Tuesday, September 1, 2009

யானைக்கும் அடி சறுக்கும்!

"டயட்' என்று அழைக்கப்படும் ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குப் படுதோல்வியை அளித்திருக்கிறது. யுகியோ ஹடோயாமா தலைமையிலான ஜப்பான் ஜனநாயகக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மேலைநாடுகளிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் கவலையையும் ஒருசேர அளித்திருக்கும் தேர்தல் முடிவுகள், ஜப்பானின் பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கண்ணோட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

2006-ம் ஆண்டில் ஜப்பானில் தனிப்பட்ட செல்வாக்குடன் விளங்கிய பிரதமர் ஜுனிச் சிரோ கொய்சுமி அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த நாடு மூன்று பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. ஷின்சோ அபி, யசுவோ ஃபுகுடா மற்றும் டரோ ஆசோ ஆகிய மூன்று பிரதமர்களுமே கொய்சுமி அளவுக்கு அரசியல் அனுபவமோ, நிர்வாகத் திறமையோ பெற்றவர்களாக இல்லாமல் போனதால், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் செல்வாக்கு அதிவேகமாகச் சரியத் தொடங்கியது.

1993-ல் 11 மாதங்கள் தவிர, கடந்த 53 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி என்கிற பெருமை லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு உண்டு. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த டோக்கியோ மாநகராட்சித் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மக்கள் மன்றத்திடம் ஆட்சியில் தொடர அனுமதி கோரி திடீரென்று முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த ஆளும் கட்சி முடிவெடுத்ததன் விளைவுதான் இந்தப் படுதோல்வி.

ஜப்பான் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, ஹடோயாமா அந்தக் கட்சியின் தலைவரானதுதான் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம். ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த இச்சிரோ ஒசாவாவின் உடல்நலக் குறைவும், நன்கொடை வாங்கியதில் அவர் மீது எழுந்த புகாரும் அவரை அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வைத்தன. 62 வயதான ஹடோயாமா, அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது மட்டுமல்ல, சுறுசுறுப்புக்கும், அரசியல் சாதுர்யத்துக்கும் பெயர் போனவரும்கூட. சரிந்து வரும் பிரதமர் டரோ ஆசோவின் செல்வாக்கு, ஹடோயாமாவின் வெற்றிக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, 480 உறுப்பினர்களைக் கொண்ட "டயட்'டின் 308 இடங்களில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிகிறது. 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தல்களில் மேல்சபையிலும் ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை பலம் இருப்பதால், ஒரு நிலையான ஆட்சியை நோக்கி ஜப்பான் அடி எடுத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

கடந்த 20 ஆண்டுகளாகவே ஜப்பான் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களாகி விட்டதால், உற்பத்தியும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டது. அதனால் அந்நியச் செலாவணி வரவும் குறைந்து, வேலையின்மையும் அதிகரித்து விட்டிருக்கும் நிலைமை. உலகிலேயே மிக அதிகமான விலைவாசியும் ஜப்பானில்தான். வேலைவாய்ப்பு இழந்த பலர், தங்களது பழைய வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. பொருளாதாரமோ வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்ட நிலையில் தொடர்கிறது.

ஒருகாலத்தில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்பட்ட ஜப்பான், இப்போது சீனாவின் வளர்ச்சிக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடுகிறது. கிழக்காசிய நாடுகளின் தலைமை சீனாவுக்குக் கைமாறிவிடும் நிலைமை ஏற்பட்டிருப்பதைத் தங்களது தேச கெüரவத்துக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவாக ஜப்பானியர்கள் கருதி வருந்துகிறார்கள்.

இந்த நிலையில்தான், யுகியோ ஹடோயாமா தலைமையில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் அமர இருக்கிறது. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட இந்தக் கட்சி, ஏற்கெனவே பல பொருளாதார மாற்றங்களைச் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், ஜப்பானின் வெளிவிவகாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர வேண்டுமா என்று யோசிப்பதாகவும் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் ஹடோயாமா ஏற்கெனவே கூறி வருகிறார்.

ஜப்பானியத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்கள் அந்த நாட்டு அரசியலில் மட்டுமல்ல, கிழக்காசியாவிலும், உலக அரங்கிலுமே ஏற்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை.
நன்றி : தினமணி

No comments: