Wednesday, October 14, 2009

சேதமில்லாத இந்துஸ்தானம்!

பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், தான் எழுதிய புத்தகத்தில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா மட்டுமே முழுமையான காரணமல்ல, ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோரின் தவறான அணுகுமுறைகளே பிரிவினைக்குக் காரணம் என எழுதியதாலும், குறிப்பாக வல்லபாய் படேல் குறித்து அவரின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாலும், பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங்கை நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என பாஜக தலைமை கூறியுள்ளது.

இதன் பிறகு தற்போது நாடு முழுவதும் பிரிவினைக்குக் காரணம் யார், எதனால் பிரிவினை ஏற்பட்டது என்பது குறித்தெல்லாம் பல்வேறு விதமான தகவல்களும் விவாதங்களும் பலதரப்பினராலும் அவரவர் கோணத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒன்றுபட்ட பாரத நாடு இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் பிரிவதற்குக் காரணம் என்ன என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். பிரிவினைக்குக் காரணம் காந்தியா, நேருவா, படேலா, ஜின்னாவா என்று ஆராய்ச்சி செய்து யாராவது ஒருவர் மீது பழி சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல.

பிரிவினைக்கு முன்பாக பாரத நாட்டின் வட பகுதிகளில் - குறிப்பாக பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப், வங்காளம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்தொகை அதிகமாக இருந்தது. 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் இஸ்லாமிய மதத்தினரும், இந்து மதத்தினரும் இணைந்து வெள்ளையரை எதிர்த்து நின்றனர். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய தேசிய நீரோட்டத்தில் அவர்கள் முழுமையாகக் கலந்து இருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மக்கள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரம் மதவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளில் இஸ்லாமிய மதவாதிகளின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் வேலை செய்யத் தொடங்கியது.

துருக்கியில் இஸ்லாமிய மதத் தலைவர்களின் (கலிபா) ஆட்சி ஆங்கிலேயர்களின் துணையுடன் முறியடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் மதத் தலைவர்களின் ஆட்சி மீண்டும் துருக்கியில் அமைய வேண்டுமென ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனை இந்திய இஸ்லாமியர்களும் ஆதரிக்கத் தொடங்கினர். இப் போராட்டம் "கிலாபத்' இயக்கம் என அழைக்கப்பட்டது.

இந்த இயக்கத்தைக் காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கத் தலைப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு காங்கிரஸிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த தேசிய உணர்வுள்ள இஸ்லாமியத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், "கிலாபத்' இயக்கத்தை வழி நடத்திய இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுத்தது, மிகத் தவறான அணுகுமுறையாக அமைந்துவிட்டது.

அதன் பின் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடச் செய்வதற்காக உருப்படியாக எந்த முயற்சியையும் செய்யவில்லை. மாறாக, இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்கு ஊக்கம் தரும் வகையிலேயே செயல்பட்டு வந்தது என்பதுதான் சரித்திரம் நமக்கு உணர்த்தும் உண்மை.

தேச பக்தர்களாலும், காங்கிரஸ் கட்சியினராலும் பொது நிகழ்ச்சிகளில் பாடப்படும் "வந்தே மாதரம்' எனும் தேசியகீதம் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளுக்கு மாறாக உள்ளது என்று சில மதவெறியர்கள் கூக்குரலிட்டதால், முழு "வந்தே மாதரம்' பாடல் பாடும் வழக்கத்தை காங்கிரஸ் கட்சி கைவிட்டது. வந்தே மாதரம் முழங்கும்போது தவறாமல் "அல்லா ஹு அக்பர்' என்றும் காங்கிரஸ் கட்சி முழங்கத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இஸ்லாமியர்களுக்கு அக் கட்சியின் "காந்தி குல்லா' மற்றும் கதராடை சீருடை அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் இஸ்லாமியர்களுக்கு மாநாட்டுக் கட்டணம், போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியே ஏற்றுக் கொண்டது. காங்கிரஸ் கட்சி மேடைகளிலும், மாநாட்டுப் பந்தல்களிலும் இஸ்லாமிய மத வழிபாட்டுக்கான நேரம் வந்துவிட்டால், பொது நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்படும். இஸ்லாமிய மத வழிபாடு நடத்த சிறப்பு அனுமதி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அணுகுமுறைகள் இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்கு ஊக்கம் தருவதாகவே அமைந்து வந்தது.

பசுவதை தடைச் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த காந்தியடிகள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், இஸ்லாமியர்கள் கோபப்படுவார்கள் என்பதற்காக பசுவதை தடைச் சட்டம் என்கிற கோரிக்கையைக் கைவிட்டனர். முஸ்லிம்களுக்கு கட்சி மற்றும் ஆட்சி அதிகாரங்களில் இடஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை, இரட்டை ஆட்சியுரிமை, முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் முஸ்லிம் மதவாதிகள் கையிலேயே ஆட்சி அதிகாரம் என, தொடர்ந்து விட்டுக் கொடுக்கும் போக்கிலேயே காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது.

இதன் காரணமாக, என்ன விரும்பினாலும், அதைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று இஸ்லாமிய மதவெறி சக்திகள் நினைக்கத் தொடங்கின. புகழ்பெற்ற பிரார்த்தனைப் பாடலான "ரகுபதி ராகவ ராஜாராம்' எனும் பாடலில் "ஈஸ்வர கிருஷ்ணா தேரே நாம்' என்கிற வரியை மாற்றி "கிருஷ்ணா' என்பதற்கு பதிலாக "அல்லா' என்கிற வார்த்தையைப் போட்டு, "ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று கோயில்களில் இந்துக்களும், பொது நிகழ்ச்சிகளில் காங்கிரஸ்காரர்களும் பாடிவந்தனர். ஆனால் மசூதிகளிலோ, இஸ்லாமிய இயக்கங்களின் நிகழ்ச்சிகளிலோ இந்தப் பாடல் பாடப்படவில்லை.

இந்தியாவின் தேசிய மொழியாக முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் "இந்துஸ்தானி' என்கிற மொழி காந்தியடிகளால் பரிந்துரைக்கப்பட்டது. மேற்கண்ட மொழியில் சீதாதேவியை பேகம் சீதா என்றும், ராமபிரானை சுல்தான் ராம் என்றும் குறிப்பிட்டனர் என்றால், இந்தப் பைத்தியகாரத்தனத்தை என்னவென்று சொல்வது.

சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை நிர்ணயிக்க முக்கியத் தலைவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கொடி கமிட்டி, காவிக் கொடியை தேசியக் கொடியாகப் பரிந்துரைத்தது. இது முஸ்லிம்களுக்கு ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் கட்சி தீர்மானித்து, அதில் பச்சை வண்ணத்தைச் சேர்த்தனர்.

பின்னர் இதர சிறுபான்மையினருக்காக வெள்ளை நிறத்தைச் சேர்த்தனர். காந்தியடிகளைத் திருப்திப்படுத்த கை ராட்டையைச் சேர்த்தனர். நேருவின் விருப்பப்படி கை ராட்டைக்குப் பதிலாக தர்மச்சக்கரம் சேர்க்கப்பட்டது. பிறகு, ராட்டைச் சக்கரம் தான் தர்மச் சக்கரம் என காந்தியடிகளை திருப்திப்படுத்த நேரு விளக்கம் கொடுத்தார்.

எந்தவொரு நாடும் எக்காரணத்தை முன்னிட்டும் தனது தேசிய அடையாளங்களை இழக்கச் சம்மதிக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சி, வந்தே மாதரம், பசுவதை தடை, தேசியக் கொடி, மொழி, அரசியல் ஆகிய அனைத்திலும் விட்டுக்கொடுக்கும் போக்கையே கடைப்பிடித்து வந்தது. இப்படித் தொடர்ந்து இஸ்லாமிய மதவெறி சக்திகளைத் தாஜா செய்தும், அவர்களது மதவெறி கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தும் வந்தது. இப்படித் தொடர்ந்து இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்குப் பணிந்து சென்றதன் உச்சகட்டமாக பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை முஸ்லிம் லீக் எழுப்பத் தொடங்கியது.

"என் உடலை பிளந்த பிறகுதான் இந்தியாவைப் பிளக்க முடியும்' என்று காந்தியடிகள் பிரிவினைக்கு எதிராக உறுதியாக இருந்தார். பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை பெரிய முட்டாள்தனம் என நேரு ஏளனம் செய்தார். வாளுடன் வாள் மோதுமென படேல் எச்சரித்தார். பாகிஸ்தானைப் பிரித்துத் தராவிட்டால், நேரடி நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக முகமது அலி ஜின்னா அறிவித்தார். நேரடி நடவடிக்கை என்றால் என்ன என்பதை முஸ்லிம் லீக் தொண்டர்கள் மூலம் கோல்கத்தா, நவகாளி, திப்ரா ஆகிய பகுதிகளில் நடத்தியும் காட்டினார். எங்கும் மதவெறி தாண்டவமாடியது.
காந்தியடிகள் ஒப்புதல் இல்லாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் பிரிவினைக்குச் சம்மதம் வழங்கினர். முஸ்லிம் லீகின் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை வெற்றி அடைந்தது.

இதுகுறித்து திமுகவின் தலைவர் அண்ணாதுரை, காரைவிட்டு இறங்காமல், கால் செருப்புத் தேயாமல், சட்டைக் காலரில் அழுக்குப்படியாமல், மிகச் சுலபமாக ஜின்னாவால் பாகிஸ்தானைப் பெற முடிந்தது என்று வர்ணித்தார்.

பிரிவினையோடு இந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது, இனி பிரச்னை இருக்காது என்றுதான் அனைவரும் கருதி வந்தோம். பிரிவினைக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் இன்றளவும் இந்து முஸ்லிம் கலவரங்களும், பிரிவினைக் கோரிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே, நாட்டைப் பிரிப்பது என்பது இந்து -முஸ்லிம் ஒற்றுமைக்கோ, பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கோ வழிவகுக்காது.

நம் நாட்டில் போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றுதல் சிறுபான்மையினரை தாஜா செய்தல், சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக சலுகைகளை வழங்குதல், பூர்வகுடி மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தல் என்கிற தற்போதைய அணுகுமுறை தொடருமானால், மீண்டும் காஷ்மீரிலும் இன்னும் பிற பகுதிகளிலும் பிரிவினை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. பிரிவினைக்கு யார் காரணம் என்று நமக்குள் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதைவிட பூர்வகுடி மக்களின் ஜனத்தொகை குறையாமல் பார்த்துக் கொள்வதும், தேசிய நலனுக்கு உகந்த முடிவுகளை எடுப்பதில் உறுதியாக இருப்பதும், பாரத நாட்டில் இன்னொரு பிரிவினை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

"சேதமில்லாத இந்துஸ்தானம், இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா' என்று குழந்தைகளுக்குப் புத்தி சொன்னார் பாரதி. இந்த அறிவுரையை நமது ஆட்சியாளர்களுக்கு யார் சொல்வது?

கட்டுரையாளர் : அர்ஜுன் சம்பத்
நன்றி : தினமணி

1 comment:

Unknown said...

சூப்பர் சார்.

வாழ்த்துக்கள்.

காலம் காலமாக ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சிகளும் ,தமிழகத்திலுள்ள வயிறு வளர்க்கும் திராவிட கட்சிகளும் அதனுடன் ஒட்டி
ஈனபிழைப்பு நடத்தும் மற்ற கட்சிகளும் சேர்ந்து புனிதமான இந்து மதத்தை அழித்து வருகின்றன.

இந்துக்களே தயவு செய்து சிந்தியுங்கள்.

இந்து என்றால் திருடன்

ராமர் ஒரு கற்பனை பத்திரமே.

இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் .

அப்படி என்றால் ஜாதி சன்றிதலில் இந்து என்று குறிபிட்டால், நாமெல்லாம் என்ன திருடர்களா ?

காலம் காலமாக நம் வழிபட்டு கொண்டிருக்கும் வழிபாடு தவறா ?

இஸ்லாமியர்கள் புனித பயணம் செல்ல இந்திய அரசு நிதி உதவி செய்கிறது.

இந்து நமக்கு புனித பயணம் செல்ல இந்த உதவி கிடைக்குமா ?

உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாட்டிலும் ஒரே சட்டம் அனைவருக்கும்.

நம் இந்தியாவில் மட்டும் இந்துகளுக்கு ஒரு சட்டம். இஸ்லாமியர்களுக்கு ஒரு சட்டம்.

நம் வரி பணம் அவர்களுக்கு.


இந்த நிலை நீடித்துக்கொண்டே போகுமேனால், ஒரு நாள் இந்திய நாட்டில் இந்துகள் எந்தவிதமான உரிமைகளின்றி அகதிகளாக இருக்க வேண்டி வரும்.

எங்களுக்கு ஒன்றும் இஸ்லாமியர்கள் மீதோ
அல்லது
மற்ற மதத்தினர் மீதோ வெறுப்பில்லை. ஆனால் இந்துகளின் உரிமைகளும் உணர்வுகளின் அழிகப்ப்படுமெனில் எங்களுக்கு வேறு வழியில்லை .


இந்துக்களே உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில்

ஆனந்த்.