Wednesday, November 4, 2009

விளையாடாதீர்!

பொதுமக்கள் எல்லோரும் ஆத்திரம் கொள்கிற, முகம் சுளிக்கிற விஷயங்கள் தடை செய்யப்படும்போது அதற்காக யாரும் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை.

சென்னை மாநகரில் காற்றாடி பறக்க விடுவோர் மாஞ்சா கயிறு பயன்படுத்தினால் தண்டனை என்று அறிவித்தபோது மக்கள் வரவேற்றார்கள். ஏனென்றால் இந்த மாஞ்சா கயிறு, நடந்து சென்றவர்கள் கழுத்தை அறுத்து மரணத்தை ஏற்படுத்தியது. அடுத்து, மாநகரில் காற்றாடி பறக்கவிடக்கூடாது என்றார்கள். அப்போதும்கூட யாரும் எதிர்ப்புச் சொல்லவில்லை. காற்றாடியால் அண்மையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியவர்களை மாநகர போலீஸôர் விரட்டி அடித்தனர். நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறாக இவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததால் இந்த நடவடிக்கை என்று போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக எந்த நடைப்பயிற்சி அமைப்புகளும் இவ்வாறாகப் புகார் தந்ததில்லை. கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவோர் வழக்கமான பந்துகளைப் பயன்படுத்துவதில்லை. டென்னிஸ் பந்துகளையே பயன்படுத்துகின்றனர். ஆகையால், நடைப்பயிற்சி செய்வோருக்கு அடிபட்டு, காயம் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை, நடைப்பயிற்சி செய்த ஏதோ ஓர் அதிகாரி மீது பந்து பட்டதால் வந்த கோபமும் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கக்கூடும்!

சென்னை மாநகரம் மட்டுமல்லாது, தமிழகத்தின் அத்தனை மாநகராட்சிப் பகுதிகளிலும் விளையாடுவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன. அதையும் மீறி வெளியே விளையாட வரும் சிறார்கள், இளைஞர்கள் குறைவு. அவர்களிலும் மிகமிகக் குறைவு - விளையாட அனுமதிக்கும் பெற்றோர். எப்போதும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக உட்கார்ந்திருக்கும் சிறார்கள், இளைஞர்களில் விளையாட வெளியில் வருவோர் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருப்பார்கள். இந்நிலையில், இதற்கும் தடை, கட்டுப்பாடுகள் என்றால், அவர்கள் எங்கே போய் விளையாடுவார்கள்?

மாநகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் தங்கள் விளையாட்டுத் திடல்களுக்கு மிக உயரமான சுற்றுச்சுவர் எழுப்பி, பூட்டி வைத்துள்ளன. அவர்களது மாணவர்கள் மட்டுமே விளையாட முடியும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், வேலைநேரம் அல்லாத வேளையில், தங்கள் விளையாட்டுத் திடலில் நடைப்பயிற்சி செய்வோரிடம் மாதக்கட்டணம், உறுப்பினர் சந்தா வசூலித்து, அடையாள அட்டையையும் கழுத்தில் மாட்டிவிடுகின்றன. அவர்களுக்கு கல்வி மட்டுமல்ல, நடைப்பயிற்சியிலும் காசு கிடைக்கிறது. கேட்டால், "சமூக விரோதச் செயல்களைத் தடுக்கிறோம்' என்கிறார்கள்.

மாநகரங்களில் ஆங்காங்கே இருக்கும் காலிமனைகள்தான் பெரும்பாலும் அந்தந்தப் பகுதி சிறார்கள், இளைஞர்களுக்கு விளையாட்டுத் திடலாக இருந்தது. நிலமதிப்பு கோடிக்கணக்கில் உயர்ந்த பிறகு, ரெüடிகளின் ஆக்கிரமிப்புக்குப் பயந்து, காலிமனைகளிலும் சுவர் எழுப்பி மறைத்துவிடத் தொடங்கிவிட்டனர்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் விளையாடுவதற்கான பொதுஇடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் பல குடியிருப்புகளில் பொதுஇடம் என்பதே கிடையாது. சில குடியிருப்புகளில் பொதுஇடத்தைப் "பார்க்கிங்' பகுதியாக மாற்றிவிட்டு, வரைபடத்தில் பார்க்கிங் பகுதியாகக் காட்டப்பட்ட அடுக்குமாடியின் கீழ்தளத்தைக் கடைகளுக்கு வாடகைக்கு விட்டு, அதில் கட்டடத்தைப் பராமரிக்கிறார்கள்.

சென்னை மாநகரில் ராஜரத்தினம் ஸ்டேடியம், நேரு விளையாட்டு அரங்கம் போன்ற பல திடல்கள் இருந்தாலும் இவை பொதுமக்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நேரு உள்விளையாட்டரங்கம் என்பது கலைவிழாக்களுக்காகவே கட்டப்பட்டதோ என்றுதான் பல நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது.

டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து ஆகியவற்றுக்கு தனி கிளப்புகள் உள்ளன. அவற்றில் உறுப்பினர்கள் மட்டுமே விளையாட முடியும். ஸ்நூக்கர் போன்ற விளையாட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 20 தேவை.

இந்நிலையில் எங்கேதான் போவது? செலவில்லாமல் கடலோரம் கிரிக்கெட் விளையாடுவதைக்கூடத் தடை செய்தால் வேறு என்ன விளையாட்டை விளையாடுவது? விளையாடுபவர்களை விளையாடாதே என்று சொல்வது இவர்களுக்கு விளையாட்டாக இருக்கிறது.

விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு அல்லது உடல்ஆரோக்கியம் மட்டுமல்ல, மனஇறுக்கத்தைத் தளர்த்தும் ஒரே வழியும் விளையாட்டுதான். "...மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா' என்கிறார் மகாகவி பாரதி. கட்டணம் செலுத்தாமல் காவல்துறை தலையீடு இல்லாமல் விளையாட ஓர் இடமும் இல்லை என்றால் மாநகரம் வெறும் மா-நரகம்!
நன்றி : தினமணி

No comments: