Wednesday, October 14, 2009

வினாடிக்கு கணக்கிடுவதால் மொபைல் பில் குறையுமா?

மொபைல் போன் பில்களை, பேசும் வினாடிகளுக்கு மட்டும் பணம் செலுத்தும் திட்டத்தின் மூலம் மாதம் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை பணம் சேமிக்கலாம். மொபைல் போனில் பேசும் வினாடிகளுக்கு மட்டுமே பணம் செலுத்தும் திட்டம், பல வெளிநாடுகளில் அமலில் உள்ளன. தற்போது, பெரும்பாலான மொபைல் ஆபரேட்டர்கள், நிமிடங்களுக்கே கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் சில வினாடிகளுக்கு பேசினாலும், ஒரு நிமிடத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது வினாடிகளுக்கு மட்டுமே பணம் வசூலிக்கும் டாடா டொக்கோமோ திட்டத்தால் தங்களுக்கு பணம் மிச்சமாவதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் கூறுகையில்,'நான், பேசும் வினாடிகளுக்கு மட்டுமே பணம் செலுத்தும் டாடா டொக்கோமோ திட்டத்திற்கு மாறியதில் இருந்து, என் மொபைல் போன் கட்டணம் 5 சதவீதம் குறைந்துள்ளது. பேசும் சரியான வினாடிகளுக்கான கட்டணம் மட்டுமே இத்திட்டம் மூலம் வசூலிக்கப்படுகிறது' என்றார். கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட , டாடா டொக்கோமோ திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் இதுவரை 60 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதிதாக நுழைந்துள்ள எம்.டி.எஸ்., ஒரு பைசாவிற்கு இரண்டு வினாடிகள் பேசலாம் என்ற சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் போன்றவை வினாடிக்கு பணம் செலுத்தும் திட்டத்தை அறிவிக்கவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களின் கட்டணங்களை குறைப்பதில் ஆர்வமாக இருக் கின்றன.
ரிலையன்ஸ் தனது ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., வாடிக்கையாளர்களுக்காக, 'சிம்ப்ளி ரிலையன்ஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் அனைத்து அழைப்புகளுக்கும் நிமிடத்திற்கு 50 பைசா மட்டும் செலுத்த வேண்டும். இதே போன்று ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களும் பல திட்டங்களை அறிவித்துள்ளது.

நன்றி : தினமலர்


No comments: