Wednesday, October 14, 2009

சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு

சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதால், அதன் விலை கணிசமான அளவில் குறையும் என, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன், இந்திய உணவு சந்தையில் சமையல் எண்ணெய் விலை, லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைந்தது. இன்னும் சில நாட்களில் இதன் விலை மேலும் குறையக் கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால், பொதுமக்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது. அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விளைச்சல் அதிகரித்திருப்பதும், சமையல் எண்ணெயை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்திருப்பதும் தான், இதன் விலை குறைவுக்கு மிக முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய சமையல் எண்ணெய் மார்க்கெட்டில் முக்கிய பங்கு வகிக்கும் அடானி வில்மர் என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆங்சு மாலிக் கூறியதாவது: சமையல் எண்ணெயின் விலை ஏற்கனவே குறைந்துள்ளது. தற்போது சமையல் எண்ணெயை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. இதன்காரணமாக, இன்னும் சில நாட்களில் அதன் விலை மேலும் ஒரு ரூபாயில் இருந்து, இரண்டு ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால், சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள், தற்போது அதை வாங்குவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு ஆங்சு மாலிக் கூறினார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில், சமையல் எண்ணெயின் விலை தற்போது ஓரளவு குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர்


No comments: