Saturday, March 21, 2009

பணவீக்கம் இப்படி குறைஞ்சிருக்கு... சாதாரண மனிதனுக்கு என்ன லாபம்? : சேதுராமன் சாத்தப்பன்

ஒரு மனிதன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறானா என்று நாடிப் பிடித்துப் பார்ப்பர். நாடித்துடிப்பு மனிதனின் குறை, நிறைகளைக் காட்டி விடும். அது போல, பணவீக்க சதவீதம் தான் நாட்டின் நாடி எனலாம். விலைவாசி உயர்வு மக்களையும் கவிழ்த்து விடும், அரசாங்கத்தையும் கவிழ்த்து விடும். சில ஆண்டுகளுக்கு முன் வெங்காய விலை உயர்வு, அரசாங்கத்தையே கவிழ்த்தது. சென்ற ஆண்டெல்லாம் பொதுமக்களையும், கம்பெனிகளையும், அரசையும் பாடாய்ப்படுத்தி வந்தது பணவீக்கம் என்ற ஆறு எழுத்துகள் தான். அப்போது, 12 சதவீதத்தையும் தாண்டி பந்தயக்குதிரை போல சென்று கொண்டிருந்தது. மறுபடி பழைய நிலையான 3 அல்லது 4 சதவீத அளவு வருமா, பொருட்களின் விலை குறையுமா? என்று தான் ஐயத்துடனேயே எல்லாரும் பேசிக் கொண்டனர். 12 சதவீதத்திற்கு மேலாக ஆறு மாதத்திற்கு முன் இருந்த பணவீக்கம் வற்றி, 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக பணவீக்கம் இந்த வாரம் 0.44 சதவீதமாக உள்ளது. பரமபதம் தான்; சென்ற வாரம் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் 1.90 சதவீதம் குறைந்துள்ளது. இதுவே தொடர்ந்தால், அடுத்த வாரமே கூட மைனசுக்கும் கீழே செல்லும். அப்போது, பணவீக்கம் என்பது பண வாட்டமாக மாறி விடும்.
பொதுவாக பொருட்களின் விலை குறைந்து வரும் போது, பண வாட்டம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன? மக்கள் பொருட்கள் வாங்குவதைக் குறைக்கும் போது, செலவுகளைக் குறைக்கும் போது, திட்டச் செலவுகளை அரசு குறைக்கும் போது பணப்புழக்கம் குறைகிறது. கூடி வரும் வேலையில்லா திண்டாட்டமும் ஒரு காரணம். காலங்காலமாகவே நம் பொருளாதாரம் சேமிப்பு பொருளாதாரம் தான். மேலும், உலகளவில் நிலைமைகள் சரியாக இல்லாததால் இன்னும் வாங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர் மக்கள். உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பியட் கார்களைக் கூட இன்னும் மக்கள் டாக்சிகளாக பயன்படுத்தி வருகின்றனர். பொருட்கள் சந்தையில் தேங்கும் போது டிஸ்கவுன்ட் சேல் வருகிறது; பொருட்களின் விலை குறைகிறது. அது, பணவீக்கத்தைக் குறைக்கிறது. கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இது தவிர, கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. ஆதலால் பணவீக்கம் குறைகிறது.
பணவீக்கம் என்றால் என்ன? சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை இந்த ஆண்டும் 105 ரூபாய்க்கு வாங்கினால், 5 சதவீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இது போல, பல பொருட்களை வைத்து ஒவ்வொரு வாரமும் அரசாங்கம் பணவீக்கத்தைக் கணக் கிட்டு அறிவித்து வருகிறது.
எப்படி பணவீக்கம் கணக்கிடப்படுகிறது? உலக நாடுகளில் பலவற்றிலும் உபயோகிப்பாளர் விலை அட்டவணையையே பணவீக்கம் கணக்கிட எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் நாம் மொத்த விலை அட்டவணையையே(ஹோல் சேல் ப்ரைஸ் இன்டெக்ஸ்) அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. 435 பொருட்களின் விலை (மொத்த விலை) உயர்வு, தாழ்வு அறியப்பட்டு வாரந்தோறும் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. இந்த 435 பொருட்களில், நாம் அதிகம் உபயோகிக்காத 100 பொருட்களும் அடங்கியுள்ளது தான் வருத்தத்திற்கு உள்ள விஷயம். முதலில் 1970ம் ஆண்டை அடிப் படை ஆண்டாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு இது கணக்கிடப்பட்டு வந்தது. பிறகு 1981-82 ஆண்டையும், தற்போது 1993-94 ஆண்டையும் அடிப்படையாக வைத்து கணக்கிடப் படுகிறது. மூன்று விதமான பொருட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதலாவதாக உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, மாமிச வகைகள், மசாலா சாமான்கள், எண்ணெய் வித்துகள் போன்றவை. இரண்டாவதாக எரிபொருட்கள், எண்ணெய், மின்சாரம் போன்றவை. மூன்றாவதாக பிஸ்கட், சமையல் எண்ணெய், துணிமணிகள், பற்பசை, மதுபான வகைகள் போன்றவை. இது போன்று 435 பொருட்களின் விலைகளின் உயர்வு, தாழ்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணவீக்க சதவீதம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதில், முதல் கட்டப் பொருட்கள் 22.25 சதவீதமும் (98 பொருட்கள்), எரிபொருட்கள் வகை 14.22 சதவீதமும் (19 பொருட்கள்), மூன்றாவதாக உள்ள தயாரிப்பு பொருட்கள் 63.74 சதவீதமும் (318 பொருட்கள்) எடுத்துக் கொள்ளப்படுகின்றன.மத்திய வர்த்தக அமைச்சகமும், தொழில் துறை ஆலோசகரும் இதை கணக்கிடுகின்றனர்.
பொருட்களின் தேவை கூடும் போது, அதாவது மக்களின் வாங்கும் சக்தி கூடும் போது மறுபடி பணவீக்கம் வரும். அதுவும் வர வேண்டும் அளவாக. எதுவுமே அளவாக இருந்தால் எல்லாருக்கும் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் (பணவீக்கமும்) நஞ்சு. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்பது போல பணவீக்கம் குறைந்தால் என்ன, கூடினால் என்ன? சாதாரண மனிதனுக்கு காய்கறி, அரிசி, பருப்பு விலைகள் குறைய வேண்டும் அல்லது ஒரே அளவாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் தினசரி பிரார்த்தனை. பிரார்த்தனை எப்போதுமே ஜெயிக்கும்.
நன்றி : தினமலர்


No comments: