Tuesday, October 13, 2009

குறுக்குச் சால் ஓட்டலாமா?

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூலி குறைவாக வழங்கப்படுவதாகக் கூறி, தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல் நடப்பதும், அப்பகுதியின் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்வதும் வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

கூலியைக் குறைத்துக் கொடுத்தார்கள் என்ற பேச்சு எழுந்தவுடனே, தொடர்புடைய அலுவலர் அல்லது உள்ளாட்சிப் பதவியில் உள்ள மக்கள் தலைவர் இந்தப் பணத்தில் கை வைத்துவிட்டார் என்பதுதான் எல்லாருக்கும் மனதில் தோன்றும். ஆனாலும், பல இடங்களில், பல வேலைகளில், முறைகேடாகக் கூலி கேட்டு பிரச்னை செய்பவர்கள் கிராமத்து மக்களே என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

பல இடங்களில் இத்தகைய எதிர்ப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் நடப்பது இதுதான்:

இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அல்லது ஏரிக் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும்போது, கிராமத்தில் உள்ள ஏழை விவசாயக் கூலிகள் மட்டுமன்றி, கிராமத்தில் உள்ள மற்றவர்களும் வேலைக்கு வருகிறார்கள். இவர்களில் பாதிப்பேர் வெட்டிக் கதைகள் பேசி உட்கார்ந்து கொண்டிருக்க, சிலர் மட்டும் உழைக்கிறார்கள்.

பகல் 2 மணிக்கெல்லாம் "கூலி கொடு போகணும்' என்கிற குரல் எழுந்துவிடுகிறது. இத்தனை பேர் ஈடுபடும் வேலையில் இந்தப் பரப்பளவுக்கு இத்தனை அடி ஆழத்துக்குத் தூர் வாரப்பட்டிருக்க வேண்டும் என்று பணியின் தன்மையை அரசு நிர்ணயிக்கிறது. அதை ஓரளவாகிலும் ஈடுசெய்ய வேண்டும் என்று அலுவலர்கள் வலியுறுத்தினால், ரகளை தொடங்குகிறது. "உனக்கென்ன! அரசுப் பணம்தானே! கணக்கெழுதிட்டுப் போய்யா' என்கிற அதிகாரம் அதிகமாக இருக்கிறது.

அரசு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, மக்களே இப்படியாகப் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம்? அதிலும், கிராமத்திற்கு வளம் சேர்க்கும் நீர்ஆதாரத் திட்டங்களில் இத்தகைய முறைகேடுகளில் மக்களே ஈடுபடலாமா?

சில மாதங்களுக்கு முன்பு, இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்திய ஒரு தன்னார்வ அமைப்பு, அரசுக்கு அளித்த பரிந்துரையில், 100 நாள் வேலைத் திட்டத்தை 120 நாள்களாக அதிகரிப்பதோடு, உண்மையான ஏழைகளை மட்டுமே வேலைக்கு ஈர்க்கும் வகையில், ஊதியத்தில் 20 சதவீதத்தைக் குறைத்து வழங்கினால், ஏழைகள் மட்டுமே இந்த வேலைக்கு வருவார்கள். ஏழைகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்று கூறியிருந்தது.

அந்தச் செய்தியைப் படித்த நேரத்தில் முட்டாள்தனமான பரிந்துரை என்று தோன்றினாலும், இப்போது, கிராமத்தில் ஏழைகள் அல்லாதவர்களும் இதில் வந்து உட்கார்ந்துகொண்டு, வேலையையும் கெடுத்து, கூலியையும் கேட்கிறார்கள் என்பதைக் கேட்கும்போது, அந்த அறிக்கையில் அர்த்தம் இருப்பதை உணர முடிகிறது. பல மாநிலங்களிலும் மக்களிடம் இத்தகைய மனப்போக்கு இருப்பதால்தான் இந்த அறிக்கை அவ்வாறு தரப்பட்டுள்ளது என்று புரிகிறது.

கிராமங்களில் விவசாயப் பணிகள் நடைபெறாத காலத்தில் அந்த மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில், ஏழை விவசாயக் கூலிகளுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் கிராம மக்களுக்கு குறைந்தபட்ச வேலை கிடைப்பதுடன் ஓரளவு பணமும் கிடைக்கிறது என்பதால்தான், மத்திய அரசு இத்திட்டத்துக்கு 2009-10-ம் நிதியாண்டில் ரூ.39,100 கோடியை ஒதுக்கியுள்ளது. (சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம்). குறைந்தபட்சக் கூலி ரூ.84 என்றும் நிர்ணயித்துள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 75 சதவீதப் பணிகள் வாய்க்கால் வெட்டுதல், தூர் வாருதல், ஏரி, குளத்தை ஆழப்படுத்துதல் ஆகியன. ஆனால், இதில் ஒரு பணி நடந்தது என்பதன் அளவு, விரிவு, ஆழம் ஆகியவற்றை உறுதிப்படுத்தி, அதற்குப் பொறுப்பேற்கவும், தொடர்ந்து கண்காணிக்கவுமான பொறுப்புகள் யாருக்கு என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

மேலும், இத்திட்டத்தில் இன்னொரு ஆபத்தும் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயப் பணிகள் நடைபெறாத நாள்களில் மட்டுமே இத்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், கிராமத்தில் அறுவடை நடைபெறும் வேளையிலும் இத்தகைய தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும்போது, அறுவடைக்குப் போகாமல் இப்பணிக்கு வருவதையே விரும்புகிறார்கள். காரணம், உழைக்காமல் கூலி கிடைக்குமே!

விவசாயக் கூலிகளுக்கு வேலை உறுதியாகக் கிடைக்கக் கூடிய நாள்களில் அரசே இவ்வாறு குறுக்குச் சால் ஓட்டினால், திட்டத்தின் நோக்கமே- விவசாய வேலை இல்லாத நாளில் ஏழை விவசாயிக்கு வேலைவாய்ப்பு என்பது- பாழ்பட்டுப்போவதுடன், விவசாயமும் பாழ்படும். இதனால் உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படும். இறக்குமதி செய்ய எந்தவொரு அமைச்சரும் ஆர்வமுடன் முன்வந்து நிற்க "காரணங்கள்' உண்டு. ஆனால், நஷ்டப்படுவது நாடுதானே!

அக்டோபர் 2-ம் தேதி முதலாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன். காந்தி பெயருக்கு மாறியது என்பதற்காக, உழைக்காமலேயே கூலியை "காந்தி கணக்கில் எழுதும்' திட்டமாக இது அமைந்துவிடக் கூடாது!
நன்றி : தினமணி

2 comments:

ISR Selvakumar said...

வித்தியாசமான, நேர்மையான பதிவு! ஆனால் நீங்கள் யாருக்காக எழுதியுள்ளீர்களோ ”அந்த குறுக்கு சால்” மனிதர்கள் இதை படிப்பார்களா? சந்தேகம்தான்.

பாரதி said...

r.selvakkumar thanks