Friday, December 4, 2009

விபரீதப் பாதையில் பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்களின் போக்கு குறித்து அண்மையில் வெளியான சில செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. அடிப்படைக் கல்வியை ஆர்வத்தோடு பயில வேண்டிய மாணவர்கள் சிலர், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு போலீஸில் சிக்கியிருக்கிறார்கள்.

மதுரை சுப்பிரமணியபுரம், விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சைக்கிள்களைத் திருடியதாக 22 மாணவர்கள் அண்மையில் பிடிபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே சைக்கிள்களைத் திருடி, அவற்றை வேறு பள்ளிகளின் மாணவர்களுக்கு விற்றிருக்கிறார்கள். இவ்வாறு திருடப்பட்ட சைக்கிள்கள் அனைத்தும், மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள்.

சினிமா பார்க்கவும், ஆடம்பரச் செலவு செய்யவும் பணம் தேவைப்பட்டதால், சைக்கிள்களைத் திருடி விற்றதாக போலீஸ் விசாரணையில் மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து இந்த மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கருணை உள்ளத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள் மதுரை போலீஸôர். திருட்டுப் புகார் தொடர்பாக மாணவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. அவர்களின் பெற்றோரை வரவழைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அத்துடன் நிற்காமல், மாணவர்கள் வழிதவறிச் செல்வதைத் தடுக்க பள்ளிகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் போலீஸôர் தெரிவித்திருக்கிறார்கள்.

இது இப்படியிருக்க, செங்கல்பட்டு அருகே உள்ள படாளத்தைச் சேர்ந்த நர்ஸ் விஜயபானு அண்மையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் பிளஸ் 2 மாணவர் சாண்டில்யன். இந்தச் சம்பவத்தில், தனது நண்பருக்கு உதவுவதாகக் கருதி, அந்தப் பெண்ணின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதாகப் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார் சாண்டில்யன்.

பள்ளி மாணவர்களின் இத்தகைய செயல்கள், பிற்காலத்தில் சமூகவிரோத மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் அளவுக்கு அவர்களை விபரீதப் பாதையில் கொண்டு சென்றுவிடும் அபாயம் இருப்பதை மறுத்துவிட முடியாது.

எனவே, இத்தகைய போக்கிலிருந்து மாணவர்களைத் திசை திருப்பி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இந்தியாவில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்றும் அரசு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 100 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். அதே நேரத்தில் மாணவர்களின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளிலும் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

மாணவர்களின் படிக்கும் ஆர்வம், சிந்தனைத் திறன், படைப்புத் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

அந்த வகையில், மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் நூலகத்தை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் விதத்திலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்திருக்கிறது. கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

அத்துடன், நமது கல்வியாளர்களும் பிரமுகர்களும் அடிக்கடி வலியுறுத்தி வருவதைப் போல பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். ஒழுக்கத்தின் மேன்மை குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்து வெளியேறும் மாணவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த விஷயத்தில் பெற்றோர்களின் பங்கைத் தட்டிக்கழிக்க முடியாது. தங்கள் பிள்ளைகளின் சேர்க்கையை (நட்பு வட்டாரம்) கண்காணித்து, தவறாக வழிநடத்தும் நண்பர்களை "கழற்றிவிடும்' வகையில் தொடர் முயற்சிகளைக் கண்டிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தான், நன்கு கல்வி கற்றதால்தான் உயர்ந்த பதவியான பிரதமர் பதவிக்கு வர முடிந்தது என்று பெருமையோடு கூறுகிறார் நமது பிரதமர் மன்மோகன் சிங். அத்தகைய கல்வியின் மேன்மையை தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் உணர்த்த வேண்டும். அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்.
கட்டுரையாளர் :என். ஆர். ரவீந்திரன்
நன்றி : தினமணி

2 comments:

kggouthaman said...

Very excellent article. Thought provoking. Something needs to be done to impart moral values to students.

பாரதி said...

kggouthaman வருகைக்கு நன்றி