Saturday, March 21, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க கடைசி நாள் முடிந்தது : போர்டு இன்று கூடுகிறது

மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதன் புதிய போர்டு அறிவித்ததை அடுத்து, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பங்களை கொடுத்திருக்கின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்து விட்டதை அடுத்து, முடிவாக வந்திருக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்க இன்று அதன் போர்டு மும்பையில் இன்று கூடுகிறது. விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வேலையில் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஆவன்டாஸ் நிறுவனங்கள் சத்யம் போர்டுக்கு உதவி செய்கிறது. இந்திய நிறுவனங்களான எல் அண்ட் டி, ஸ்பைஸ் குரூப் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திராவை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான டெக் மகிந்திரா ஆகியவை தங்களது விண்ணப்பங்களை கொடுத்திருக்கின்றன. இது தவிர பிரபல அமெரிக்க கம்ப்யூட்டர் நிறுவனங்களான ஐ.பி.எம், மற்றும் ஹேலட் பேக்கார்ட் ( ஹெச்பி ) ஆகியவையும் விண்ணப்பித்திருக்கின்றன. இவைகள் தங்களது பெயர்களில் விண்ணப்பம் செய்யாமல் வேறு பெயர்களில் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. ஐ.பி.எம்.,நிறுவனம் ஒரு சட்ட நிறுவனத்தின் பெயரிலும், ஹெச்பி, மற்றும் சி.எஸ்.சி., ஆகியவை, முதலீட்டு நிறுவனங்கள் பெயரிலும் விண்ணப்பங்களை அனுப்பியிருப்பதாக தெரிகிறது. வெளிநாடுகளை பொறுத்தவரை, இந்த மாதிரி வேறு பெயர்களில் விண்ணப்பம் செய்வது வழக்கம் தான். சத்யத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க வேண்டுமானால் குறைந்தது ரூ.1,500 கோடி பணம் இருப்பதற்கான ஆதாரத்தை கொடுப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்ததால் இவைகள் தங்களது நிதி ஆதாரங்களையும் தெரிவித்திருந்தன. டெக் மகிந்திராவிடம் டிசம்பர் 31,2008 முடிய உள்ள கணக்கில் 110 மில்லியன் டாலர் பணம் ( அதாவது சுமார் 51 கோடி ரூபாய் ) கையிருப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது தவிர 5 வங்கிகளில் மொத்தம் ரூ.1,500 கோடி கடன் பெறும் வசதி இருப்பதற்கான ஆதாரத்தையும் கொடுத்திருக்கிறது. எல் அண்ட் டி யின் மார்ச் 31,2008 முடிய உள்ள கணக்கில் ரூ.1,560.78 கோடி பணம் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எல் அண்டி நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.10,805 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் சத்யத்தை வாங்க ஆர்வம் காட்டி வந்த அமெரிக்காவை சேர்ந்த ஐகேட் நிறுவனம், நேற்று விண்ணப்பிக்காமல் விட்டு விட்டது. சத்யத்தை வாங்க ஆர்வம் காட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பிக்காமல் விட்டதற்கு சத்யத்தின் வரவு செலவு கணக்கு சரிவர தெரியாததால் என்கிறார்கள். சத்யம் எவ்வளவு கடன் வைத்திருக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை என்றும் அது தெரிந்தால்தான் விண்ணப்பிக்க முடியும் என்கிறார்கள் சிலர். மேலும் அதில் இப்போது குறைந்தது 15,000 முதல் 18,000 வரை கூடுதலான ஊழியர்கள் இருக்க கூடும் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் சத்யம் விற்கப்படுகிறது என்பது தெரிந்ததும் நேற்று மும்பை பங்கு சந்தையில் சத்யத்தின் பங்கு மதிப்பு நேற்று 0.45 காசு குறைந்து ரூ.43.90 ஆக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: