Thursday, October 30, 2008

அடுத்த மாதம் சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கிறது எல்.ஐ.சி.

லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, அடுத்த மாதம் சிங்கப்பூரில் பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறக்கிறது. முதலில் அங்குள்ள இந்தியர்கள் எங்களது பாலிசியை வாங்கிக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம் என்று எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குநர் டி.கே.மெஹ்ரோட்டா தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும் அங்குள்ள இந்தியர்களிடம் எங்களது பாலிசியை விற்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். எல்.ஐ.சி.,யின் பாலிசிகளுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருந்து வருவதால், இந்த பொருளாதார சரிவு நிலையிலும் எங்களால் பாலிசியை இந்தியர்களிடையே சுலபமாக விற்க முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூரை அடுத்து அது ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்திலும் வர்த்தகத்தை விரிவு படுத்தவும் எல்.ஐ.சி.,திட்டமிட்டிருக்கிறது. இருந்தாலும் எல்.ஐ.சி.,யின் இங்கிலாந்து கிளையில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்கவில்லை. எனினும் அது, அங்குள்ள மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு போட்டி நிறுவனமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. எங்களுக்கு அங்கு சில தடைகள் இருப்பதால் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறோம். விரைவில் வளர்ச்சியை காண்போம் என்றார் மெஹ்ரோட்டா. தற்போது எல்.ஐ.சி.,க்கு இங்கிலாந்து, மொரீசியஸ், ஃபிஜி, நேபாளம், அரபு நாடுகள், சவுதி அரேபியா, மற்றும் பஹ்ரெய்னில் அலுவலகங்கள் இருக்கின்றன. மேலும் எல்.ஐ.சி.,யின் ஏஜென்ட் எண்ணிக்கையையும் அதிகரிக்க அது திட்டமிட்டிருக்கிறது. இப்போது அதற்கு 12 லட்சம் ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் அதில் 30 சதவீதத்தை அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குழைவால், எல்.ஐ.சி.,யின் யூனிட் லிங்க் பாலிசி திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமான திட்டங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றம் குறித்து மக்களிடையே சரியாக புரிதல் தன்மை இல்லாததால், நாங்கள் இந்த திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். முன்பு 85 சதவீதமாக இருந்த யூலிப் திட்டங்கள் இப்போது 75 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டன என்றார் மெஹ்ரோட்டா. இந்திய இன்சூரன்ஸ் தொழிலில் இப்போதும் 55 சதவீத மார்க்கெட் ஷேர் எல்.ஐ.சி.,க்கு இருக்கிறது என்று சொன்ன மெஹ்ரோட்டா, ஹெல்த் பிளஸ் என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நாங்கள் 60,000 பேருக்கு விற்றிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்

No comments: