படிப்பு, வேலை, திருமணம் என ஏதேனும் ஒரு தொடர்புடன் நகரங்களை நாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால், 20 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த பல நகரங்கள் 150 கிலோமீட்டரையும் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.
இடம்பெயரும் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.
இருப்பினும் மக்கள்தொகையில் உலகின் கவனத்தை ஈர்த்துவிட்ட நம் நாட்டில், பயணிகளின் மிகுதியால் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கிச் செல்லும் நிலை இன்னும் தொடர்கிறது.
சென்னை நகரில் மட்டும் தினந்தோறும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் ஏறத்தாழ 4 லட்சம் பேர். தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமாகும்.
புதுவித இருக்கைகள், குளிர்சாதன வசதிகள், குறிப்பிட்ட நிறுத்தங்கள் என பலவகைப் பேருந்துகளை இயக்கிவரும் அரசு, கோடிகளைச் செலவழித்து ஆயிரக்கணக்கான பேருந்து நிலையங்களையும் கட்டியுள்ளது.
ஆனால், அவற்றில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மீதான அக்கறை மட்டும் ஆறு மாதங்களுக்குள் காணாமல் போய்விடுகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் இருந்து வரும் பல பேருந்து நிலையங்களில் பயணிகளின் குடிநீர்த் தேவையைத் தீர்க்க எவ்வித வசதியும் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
பருவமழைக் காலங்களில் நவீன மழைநீர் சேகரிப்புத் தொட்டியோ என வியப்பில் ஆழ்த்தும் வகையில் நீர்தேங்கி காட்சியளிக்கின்றன.
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் இருக்கும் குடிநீர்த் தொட்டிகள்கூட பயணிகள் முகம் சுளிக்கத்தக்க பராமரிப்பில் தான் இருக்கின்றன.
நன்றாக இருக்கும் சில குடிநீர்க் குழாய்களையும் பேருந்து நிலையக் கடைக்காரர்கள் குத்தகைக்கு எடுத்தாற்போல பயன்படுத்துகிறார்கள்.
அரசின் இந்த அலட்சியத்தால் பொதுமக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். அதுவும், புற்றீசலாய்ப் பெருகிவிட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் போலிகளின் ஆதிக்கத்தால் பயணிகள் கூடுதல் அவதியடைய வேண்டியுள்ளது.
சுகாதாரமற்ற தண்ணீர் பாட்டில்களைக் கண்டறிய ஒரு குறிப்பிட்ட நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுகாதார அதிகாரிகள் நடத்தும் சோதனையும், அதில் பறிமுதல் செய்யப்படும் பல்லாயிரக்கணக்கான போலி குடிநீர் பாட்டில்களைப் பற்றிய செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர் ச்சியாக சுகாதாரத்துறையினர் செய்யாமலிருப்பதுதான் போலிகளுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அது மீண்டும் ஏற்படாத வகையில் கண்காணிப்பை முடுக்கி விடாமல் இருப்பது மக்களுக்கெதிரான செயல்தான் என சிலர் ஆதங்கப்படுகிறார்கள்.
தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகைக் காலங்களில் நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வோருக்காக ஆயிரக்கணக்கான பேருந்துகளை அரசு இயக்குகிறது. அவற்றில் செல்ல பேருந்து நிலையத்துக்கு லட்சக்கணக்கான பயணிகள் வருகிறார்கள்.
குழந்தையும், பெண்களும் ஏராளமாய் வரும் இச்சூழலில் அவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுவதில்லை. தாகத்தால் தவிக்கும் குழந்தைகளுக்காக, குடிநீர் வாங்கக் கடைகளுக்கு ஓடும் பெற்றோர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.
இருக்கைகளைத் தேடிப் பிடிக்கும் அவசரத்தில் தண்ணீர் வாங்கத் தாமதிக்கும் இளம்பெண்களில் பலர் தாகத்துடனே பயணிக்கிறார்கள்.
பயணிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளை பேருந்து நிலையங்களில் ஏற்படுத்துவதிலும் உறுதிப்படுத்துவதிலும் ஏன் தயக்கம்? பேருந்து நிலையக் கடைக்காரர்களின் லாபம் குறையும் என்பதாலா?
சிலஆயிரம் மதிப்பிலான இலவசப் பொருள்களைக்கூட வீட்டுக்கு வீடு வழங்கி வரும் அரசு, பேருந்து நிலையங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, பயணிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது மிகச்சுலபம்.
தெருவுக்குத் தெரு "டாஸ்மாக்' கடைகளைத் திறந்து "குடி'மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசு, எல்லா பேருந்து நிலையங்களிலும் குடிநீர் வசதிகளைச் செய்து பொதுமக்களின் தாகத்தையும் தீர்த்து வைக்க ஏன் தயங்குகிறது?
தவித்த வாய்க்குத் தண்ணீர்கூடக் கொடுக்காத அரசும் ஆட்சியும் அன்றாடம் பயணிகளின் சாபத்துக்கு உள்ளாவது முதல்வருக்குத் தெரியுமோ தெரியாதோ... ""அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை'' என்று குறளோவியம் படைத்த அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்!
கட்டுரையாளர் : கோ. முத்துகுமார்
நன்றி : தினமணி
Thursday, November 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment