Thursday, November 12, 2009

அத்வானியின் பலவீனம்...

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் லால் கிருஷ்ண அத்வானி 82 வயதைப் பூர்த்தி செய்துவிட்டார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் இருந்து வந்த அதிகார மோதலுக்கு சுமுகத் தீர்வு கண்டு அத்வானிக்குப் பிறந்த நாள் பரிசு அளித்துள்ளார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ்.

பிறந்த நாளை விமரிசையாக அத்வானி கொண்டாடியபோதிலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எப்போது ராஜிநாமா செய்வது என்பதுதான் அவரிடம் ஏற்பட்டுள்ள புதிய கவலை. அந்த அளவுக்கு அவருக்கு இப்போது கட்சியில் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐந்தாண்டுகள் பூர்த்தி செய்வதே தனது விருப்பம் என்று அத்வானி ஏற்கெனவே ஒருமுறை கூறியிருந்தார். ஆனால், இப்போது அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேறு ஒருவருக்கு அந்த இடத்தை விட்டுத்தர அவர் தயாராகிவிட்டார்.

அடுத்த ஆண்டின் முற்பகுதியில் பாஜகவின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அத்வானி தமது பதவியை ராஜிநாமா செய்யக்கூடும் என்று தெரிகிறது. அதாவது அடுத்த தலைவர் யார் என்பதை அவரே உறுதி செய்துவிட்டு, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் புதிய தலைவரைப் பதவியில் அமர்த்திவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

2009 பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அத்வானி தான் பிரதமர் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் அத்வானி தமது பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அவரைச் சமாதானப்படுத்தி, ராஜிநாமா கடிதத்தைத் திரும்பப் பெற வைத்தனர். அப்போது அவர் ராஜிநாமா செய்திருந்தால் இன்று கட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அவரும் ஒரு காரணகர்த்தாவாக இருந்திருக்க மாட்டார்.

நீண்டகாலமாகப் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்துவரும் அத்வானிக்கு, இப்போது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்து வருகிறது. அதுமட்டுமல்ல; அவரது மனம் புண்படும்வகையில் பலரும் பேசி வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் அத்வானிக்கு முக்கிய பங்கு உண்டு என்பதுதான் அவரது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த சம்பவம் "தேசிய அவமானம்' என்று இப்போது அத்வானி கூறி வருகிறார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்ப்பாளர்களோ அத்வானி நடத்திய ரதயாத்திரைதான் பாபர் மசூதி இடிப்பில் போய் முடிந்தது என்கின்றனர்.

மற்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர்போல அத்வானி அரசியலை ஆதாயமாக வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டார் என்று யாரும் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் போல்தான் அவர் இன்றும் இருந்து வருகிறார்.

எப்படியாவது பிரதமர் பதவியை எட்டிவிட வேண்டும் என்று அத்வானி துடிப்பதைத்தான் கட்சியினரும் சங்கப் பரிவாரங்களும் எதிர்க்கின்றன. முன்னணியில் உள்ள தலைவர்கள் சிலர் கூட பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆனால், அத்வானி விஷயம் அப்படியல்ல; 1995-ல் வாஜ்பாய் பிரதமராவதற்கு அத்வானி வழி ஏற்படுத்தினார். 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் அத்வானி தான் என்று பாஜக பிரதானப்படுத்தி பிரசாரம் செய்தது. அந்தத் தேர்தலின்போது "எனக்குப் பதவி ஆசை இல்லை' என்று சோனியா வெளிப்படையாகச் சொன்னதுபோல் அத்வானியால் கூற முடியவில்லை.

அத்வானி செய்த ஒரே குற்றம், முகமது அலி ஜின்னாவை பாராட்டிக் கூறிய வார்த்தைகள்தான். பாஜகவின் வளர்ச்சியை விரிவுபடுத்தும் நோக்கிலும், முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவுமே அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் சொன்ன இடமும், நேரமும் சரியில்லை. அவரது கணிப்புப் பொய்த்துப் போனது மட்டுமல்ல; அதற்கான விலையையும் அவர் கொடுக்க வேண்டியிருந்தது.

அத்வானியின் பலவீனம், கட்சியின் மத்தியக் குழுவையே பலவீனப்படுத்திவிட்டது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே தலைமைமீது கடும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன. அதன் விளைவுகளை நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே இருந்துவந்த மோதல்களுக்கு இப்போது சமரசத் தீர்வு ஏற்பட்டுவிட்டாலும், பாஜகவில் அரசியல் அதிகாரத்துக்கும் பணபலத்துக்கும் இடையிலான சண்டையே பிரதானமாக இருந்தது வெளிப்படை. இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும்போது அதைத் திறமையாகச் சமாளிக்கும் அல்லது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் நல்ல தலைமை இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஒருபுறம் அத்வானியின் எதிர்ப்பாளர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சிக்கின்றனர். மறுபுறும் பாஜகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். துடிக்கிறது.

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் நீக்கம் தொடர்பான விஷயத்தைக் கையாண்ட விதமே பாஜக தலைமை பலவீனமடைந்துவிட்டதற்குச் சாட்சியாகும். "ஜின்னா' பற்றி ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால், அவர் எழுதிய புத்தகத்தைப் படித்துப் பார்க்காமலே, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமலே, அவரை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டது பாஜக தலைமைப் பீடம். சங்கப் பரிவாரங்களைத் திருப்திப்படுத்தவே இத்தகைய அவசர நடவடிக்கையில் கட்சித் தலைமை இறங்கியது போலும்! இதேபோன்ற அவசர கதியில்தான் வசுந்தரா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதே நிலை அத்வானிக்கும் ஏற்படும் சூழல் இப்போது உள்ளது.

பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசி வருகிறார். சுஷ்மா ஸ்வராஜ், ஆனந்த் குமார், அருண் ஜேட்லி, வெங்கைய நாயுடு ஆகியோருக்குக் கட்சித் தலைவர் பதவி தரப்படமாட்டாது என்றும் அவர் கூறிவருகிறார். இதுவரை பாஜகவில் பின்னணியாக இருந்து செயல்பட்டு வந்த சங்கப் பரிவாரங்கள், இப்போது நேரிடையாகவே கட்சி விவகாரங்களில் தலையிட ஆரம்பித்துவிட்டன.

பாஜகவில் அத்வானி மிகப்பெரிய தலைவர். கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். ஒருகாலத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 2 அல்லது 3 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இன்று அந்தக் கட்சி 181 இடங்களை வென்று சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக நிலைபெறச் செய்தவர் அத்வானிதான். கடந்த 50 ஆண்டுகளில் கட்சி பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தபோதிலும், கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றவர் அத்வானிதான்.

ஒருகாலத்தில் சங்கப் பரிவாரங்களின் வளர்ச்சிக்குச் சிறந்த கருவி இவர்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அடையாளம் காணப்பட்டவர் அத்வானி. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அதேநேரம் பாஜகவையும் செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சியாக உருவாக்கித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர் அத்வானி.

ராஜஸ்தானில் சென்ற முறை காங்கிரûஸ வீழ்த்தி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் ஆட்சி அமைந்தது குறித்து பாஜக பெருமைப்படத்தான் வேண்டும். கட்சிக்குள்ளிருந்தும், வெளியேயும் நெருக்கடி ஏற்பட்டபோதிலும் அவர் அதைச் சமாளித்து 5 ஆண்டு முதல்வராக நீடித்தார். இந்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக வசுந்தராவை அரசியல் துறவும் மேற்கொள்ளச் சொல்வது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது.

ஜஸ்வந்த் சிங் வெளியாள்போலத் தோன்றினாலும் பாஜகவை ஆதரித்து அதன் வளர்ச்சிக்கு மறைமுகமாகப் பாடுபட்டவர்களில் அவரும் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் தேசிய ஜனநாயக முன்னணி உருவாக அவரும் ஒரு காரணமாக இருந்தார் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது.

ராஜ்நாத் சிங் கட்சித் தலைவரானபோதிலும் அவரால் கட்சிக்குப் புத்துயிரூட்ட முடியவில்லை. அவரால் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியவில்லை. அவர் வகிப்பது அலங்காரப் பதவிதான். கட்சியைப் பற்றி அடிக்கடி குறைகூறிப் பேசிவரும் அருண் செüரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூட அவரால் முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியில் உள்ளதுபோல் கோஷ்டிப்பூசல் இல்லாமல் பாஜக "தனித்துவம்' பெற்ற கட்சியாக, அனைவரும் மதிக்கப்படும் கட்சியாக மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. பாஜகவில் தலைவர் ஒருவர்தான் அதிக அதிகாரம் படைத்தவர். அதில் உள்ள அனைவரும் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற நிலை மீண்டும் ஏற்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது.

எந்த ஓர் அரசியல் கட்சியும் பலமாக இருக்க வேண்டுமானால் கட்டுக்கோப்பு இருக்க வேண்டும். கோஷ்டிப்பூசல் இருக்கக்கூடாது. கட்சித் தலைமையை எதிர்த்து விமர்சனங்கள் வெளிப்படையாக எழக்கூடாது. காலங்காலமாக கட்சியின் வளர்ச்சிக்காகத் தலைவர்கள் பாடுபட்டு வந்ததால்தான் இன்று கட்சி தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அப்படியில்லாமல் தலைமைக்கு எதிராக எதிர்ப்புகளும், விமர்சனங்களும் தொடருமானால் அக்கட்சி தனித்தன்மையை இழந்துவிடும். இதை பாஜக உணர்ந்து செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

No comments: