Monday, January 18, 2010

நீதிக்குத் தலைவணங்கு

பொங்கல் நாளில், கேட்டாலே மனதுக்கு இனிமை தரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, "இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகமும் அரசு அதிகார அமைப்புதான். எனவே அந்த அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உட்பட்டதுதான்' என்று ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு தனிச்சலுகை பெற்றிருப்போர் யாருமில்லை என்பதும் இன்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்காக சுபாஷ் சி. அகர்வால் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி நீதிமன்றப் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். "மற்ற நீதிபதிகளுக்கு என்னென்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்புதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் உள்ளது. பணி விதிமுறைகளுக்கு உள்பட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய கடமை, தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் உள்ளது' என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதைத் தலைமை நீதிபதி அலுவலகத்தால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததைப் போலவே, தற்போது உறுதி செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம். நீதிக்குத் தலைவணங்க நீதியே தயங்குகிறது.

ஓர் அமைச்சர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என்றால் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டியது நீதித்துறைதான். ஆனால் அந்த வழக்கை நடத்தும் நீதிபதி, அந்த அமைச்சர் சட்டவிரோதமாகத் தரும் நிலபுலன்களை ஏற்றுக்கொண்டால், சமூகத்தில் மறைக்கப்பட்ட ஓர் அநியாயம், நீதிமன்றத்திலும் அம்பலப்படாமல் போகும். மக்கள் கண்முன்பாக வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் அந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களது ஊழல் சொத்துக்கு நியாயப் பூச்சு கிடைத்துவிடும்.

ஆகையால்தான், அரசியல் மற்றும் அரசுத் துறையில் ஊழல் இருந்தாலும், அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதித்துறை மந்தணங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான், நீதிபதிகள் சொத்துவிவரங்களை அறிவிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கின் நோக்கம். மேல்முறையீடுகளை கைவிட்டு, நீதிக்குத் தலைவணங்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமாக இருக்க முடியும்.

ஒரு முக்கிய பதவியில் இருப்பவரோ, பொதுவாழ்க்கையில் இருப்பவரோ, ஏன் அரசு ஊழியரோ ஆண்டுதோறும் தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை வெளியிட்டால்தான் அவரது வருமானத்துக்குள் அவர் வாழ்ந்திருக்கிறாரா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க முடியும்.

இந்தச் சொத்துகளைத் தங்கள் உறவினர்கள் பெயரில் பினாமியாக வாங்கிப் போடுவார் என்ற வாதம் உண்மைதான். அப்படியான புகார்கள் எழும்போது, அந்த நபரின் தொழில் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் அரசு ஆய்வு செய்து வருமானத்துக்கு மீறிய சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். மேலும், தங்கள் பெயரில் இல்லாத சொத்துகளைத் தராமல் ஏமாற்றுவது எளிது என்பதால், இதில் மிகச் சிலர் தவிர பெரும்பாலானோர் பினாமி பெயரில் சொத்து வாங்குவதில் ஈடுபட மாட்டார்கள். லஞ்சப் பணத்தை வெளிப்படையாகச் செலவிட முடியாது என்ற நிலைமை ஏற்படும்போதுதான் லஞ்சத்தின் கோர நகங்கள் கூர்மழுங்கும்.

தலைமை நீதிபதி அலுவலகம் இந்தத் தீர்ப்பை எந்த மனக்கசப்பும், முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்கும்போதுதான், இந்தச் சட்டத்தின் அடிநாதம் ஒவ்வொரு அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் வரை ஒலிக்கும். அர்த்தமுள்ளதாக மாறும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்கூட நிறைய மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை. நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, அவர்கள் நல்ல நீதிபதிகளைத் தேடிப்போய் தேர்வு செய்வதில்லை என்பதாலும், தங்கள் முன் இருக்கும் நீதிபதிகளில் சிலரைப் பரிசீலிக்கிறார்கள் என்பதாலும்தான் இன்றைய நீதித்துறையின் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகளின் குழு பரிசீலனை செய்வதற்கான பல நீதிபதிகளைத் தேர்வு செய்ய ஒரு நீதித்துறை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்து நீதிபதிகளை நியமிக்கக் குறைந்தது 40 பேரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும்கூட, நீதித்துறை தலைவணங்கி ஏற்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து உடையவராகத் தலைமை நீதிபதியே இருக்கிறார். இவ்வாறு நீதிபதிகள் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்தால் அவர்கள் தொழில்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பது அவரது கருத்து.

கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவது சேவை என்றாலும்கூட, பணியை முடித்து வெளியேறும்போது வேஷ்டியை உதறிக் காட்டுவது தனது நேர்மையை சந்தேகிப்பதாக ஒருவர் கருதினால், அந்தச் சோதனைக்கு உடன்பட மறுத்தால், அல்லது தங்கள் வாதத்தை நியாயப்படுத்தினால் அதுவே அத்தகையோருக்கு களங்கமாக அமைந்துவிடும். அதைப் போன்றதுதான், நீதிபதிகள் தங்கள் சொத்துகளைக் காட்ட வேண்டியதில்லை என்கிற வறட்டு கெüரவப் பிரச்னையும் நீதித்துறை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நீதித்துறை புரிந்துகொள்வது அவசியம்.
நன்றி : தினமணி

No comments: