Friday, October 31, 2008

சிறிய முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதால் பங்குச் சந்தை 'டல்' : சேதுராமன் சாத்தப்பன்

மொபைல் போன்களில் தற்போது அதிகமாக சுற்றும் ஒரு ஜோக் என்ன தெரியுமா? பர்கர் வாங்கும் பணத்தில் ஒரு புளு சிப் பங்கை வாங்கி விடலாம். உதாரணமாக யுனிடெக் கம்பெனியின் ஒரு பங்கு 30 ரூபாய் அளவில் வந்தது. இது போல பல கம்பெனியின் பங்குகள் பர்கர் விலைக்கும் கீழே வந்தது. பணத்தை இழந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாவிட்டாலும், ஒரு வறட்டு சிரிப்பு சிரித்ததென்னவோ உறுதி. கடந்த சில வாரத்தைப் போலவே திங்களன்று சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளில் வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் எல்லாம் திங்களன்று காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டு இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல புளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள், கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் எல்லாம் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இந்த முயற்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் கரன்சிகள் வலு கூடின. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயும் கூடியது. இந்திய சந்தையின் நிலை மட்டும் தான் இப்படியா என்று பலரும் நினைக்கலாம். ஜப்பானின் பங்குச் சந்தை கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் காலாண்டு முடிவுகள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டின் காலாண்டு போலவே இருந்தது. ஸ்டேட் பாங்கின் காலாண்டு முடிவுகள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாக இருந்தது. மியூச்சுவல் பண்டுகளில் இன்னும் ரிடம்ஷன் பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதாவது பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனரோ என்னவோ? இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும்; சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர்.

நன்றி :தினமலர்



No comments: