Saturday, January 16, 2010

புத்தொளி பாய்ச்சிய புனிதர்!

ஜாதியிலே,​​ மதங்களிலே,​​ சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு,​​ புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற -​ அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர்.​ அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.

விவேகானந்தரைச் சான்றோனாக,​​ துறவியாக,​​ நாவலனாக,​​ தத்துவ ஞானியாக,​​ சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர்.​ இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு.​ ஊக்கமின்றி,​​ உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர்.​ முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு,​​ ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.

தன்னம்பிக்கையும்,​​ அச்சமின்மையுமே அவர் சொல்லிலும்,​​ செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன.​ ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன.​ ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' ​(சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி:​ 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார்.​ வலிமையே வாழ்வெனவும்,​​ வலியின்மை மரணமெனவும் முழங்கினார்.​ ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' ​(தொகுதி:​ பக்.160) என வலியுறுத்தினார்.​ உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார்.​ மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல்,​​ அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.

அறியாமை!​ தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை;​ எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க,​​ அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும்,​​ ""முடியாது,​​ என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.​ நீங்கள் எல்லையற்றவர்கள்.​ காலமும்,​​ இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை.​ நீங்கள் எதையும் செய்ய முடியும்.​ எல்லாம் வல்லவர் நீங்கள்'' ​(பக்.300) எனவும் கூறினார்.

தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின்,​​ இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர்.​ நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும்,​​ அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர்.​ ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.​ வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.

விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது,​​ செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர்.​ ஆனால் விவேகானந்தர்,​​ தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார்.​ தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!

""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.​ அவர் எளிய வாழ்க்கை முறையையும்,​​ உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும்.​ குறிப்பாக,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர்,​​ கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார்.​ ஆனால்,​​ படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை.​ சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து,​​ நீந்திப் பாறையை அடைந்து,​​ தியானம் மேற்கொண்டார்.

அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும்,​​ உள்ளத்திண்மையையும்,​​ மனத்தன்மையையும்,​​ மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர்.​ 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய,​​ கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது.​ அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும்,​​ தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய,​​ "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.

""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி,​​ கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது,​​ அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது.​ அவர் வலிவும்,​​ பொலிவும்,​​ கருவிழிகளும்,​​ தோற்றமிடுக்கும்,​​ சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும்,​​ அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க,​​ ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன.​ அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' ​(பக்.5).

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும்,​​ தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார்.​ தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர்.​ அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும்,​​ அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு,​​ ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின்,​​ உங்களை தூக்கிலோ,​​ தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் ​(தொகுதி:2 பக்.27).

மதத்துக்கும்,​​ மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர்.​ ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார்.​ இக்கருத்தை அறுதியிடும் வண்ணம்,​​ "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார்.​ ஆன்மிகம் என்பது வாழும் நெறி;​ அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து.​ இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.

ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான்.​ அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான்.​ அம் மாணவன் துறவு பூணக்காரணம்,​​ அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர்,​​ முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி,​​ அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.

மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர்.​ மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில்,​​ விவேகானந்தரின் பணிச்சிறப்பும்,​​ பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன;​ பெரிதும் வேண்டப்படுகின்றன.​ மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில்,​​ மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.

""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது.​ இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.​ ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி,​​ கொள்கை வெறியை வளர்க்கிறது;​ சில நேரங்களில் அவ்வெறி,​​ எல்லை கடந்தும் போய்விடுகிறது.​ மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது.​ எனவே,​​ எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' ​(தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மட்டுமன்றி,​​ வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும்,​​ மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார்.​ "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில்,​​ ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.

விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை.​ உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர்.​ ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே.​ பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால்,​​ நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' ​(தொகுதி:​ 2 பக்.367)

ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர்.​ மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி;​ கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று;​ சதியால் நேர்ந்தது என முரசறைந்தார்.​ ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' ​(தொகுதி:​ 6 பக்.317) என வேதனைப்பட்டார்.

இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார்.​ இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர்.​ ""உங்கள் சமயம் மகத்தானது,​​ ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர்.​ வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க,​​ மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' ​(தொகுதி:​ 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.

விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர்.​ அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர்.​ "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர்.​ அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன.​ அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல்,​​ அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது.​ ""ஒரு விவேகானந்தர் என்ன,​​ காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.​
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி

1 comment:

பிரகாஷ் said...

உங்களுக்கு நூறு ஓட்டு போட வேண்டும் என்று ஆசையாக உள்ளது.. என்ன ஒரு வார்த்தை வீச்சு. மறுபடியும் மறுபடியும் தினரடிக்கிரீர். தொடருங்கள் நண்பரே. எங்களுக்கும் நீங்கள் தான் ஊக்கம். தொடரட்டும் உங்கள் நற்பணி.
நன்றி.