Friday, October 31, 2008

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகி 3 மாதங்களுக்குப்பின், இப்போது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இன்று நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கினார். அப்போது, இன்சூரன்ஸ் துறை சம்பந்தமான சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், முக்கியமாக, தனியார் இன்சூரன்ஸ் துறையில் இப்போது 26 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீடு, இனிமேல் 49 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.மத்திய அரசின் இந்த முடிவை இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. எனினும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்படுவதால் ஏராளமான முதலீடு இந்தியாவுக்குள் வரும் என்றும் அது, நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக இதைத்தான் இடதுசாரி கட்சிகள் எதிர்த்து வந்தார்கள்.மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொண்டபின்புதான் மத்திய அரசால் இன்சூரன்ஸ் துறையில் மாற்றங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

No comments: