இதுவரை வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்பட்ட 'பிக்சட்' வட்டிவீதம் போய் இனி, 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. சாதாரணமாக வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி நிரந்தர வட்டி எனப்படும் பிக்சட் வட்டி வீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட்டி வீதங்களில் இருந்த மாற்றம் ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பிக்சட் வட்டி வீதத்தை விரும்பினர். அப்போதைய நிலவரப்படி பிக்சட் வட்டிக்கும் மாறும் வட்டி எனப்படும் 'ப்ளோட்டிங்' வட்டிக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததில்லை. அதுவே வங்கிகளுக் கும் பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது சில ஆண்டுகளாக, நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக மாறி வருகிறது. இவற்றின் வித்தியாசம் 5.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதம் வரை வங்கிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டகாலம் வரை நிரந்தர வட்டியும் அதற்குப் பின் மாறும் வட்டியும் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன.
நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் வந்தது ஏன்? உலகப் பொருளாதார மந்தநிலை இந்தியப் பங்கு மற்றும் நிதிச் சந்தையில் ஏற்படுத்திய பாதிப்பு, அரசின் கடன் வாங்கும் கொள்கை இவற்றால் தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்த வித்தியாசத்தால் பொதுமக்களுக்கு நிரந்தர வட்டி தான் லாபம் என்றாலும், வங்கிகளுக்கு நிரந்தர வட்டி என்பது நஷ்டத்தைத் தரக்கூடியதாக இருந்தது. 2002-03 காலகட்டங்களில் இரு வட்டிகளுக்கும் இடையிலான வித்தியாசம் 50லிருந்து 200 அடிப்படைப் புள்ளிகள் வரை மாறியது. மக்களோ, கடன்களுக்கு நிரந்தர வட்டியையே தேர்வு செய்தனர். வித்தியாசத்தால் ஏற்பட்ட விளைவு வங்கிகளையே பாதித்து வந்தது. 2006ல் இந்த நஷ்டம் வங்கிகளைப் பெருமளவில் பாதித்தது. இப்போது, இந்த நிரந்தர வட்டி முறையை நீக்கிவிட்டு, மாறும் வட்டியை நிரந்தரமாக்கலாமா என்று வங்கிகள் யோசித்து வருகின்றன. கூடிய விரைவில் 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்
1 comment:
அப்படியா?
Post a Comment