Friday, September 4, 2009

விபத்தில்லா தமிழகம் எப்போது?

உலக அளவில் சாலை விபத்துகளில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ள நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2007-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 94,985 பேர் இறந்துள்ளதாக டபுள்யு.ஆர்.எஸ். தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை இரண்டாவதாகும்.

இது இவ்வாறு இருக்க தமிழகத்திலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

2006-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற சாலை விபத்துகளின் எண்ணிக்கை 3,94,432. இதில் தமிழகத்தில் மட்டும் 55,145 விபத்துகள் நடந்துள்ளன. இந்தியாவின் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இது 14 சதவீதமாகும் என என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.

2007-ல் தமிழகத்தில் 59,140 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 12,036 பேர் இறந்துள்ளனர். 2006-ல் நடந்த 55,145 சாலை விபத்துகளில் 11,009 பேர் மரணமடைந்துள்ளனர். 2005-ல் நடைபெற்ற 51,152 சாலை விபத்துகளில் 9,216 பேர் இறந்துள்ளனர்.

2007-ம் ஆண்டில் நடைபெற்ற 59,140 விபத்துகளில் 5,557 விபத்துகள் அரசு பஸ்கள் மூலம் நிகழ்ந்துள்ளன. இதில் 1,543 பேர் இறந்துள்ளனர். தனியார் பஸ்கள் மூலம் நடந்த 4,029 விபத்துகளில் 832 பேர் இறந்துள்ளனர்.

லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் ஏற்பட்ட 10,355 விபத்துகளில் 2,851 பேர் இறந்துள்ளனர். கார், டாக்சி உள்ளிட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து 14,908. இதில் 2,574 பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல் இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 16,070 விபத்துகளில் 2,451 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 4,857 விபத்துகளில் 1,187 பேரும் மரணமடைந்துள்ளனர்.

இவ்வளவு விபத்துகளும் சாலைப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் இன்றைய வேளையிலும் தொடர்வதுதான் வேதனை.

விபத்தைக் குறைக்கும் நோக்கோடு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் செயல்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இதற்காக கடந்த 2000-01-ம் ஆண்டில் ரூ. 2 கோடியும், 2001-02-ல் ரூ. 3.75 கோடியும், 2002-03-ல் ரூ. 5 கோடியும், 2003-04-ல் ரூ. 5 கோடியும், 2004-05-ல் ரூ. 5 கோடியும், 2005-06-ல் ரூ. 6 கோடியும், 2006-07-ம் ஆண்டு ரூ. 6 கோடியும், 2007-08-ல் ரூ. 6 கோடியும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்காக தமிழக அரசு ரூ. 65 லட்சம் வழங்கியுள்ளது.

இப்படி நிதி ஒதுக்கப்பட்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சாலை விதிகளை நாம் மதிக்காததையே காட்டுகிறது. விபத்து ஏற்படாமல் தவிர்க்க ஒவ்வொரு தனிமனிதனும் சபதம் எடுத்தால்தான் முடியும் என்றபோதிலும், இவ்வளவு நிதி ஒதுக்கும் அரசு சாலைப் பாதுகாப்புக் குறித்து இன்னும் முனைப்புக் காட்ட வேண்டும் என்கின்றனர் மக்கள்.

தற்போது விபத்தை ஏற்படுத்தும் நபருக்கு அதிக அளவு தண்டனை தருவது குறித்து அரசு பரிசீலித்து வரும் நிலையில் முதற்கட்டமாக பாமரன் முதல் படித்தவர்வரை அனைவருக்கும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

இதைக் கடமையாக மட்டும் செய்ய நினைக்காமல், உயிர் காக்கும் சமூகசேவைபோல செய்ய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். இதற்காக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து பயிற்சி அளித்து, பின்னர் அவர்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தினால் சாலை விதிகளை மக்கள் அறிந்து செயல்பட முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் என்சிசி, என்எஸ்எஸ், பசுமைப்படை, இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள், சாரண மாணவர்கள், போலீஸ் நண்பர்கள் குழுவினர் உள்ளிட்டோருக்கு சாலைப் பாதுகாப்புக் குறித்த பயிற்சியை அளித்து அவர்களைக் கொண்டு ""சாலைப் பாதுகாப்புப் படை'' என பள்ளிகளில் புதிய அமைப்பை ஏற்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்கின்றனர் போக்குவரத்து காவல்துறையினர்.

அதுபோல், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு உணர்ந்தவர்கள் பெண்கள் என்கிற நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கும் இத்தகைய பயிற்சிகளை வழங்கிப் பிரசாரம் செய்தால் விபத்துகள் இல்லா தமிழகம் உருவாவது நிச்சயம் சாத்தியமாகும்.

கட்டுரையாளர் : வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி

No comments: