Monday, January 18, 2010

லால் சலாம்!

ஒரு மாமலை சாய்ந்துவிட்டது; இனி எதிர்காலம் சூன்யமாகத் தெரிகிறது; அடுத்து என்ன, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் மரணத்தின் துயரமும் இழப்பின் தாக்கமும் குறைந்துவிடவும் செய்யாமல் நிகழ்ந்திருக்கிறது ஜோதிபாசுவின் மரணம். கடந்த பல மாதங்களாகவே எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் என்றாலும், அந்த மாமனிதரின் இழப்பு என்பது இந்திய அரசியலில் ஈடு செய்ய முடியாத ஒன்றுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா என்ன?

மேற்கு வங்காளம் பல இடதுசாரி சிந்தனையாளர்களை இந்திய அரசியலுக்கு வழங்கி இருக்கிறது. பூபேஷ் குப்தா, கீதா முகர்ஜி, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, ஹிரேன் முகர்ஜி, ஏ. பி. பரதன் என்று ஒரு மிகப் பெரிய பட்டியல் நீள்கிறது. மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவருமே தலைசிறந்த பாராளுமன்றவாதிகளாகவும், கம்யூனிச சித்தாந்தவாதிகளாகவும் திகழ்ந்தனரே தவிர, பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்த அடிப்படை ஜனநாயக அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்களா என்றால் கிடையாது. அதுதான் ஜோதிபாசுவின் பலம்.

அரசியலையும் கொள்கைப் பிடிப்பையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தத் தெரிந்திருந்ததால்தான் ஜோதிபாசுவால் 23 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராகத் தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

ஜூலை 8, 1914-ல் பிறந்த ஜோதிபாசுவின் வாழ்க்கையில் இடதுசாரி இயக்கச் சிந்தனையின் தாக்கம் அவர் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறச் சென்றபோது ஏற்பட்டது. ரயில்வே தொழிலாளர் யூனியன்தான் ஜோதிபாசுவின் தொழிற்சங்க ஈடுபாட்டிற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருந்தது. அவரது முதல் சட்டப்பேரவை பிரவேசமே ரயில்வே தொகுதியிலிருந்துதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. டாக்டர் பி.சி. ராய் தலைமையிலான காங்கிரஸ் அரசு பலமாக அமைந்திருந்த காலத்தில், ஜோதிபாசு எதிர்க்கட்சி உறுப்பினராக எழுப்பிய விவாதங்களும் நடத்திய போராட்டங்களும் ஏராளம், ஏராளம்.

1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்திய நிறுவனத் தலைவர்களில் ஜோதிபாசு முக்கியமான பங்கு வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய அரசியல்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஜோதிபாசுவும் ஒருவர்.

1969-ல், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய அஜாய் முகர்ஜியின் வங்காள காங்கிரஸýடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தனர். அஜாய் முகர்ஜி முதல்வராகவும் அந்த அமைச்சரவையில் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர். அந்தக் கூட்டணி ஆட்சி ஏன் கவிழ்ந்தது தெரியுமா? உள்துறை அமைச்சரான ஜோதிபாசு தன்னை செயல்படவிடுவதில்லை என்று முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சட்டப்பேரவையில் முதல்வரான தானே, தர்னா இருக்கப் போவதாக அறிவித்த கேலிக்கூத்துகள் மேற்கு வங்க சரித்திர நிகழ்வுகள்.

ஜோதிபாசுவின் வெற்றிக்குக் காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை சாதுர்யமாக ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக ஓர் இடதுசாரிக் கூட்டணி அரசை நடத்தியது. இன்னொரு காரணம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாக நிலச் சீர்திருத்தங்களையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வையும் முறையாகச் செய்து முடித்தது. இவையாவையும்விட, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்சியை வலுப்படுத்தியதும் கட்சி பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும்தான்.

1996-ல் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசில் பங்கு பெறாதது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியது மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. ஆட்சியில் பங்குபெற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு ஒப்புக்கொண்டிருந்தால், ஜோதிபாசு இந்தியாவின் முதல் இடதுசாரி பிரதமராகியிருப்பார். ஆனால் கட்சித் தலைமையின் விருப்பத்தை அரசியல்குழு ஏற்கவில்லை. கட்சியின் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதால் என்ன பயன் என்று அரசியல் குழு கருதியது. கட்சியின் முடிவை கனத்த மனதுடன் தலைவணங்கி ஏற்ற தலைவர் ஜோதிபாசு. இன்னொரு தலைவர், இன்னொரு கட்சி இப்படியொரு சவாலை எதிர்கொள்ளுமா?

சரியான நேரத்தில் ஜோதிபாசு தன் பதவியைத் துறந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்னமும் சிறிது காலம் கடத்தியிருந்தால், அவரது இயலாமை அவரைக் கேலிப் பொருளாக்கி ஜோதிபாசு என்கிற மிகப்பெரிய ஆளுமையைத் தகர்த்திருக்கும். ஜோதிபாசு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி வலுவிழக்கத் தொடங்கி இருப்பதில் இருந்தே இந்தத் தனிமனிதரின் செல்வாக்கும் ஆளுமைத் திறனும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நாளை ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்த அணிவகுத்து நிற்கப்போகும் செஞ்சட்டைப் படையினரின் முன்னால் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கும். இனிமேல் இடதுசாரி இயக்கத்தை வழிநடத்தவும், பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, ஜாதிய, மத சக்திகளால் கவரப்பட்டிருக்கும் அடித்தட்டு மக்களை வழிநடத்தவும் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்கிற கேள்விக்குறிதான் அது.

ஜோதிபாசுவின் மரணம் இடதுசாரி இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமையுமேயானால் மட்டுமே அவர் குறிப்பிட்ட வரலாற்றுப் பிழை திருத்தப்படும்.
நன்றி : தினமணி

No comments: