Tuesday, September 1, 2009

எஃகுக் கோட்டை பாதுகாப்பில் "கறுப்புப்பணம்'

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய ஒரு பரபரப்பான விவாதம் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்றது.

தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பரபரப்பு சற்றே ஓய்ந்தாலும், இப்பிரச்னை அவ்வப்போது எழுப்பப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுகையில் இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாடு வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டின் நிதித்துறைக் கொள்கை, தனி நபர்களின் அடிப்படைச் சொத்துரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, வங்கிக் கணக்குகள் பரம ரகசியமாகப் பராமரிக்கப்படுவதற்கான சட்டத்தையே இயற்றியுள்ளது. இந்த ரகசியப் பாதுகாப்புக்கான சட்டம் 1934-ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது என்றாலும் அந்த நாட்டு அரசாங்கம் நீண்ட காலமாகவே இது தொடர்பான ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளது. அதன்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.

வரி ஏய்ப்பு ஒரு நிர்வாக நடைமுறைத்தவறு என்று மட்டுமே பார்க்கப்படும். வரி மோசடி என்பதைத்தான் அந்த நாடு சற்று கடுமையாகக் கையாளும். இந்த நடைமுறை சுவிஸ் நாடு சுதந்திரமடைந்த 13-ம் நூற்றாண்டில் இருந்தே அங்கு அமலில் இருந்து வந்துள்ளது.

இது ஏதோ சுவிஸ் நாட்டில் மட்டும் நிலவுகிற நடைமுறை என்று கருதிவிடக் கூடாது. சர்வதேச ரீதியில் இவ்வாறு வங்கிக் கணக்குகளை ரகசியமாகப் பேணி வரி ஏய்ப்போருக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை எழுபதுக்கும் மேல் இருக்கும்.

இத்தகைய ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கறுப்புப்பணமே என்பதை விளக்கத் தேவையில்லை. இது அந்தக் கறுப்புப்பணச் சொந்தக்காரர்களுக்கு ஒரு வசதியான ஏற்பாடு. ஆனால் இதனால் சுவிஸ் நாட்டுக்கு என்ன பயன்? சொந்த நாட்டுக்கு வெளியே எடுத்துச்சென்று பாதுகாக்கப்படும் சர்வதேச அளவிலான தனியார் சொத்துகளில், 30 சதவிகிதம் சுவிஸ் நாட்டின் வங்கிகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.

2008-ல் இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்கள். அந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை வைத்துக் கணக்கிட்டால், இது 15 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த ரகசியக்கணக்கில் பாதுகாக்கப்படும் பணம், வாடிக்கையாளரின் மறைவுக்குப் பின்னால், அவரது வாரிசுகளுக்கே கூடத் தெரியாமல் போய் விடுவதால், கோரிக்கையற்றுப் போய், அந்த வங்கிகளுக்கே சொந்தமாகி விடுவதும் உண்டு.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை, இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் கறுப்புப்பணத்தில், இந்தியர்களுக்குச் சொந்தமான பணம் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி டாலர்கள். இந்திய ரூபாய்க் கணக்கில் இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் கோடிகள்! இந்த வகையில் சுவிஸ் நாட்டில் பணத்தைப் பதுக்கிவைக்கும் வெளிநாட்டவர்களின் சொத்து மதிப்பில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது. எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் இது!

இப்படிக் கறுப்புப்பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திக் கொண்டு போய் ரகசியமாகப் பதுக்கி வைப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. வளரும் நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தப் பதுக்கல் பணம் ஆண்டொன்றுக்கு சுமார் 10 லட்சம் கோடி டாலர் என்றால் இதில் இந்தியாவின் பங்கு 2200 முதல் 2700 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

160 வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தை இந்த வகையில் எட்டிப்பிடித்துள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல. சுதந்திர இந்தியாவில் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிகழ்வு. இப்போது தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிற சூழலில், இப்படி இந்தியாவிலிருந்து புலம்பெயரும் கறுப்புப்பணம் பந்தயக் குதிரைப்பாய்ச்சல் போலப் பறக்கிறது. அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு முதலீட்டுக்காக என்று இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் 2004-05-ம் ஆண்டில் 96 லட்சம் டாலராக இருந்தது.

2006 - 2007-ல் 44 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளாக இந்தியாவிலிருந்து அன்னியச் செலாவணி வெளியேறுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கும் பிடிபடாத வகையில் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் கறுப்புப்பணத்தின் பரிமாணம் என்ன என்பதை சுவிஸ் வங்கிகள்தான் அறியும்.

இந்தப் பிரச்னை இவ்வளவு வெளிச்சத்துக்கு வந்து விவாதப் பொருளாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, 2008 செப்டம்பரில் தொடங்கி வெடித்துள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடி. இது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நிதித்துறையையே சுனாமிப் பேரழிவு அலையாகத் தாக்கியுள்ளதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய பல நாடுகளும், இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் குவிந்துள்ள தங்கள் நாட்டினரின் கணக்குகளைத் தேட ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா, 34 நாடுகளைக் குறி வைத்து வரி ஏய்ப்புத் தடுப்புக்கான சட்டம் ஒன்றையே நிறைவேற்ற முற்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தை அந்த நாட்டின் வங்கி ரகசியப் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடும் நிர்பந்தம் அளித்து வருகிறது.

அமெரிக்கா சுவிஸ் நாட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களான 52,000 அமெரிக்கக் குடிமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. யுபிஎஸ் என்ற சுவிஸ் நாட்டு வங்கிக்கு எதிராக அமெரிக்க நாட்டின் சட்ட அமைச்சகம் இதற்காக ஒரு வழக்கையே தொடுத்தது. இந்த ஆண்டுத் துவக்கத்தில், அமெரிக்கப் பணமுதலைகள் 2000 கோடி டாலர்களை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்து, வரி ஏய்ப்புச் செய்துள்ள விவகாரத்தில், இந்த யுபிஎஸ் வங்கி 78 கோடி டாலரை அபராதமாகச் செலுத்தியது.

இப்போது ஆகஸ்ட் 13 அன்று பெருந்தொகைகளைப் பதுக்கி வைத்துள்ள 5000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தருவதற்கு இதே யுபிஎஸ் வங்கி, அமெரிக்க சட்ட அமைச்சகத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சுவிஸ் நாட்டு வங்கித்துறையின் எஃகுக் கோட்டைக்குள் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு சிறிய துவாரம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் அமெரிக்காவையோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளையோ பின்பற்றி இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களுக்குள் நுழைந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான வங்கிக்கணக்கு விவரங்களை வெளிக்கொணருவது இந்திய அரசாங்கத்துக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல.

சுவிஸ் நாட்டு அரசாங்கம் "இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடந்த மாதம் தகவல் தெரிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒருவேளை சுவிஸ் நாடு தகவல்களை இந்தியாவுக்குத் தந்தாலும் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

சுவிஸ் நாட்டிலோ, இதர வரி ஏய்ப்பு சொர்க்கங்களிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் என்பது, இந்தியப் பொருளாதாரத்தில் புழங்கும் ஒட்டுமொத்த கறுப்புப்பணத்தின் ஒரு சிறு பகுதியே. உள்நாட்டிலேயே நிழல் பொருளாதாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு, புலம் பெயர்ந்த கறுப்புப்பணத்தை விடப் பல மடங்காகும். இதை மதிப்பிடுவதற்கான முயற்சியைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

இது தொடர்பான மதிப்பீடு ஒன்றை பொது நிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசியக்கழகம் மேற்கொண்டது 1985-ல் தான். அப்போது, 1983 - 84-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் ரூ. 31,584 கோடி முதல் ரூ. 36,786 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு, சர்வதேச அளவிலான ஊழல் விவகாரங்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் வெடித்துள்ள காலச்சூழலில், கறுப்புப்பணத்தின் இன்றைய பரிமாணத்தைக் கணக்கிடுவதற்கான எந்த ஆய்வுக்கும், கடந்த 25 ஆண்டுகளில் மத்திய அரசு உத்தரவிடவில்லை என்பது தற்செயலான நிகழ்வில்லையே.

ஏற்கெனவே சேமித்துப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதும், அதன் சொந்தக்காரர்களை சட்டத்தின் கீழ் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுவதும் முக்கியமானதுதான். ஆனால் அதைப்போலவே முக்கியத்துவம் பெற்றது, கறுப்புப்பணத்தைச் சேமிக்க விடாமலும், அதை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்காமலும் தடுப்பதற்கான நடவடிக்கை.

இந்தத் திசையில் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்கக்கூட மறுத்து வருவது கவலை தரும் போக்காகும். தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வந்துள்ள வரிச்சலுகைகளும், வரி ஏய்ப்புக்கு வழியைத் திறந்து விடும் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளும், வழக்குகளின் பெயரால் முடக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி பாக்கிகளும், இன்ன பிறவும்தான் கறுப்புப் பணக் குவியலுக்கான ஊற்றுக்கண். இதை அடைப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.

மொரீஷியஸ் உள்ளிட்ட 76 நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்புத் தடுப்பு ஒப்பந்தங்கள், வரி ஏய்ப்புக்கும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கும் போடப்பட்டுள்ள ராஜ பாட்டைகள். இந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை கூடத் தொடங்கப்படவில்லை.

நம் நாட்டுக்குள் நுழைகின்ற அன்னிய நிதி முதலீடுகளில் ஒரு பெரும் பகுதி, உரிமையாளர் யார் என்று அறிவிக்கப்படாத அனாமதேயப் பங்கேற்புப் பத்திரங்கள் வழியாகத்தான் வருகின்றன. இந்தப் பங்கேற்புப் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரே பரிந்துரைத்தும்கூட, அது மத்திய அரசால் ஏற்கப்படவுமில்லை; தடை விதிப்பதற்கான முயற்சியும் இல்லை. நாட்டின் மூலதனச் சந்தையில் - குறிப்பாகப் பங்கு வர்த்தகத்தில் - ஈடுபடுத்தப்பட்டு, சூதாட்ட பேரங்களில் பெறப்படும் கொழுத்த லாபங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளதும் தொடர்கிறது. இதுவும் கறுப்புப்பணப் பெருக்கத்திற்கான இன்னொரு வாய்ப்பு வாசல். இந்த லாபங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செவிமடுப்பதேயில்லை.

எனவே, சுவிஸ் வங்கிகளின் எஃகுக் கோட்டை பாதுகாப்பில் பதுக்கப்பட்டுள்ள நம் நாட்டவர்களின் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டு, வெளிக்கொணரப்படும் என்பது இப்போதைக்கு வெறும் பேச்சு ஆரவாரம் மட்டுமே!
கட்டுரையாளர் : உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி

1 comment:

Muthu said...

அரசு இதில் தீவிரமாக இயங்கினால் பதிக்கப்படுவது அரசியல்பெருவியாதியஸ்தர்களும், அரசு அதிகாரிகளுமே. எனவே சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்ள அவர்கள் தயாராவார்கள் என்று எதிர்பார்க்கவேண்டாம்.

நாம் அமெரிக்கா மாதிரியல்ல. அமெரிக்கர்களால் உலகில் எந்த தேசத்திற்கும் நேர்/மறைமுக நிர்பந்தங்கள் அளித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொல்ல இயலும். அவர்களளவுக்கு நம்மால் எந்த தேசத்தின்மீதும் அழுத்தத்தை செலுத்த இயலாது.

ஏற்கனவே ஸ்விஸ் தேசம் 'ஆள் அடையாளம் கேட்டு எங்களிடம் வரவேண்டாம்' என்று இந்திய முகத்தில் செருப்பால் அடித்துவிட்டதாமே ?

ஆகவே புலம்பிக்கொண்டே இருப்பதுதான் பொதுஜனமான நீரும் நானும் செய்யக்கூடியது.