந்த்' போல, நகர் முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக உடைக்கப்படும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் மூடப்படும் கல்வி நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள்.

பள்ளிகளில் இருந்து பிள்ளைகள், பத்திரமாக வீடு திரும்பி விட்டார்களா, என்ற பதைபதைப்பில் பெற்றோர்கள்..!

விழா நடைபெறும் இடம் நோக்கி வாகனங்கள் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை..

இந்த அசாதாரண நிலையைப் பயன்படுத்தி, அண்ணன், தம்பிகளாகப் பழகிவரும் வெவ்வேறு சமூகத்தினரிடையே பிரச்னையைத் தோற்றுவித்து, நிரந்தரப் பகை ஏற்படுத்தும் விஷமிகள்!

இவையாவும், ஜாதியக் கண்ணோட்டத்தோடு இவ்விழாக்கள் நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை பொதுமக்களிடம் எழுப்புகின்றன.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் சமூகம் பிளவுபட்டுக் கொண்டிருக்கிற மோசமான சூழலில், ஜாதியமும் தம்முடைய வலிமையை, இதுபோன்ற விழாக்கள் மூலம், நிலைநிறுத்திக் கொள்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

வாழும் காலத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்களுக்கு ஓரிரு இடங்களில் சிலைகள் வைக்கலாம்; விழாக்கள் நடத்தலாம் தவறில்லை.

ஆனால், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை, அவர்கள் எந்த ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், விழாக்களின் பெயரால் ஒரே இடத்தில் குவித்து, பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதை, மறைந்த தலைவர்களின் ஆன்மாக்கள்கூட ஏற்றுக் கொள்ளாது.

இவ்விழாக்கள், ஜாதி துவேஷங்களுக்கு மூலவிசையாகவும், கலவரங்களுக்கு வித்தாகவுமே அமைந்தது கடந்தகால வரலாறு.

ஒட்டுமொத்தமாக, இதுபோன்ற விழாக்களைத் தடை செய்வது சாத்தியமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.

காரணம்.. தனி மனித ஆராதனைகளாக, இவ்விழாக்கள் தந்திரமாக மாற்றப்பட்டு, பல ஆண்டுகளாகி விட்டன.

அதற்குப் பதிலாக, அவ்விழாக்களை அந்தந்த ஊர்களிலேயே அமைதியான தியானக் கூட்டமாகவோ, ஜாதிப் புகழ் பாடாத சத் சங்கமாகவோ, மறைந்த தலைவர்களின் சிந்தனைகளை விதைக்கும் கருத்துப் பட்டறைகளாகவோ, ஊரெங்கும் மரங்களை நடும் பசுமை இயக்கமாகவோ நடத்த ஜாதித் தலைவர்கள் முன்வர வேண்டும்.

இதன்மூலம், துடிப்பான இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்திய பெருமை அவர்களைச் சேரும்.

விழா குதூகலத்தில், ஒரு முட்டாள் இளைஞனால் எங்காவது வீசப்படும் சிறு கல் கூட, பெருங்கலவரத்துக்குக் காரணமாவதை, இத்தலைவர்கள் உணராதவர்களா..!

இதோ பாருங்கள்..! எனக்குப் பின்னால் எத்தனை வாகனங்கள்..! எத்தனை எத்தனை இளைஞர்கள் என ஒவ்வொருவரும் இறுமாப்புக் கொள்ளவும், தேர்தல்கால வாக்கு பேரங்களுக்கு முன்னோட்டமாக, தம்மை அடையாளங்காட்டிக் கொள்ளவுமே, இதுபோன்ற விழாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே, காலங்காலமாக வேரூன்றி கிராமங்களை மூர்க்கமாகப் பிளவுபடுத்திவரும் ஜாதித் தகராறுகளை சமாளிக்க முடியாமல், அரசு நிர்வாகம் திணறி வருவது கண்கூடு.

இதுபோன்ற சூழ்நிலையில் நடத்தப்படும் விழாக்கள், பிரச்னையை மேலும் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறைக்காது.

சமத்துவம் பேசிக்கொண்டே, ஜாதியை வளர்க்கும் தலைவர்கள் இதனை உணர வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ ஒத்துழைப்புத் தர வேண்டும்.

கட்டுரையாளர் :ப.செ. சங்கரநாராயணன்
நன்றி : தினமணி

1 comment:

பாரதி said...
This comment has been removed by the author.