ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும்போது "ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும்' என்ற பழமொழி கூறுவதுண்டு.
கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கல்விச் சேவையை அளித்து வரும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முன்வராதது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் தாயின் செயலுக்கு ஒப்பானது என்கிறார்கள் அரசு உதவிபெறும் கல்வி நிலையத்தினர்.
தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கல்விக் கட்டண வசூல், ஆசிரியர், அலுவலர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் ஆகியவற்றைத் தனியார் கல்வி நிலையங்கள் தாங்களே முடிவுசெய்கின்றன.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனம் அரசு வழிகாட்டுதலிலேயே நடத்தப்படுகிறது.
ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பதைத் தவிர அரசுப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் மற்ற சலுகைகள் எதுவும் உதவிபெறும் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.
எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் எண்ணிக்கையைக் கூடுதலாக்குவது ஆகியவற்றை அந்தந்தக் கல்வி நிலைய நிர்வாகங்களே செயல்படுத்த வேண்டியுள்ளது.
புதிய ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை பெற்றோர்}ஆசிரியர் கழகத்தின் மூலம் அளிக்கும் கட்டாயமும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.
அதன்படி, பெற்றோர்}ஆசிரியர் கழகத்துக்கு மாணவ, மாணவியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் மிக மிகக் குறைவேயாகும். இதைவைத்து மாதா மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இயலாத காரியம் என்பதும் கல்வி நிலைய நிர்வாகிகள் கருத்து.
தற்போது இலவசக் கல்வித் திட்டத்தால் மாணவர்களிடையே எவ்விதக் கல்விக் கட்டணத்தையும் அப்பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது.
அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையே. குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பிலோ அல்லது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் கூட்டாகச் சேர்ந்தோ, சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தனிப்பட்டவராலோ ஆரம்பிக்கப்பட்டு பின் அரசு உதவி பெற்றவைகளாக அவை மாறியிருப்பதே உண்மை.
இதுபோன்று மாநிலத்தில் 5048 ஆரம்பப் பள்ளிகளும், 1643 தொடக்கப் பள்ளிகளும், 630 உயர்நிலைப் பள்ளிகளும், 1067 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் விதி விலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுபடத் தொடங்கி உள்ளன. ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை இன்றும் சேவை நோக்கம் குறையாமல் செயல்படுகின்றன. இவற்றில் பல, நூற்றாண்டு கடந்தவையாகவும், பாரதியார் போன்ற மகாகவிகள் பணிபுரிந்த பெருமைக்குரியதாகவும் திகழ்கின்றன.
இதுபோன்ற பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்ததைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை மட்டும் ஆரம்பத்தில் இருந்தது போலவே உள்ளது.
குறிப்பாக, நூலகர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளின் நூலகங்கள் சிதிலமடைந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.
இவ்வகைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் காலியிடத்தைக் கூட அந்தந்தப் பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் நிரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் கல்வித்துறை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மாணவர்களிடம் மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிதி வசூலிக்காவிட்டால், கல்வி நிலையத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அக்கல்வி நிலைய நிர்வாகிகள்.
தற்போது இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் பள்ளிக்கும் பல லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. எனினும் அதற்கான நிதியைக் கூட அரசு அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கோருகிற நிலை ஏற்படுகிறது.
அரசியல்வாதிகளின் உதவியைக் கோரும்போது, அவர்களது சிபாரிசை ஏற்கும் கட்டாயம் ஏற்படுவதால், மாணவர் சேர்க்கையின்போது நியாயமாக நடக்கமுடியவில்லை என்பதும் ஆசிரியர்கள் கூற்று.
எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளது சேவை நோக்கம், அதன் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாவது அரசு சிறப்பு நிதியை அளிக்கவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது வேண்டுகோள்.
சேவை நோக்கில் முழுமையாகச் செயல்பட முடியாமலும், வர்த்தக ரீதியில் மூழ்காமலும் ஊசலாட்டத்தில் தள்ளாடும் பாரம்பரியமிக்க அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு தன் உதவிக்கரத்தை நீட்டுவது "தந்தை மகனுக்காற்றும் கடமை' போன்றதே!
கட்டுரையாளர் :வ.ஜெயபாண்டி
நன்றி : தினமணி
Sunday, January 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இன்றைய கால கட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சேவை நோக்கில் செயல் படுபவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.அப்பள்ளிகள் இயங்குவது புதிய ஆசிரியர்களை நியமிக்கும் போது கிடைக்கும் லஞ்ச பணத்துக்காக மட்டுமே. . .
ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தின் விலை 5 லட்சம்.இளநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு 7.5 லட்சம்.
இதில் பெரிய கொடுமை அந்த ஆசிரியர்கள் தகுதி அடிப்படையிலும்,பணி அனுபவத்தின் அடிப்படையிலும் பெற வேண்டிய பணி உயர்வினை அந்தந்த நிர்வாகம் கொடுக்காது.அதற்கு பதிலாக அந்த நிர்வாகத்தினரின் மாமா பையன்,பொண்ணு என சொந்தக்காரர்களுக்கே கொடுப்பார்கள்.
அதாவது சுதந்திர நாட்டில் அடிமைகள் போலவே அந்த ஆசிரியர்கள் வாழ வேண்டும்.
மேலும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் கற்பிக்கும் அந்த ஆசிரியர்களை எண்ணிப்பாருங்கள்.
எனவே தயவு செய்து சேவை..என பெரிய வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள்.
Post a Comment