பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகை ஒன்றரை லட்சம் கோடியாக அதிகரித்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
இதில் ஓசையின்றி ரூ.15 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பது புதிய செய்தியாகும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் வங்கிகளின் செயல்பாடும் பணப் பரிவர்த்தனையும் அதிகரிக்கத் தொடங்கின. தனியார் வங்கிகள் ஏராளமாகப் பெருகின. தொழில் வளர்ச்சிக்கு வங்கிக் கடனுதவி அதிக அளவில் தேவைப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் தனியார் வங்கிகள் தங்களது கடனுதவித் திட்டங்களை விரிவுபடுத்தின.
ஆனால் ஏழை மக்களும் சிறு தொழில்துறையினரும் வங்கிக் கடனுதவி பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. வீட்டுக் கடனுதவி என்பது மிகவும் அரிதாக இருந்தது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனியார் வங்கிகள் அனைத்தையும் அவசரச் சட்டம் மூலம் நாட்டுடைமையாக்கினார். காலப்போக்கில் நாட்டுடைமையின் நோக்கத்திற்கு மாறாக வங்கிகள் செயல்படத் தொடங்கின.
சில வங்கிகள், தங்களது இயக்குநர்கள் குழு உருவாக்கிய விதிமுறைகளின்படி கடன் வழங்கத் தொடங்கின. எனவே இயக்குநர்கள் குழுவினர் பரிந்துரைக்கும் தகுதியற்ற நபர்களுக்குக் கடன் வழங்க வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டது. இத்தகைய தகுதியற்ற நபர்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். எனவே வாராக்கடன் தொகை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகியது.
இது ஒருபுறம் இருக்க, வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்பெற்ற பல தொழிலதிபர்களும் மோசடிப் பேர்வழிகளும் அந்தப் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டனர். வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களிடம் சிறிதும் இல்லை. இத்தகைய மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் திறமை வங்கி நிர்வாகிகளிடம் இல்லை. அரசியல் பிரமுகர்களின் ஆதரவும் பக்கபலமும் இருந்ததால் வாராக்கடனை வசூலிக்க அவர்களால் இயலவில்லை. அத்துடன் நமது ஆங்கிலேயர் ஆட்சிகால வழிமுறையில் வந்த நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை ஆணைகள் நந்தி போல குறுக்கே வந்து நின்றுகொண்டன.
எனவேதான் இதற்குத் தீர்வுகாணவும் வாராக்கடனை வசூலிக்கவும் கடன் உத்தரவாதம் மற்றும் அமலாக்கச் சட்டம் இயற்றப்பட்டது. கடனைச் செலுத்தாதவர்கள் ஈடாக வைத்திருந்த சொத்துகளை விற்று ஓரளவுக்குப் பணத்தைத் திரட்ட இதன்மூலம் வழியேற்பட்டது. ஆனால் இதற்கும் வேறு உருவில் கேடு வந்து சேர்ந்தது. வங்கி நிர்வாகிகளின் உதவியுடன் ஒன்றுக்கும் உதவாத சொத்துகளை ஈடாகக் காட்டி பல மோசடிப் பேர்வழிகள் கோடிக்கணக்கில் கடன் பெற்றிருந்தனர். எனவே அந்தச் சொத்துகளால் எவ்விதப் பயனும் இல்லாமல் போய்விட்டது. மேலும் சிலர் அத்தகைய சொத்துகளை, போலி பத்திரம் தயாரித்து பல்வேறு வங்களிடமும் கடன் பெற்றிருந்தது வாராக்கடனை வசூலிக்க சென்றபோதுதான் வங்கி அதிகாரிகளுக்கே தெரியவந்தது.
அமெரிக்காவில் ஒரு பிரபல தனியார் வங்கி அண்மையில் திவாலானது அனைவருக்கும் தெரியும். கேட்டவர்களுக்கு எல்லாம் வீட்டுக் கடன் முதல் நுகர்வோர் கடன் வரை சகட்டுமேனிக்கு கடன் அளித்த அந்த வங்கி, இறுதியில் சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஏராளமானோர் வேலையிழந்தனர். இதனால் அன்றாட வாழ்க்கைப் பிரச்னையால் அல்லல்பட்ட அவர்கள் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே அந்தத் தனியார் வங்கி திவாலாகி மூடப்பட்டது.
இதை இந்தியாவில் உள்ள அரசுடைமை வங்கிகள் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். மோசடிப் பேர்வழிகளுக்கு கடனுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும்.
ஈடு வைக்கப்படும் அசையா சொத்துகள் அனைத்தும் வங்கிகள் அளிக்கும் கடனுக்கு இணையாகுமா என்பதை நன்கு ஆய்வுசெய்ய வேண்டும். அதன் பிறகே கடன் வழங்க முற்பட வேண்டும்.
கடன் மீட்புத் தீர்ப்பாயத்தை அதிகாரம் மிக்க அமைப்பாகத் தரம் உயர்த்த வேண்டும். அதிகரித்துவரும் வாராக்கடன்களை வசூலிக்க நாடு முழுவதும் பரவலாகப் பல்வேறு நகரங்களிலும் சமரசத் தீர்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும்.
வாராக்கடன் விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவ ஆலோசனை மையத்தை அமைக்க வேண்டும் என்று வங்கிகள் அனைத்துக்கும் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இதன்படி சில குறிப்பிட்ட வங்கிகள் மட்டும் ஆலோசனை மையத்தை அமைத்தன. இவ்வாறு தனி ஆலோசனை மையத்தை ஏற்படுத்துவதை விட கூட்டாக ஒரே மையத்தை தொடங்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டாக ஒரே ஆலோசனை மையத்தைத் தொடங்க இந்திய வங்கிகள் தரக்குழு நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்க விஷயமாகும்.
இந்த மையத்தில் 79 வங்கிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் பல வங்கிகளும் இதில் சேர உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் இத்தகைய மையங்கள் திறக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக மும்பையில் உள்ள இதன் தலைமை அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி சமரசத் தீர்வு மையம் செயல்படத் தொடங்கியது. கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவர்கள் இந்த மையத்தை அணுகினால் வங்கிகளும் கடன்தாரர்களும் ஏற்கக்கூடிய சமரசத் திட்ட யோசனை வகுத்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் விட கடனை திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற எண்ணம், கடன் பெற்றவர்கள் மனதில் உருவானால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வாராக்கடனை வங்கிகள் திரும்பப் பெற வழி ஏற்படும்.
கட்டுரையாளர் :டி . புருஷோத்தமன்
நன்றி : தினமணி
Wednesday, November 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment