Tuesday, November 17, 2009

உணவின் தேவையும் நீரில் சிக்கனமும்

நாளுக்கு நாள் உணவின் தேவை உயர்ந்து வருகிறது. உணவின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்பதால் அரிசி விலையும் பருப்பு விலையும் ஆகாயத்தைத் தொடுவதாக உள்ளன. நல்லவேளையாக தமிழ்நாட்டுக்குத் தேவையான வடகிழக்குப் பருவமழை தாமதமானாலும் தொடங்கியுள்ளது.

நீடிக்குமா? வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரிசாவிலும் வெள்ளத்தை ஏற்படுத்துமா? போகப் போகத் தெரியும். இங்கு பெய்யாமல் அங்கு பெய்தாலும் சரி. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அரிசி வருவது நின்றுவிடாது. தென்மேற்குப் பருவமழை பொய்த்தது பொய்த்ததுதான்.

அரிசி, கோதுமை இறக்குமதியுடன் பருப்பு இறக்குமதியும் தொடர்வது உண்மைதான். உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை இருப்பது உண்மை. இதற்கு நதிநீர் இணைப்பு சரியான தீர்வு என்று பலர் கருதுகிறார்கள். அப்படியே இணைத்தாலும், ஆந்திர அரசு நமக்குத் தேவையான நீரைத் தருமா? குறுக்கே குறுக்கே கர்நாடகம் அணைக்கட்டுகளைக் கட்டிக் காவிரிப் பிரச்னை நாற்பது ஆண்டுகளாக சந்தி சிரிக்கிறது. கிருஷ்ணர் வேஷம் போட்டு மக்களை மயக்கிய என்.டி.ஆர். சென்னைக்கு கிருஷ்ணா தீர்த்தம் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.

தமிழ்நாடு அரசு தந்த பணத்தைக் கொண்டு ஆந்திர மாவட்டங்களில் கால்வாய் வெட்டினார்கள். இன்று வெட்டிய கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. பெருமாள் கோயிலில் வழங்கும் துளசி தீர்த்தம்போல் வந்தது சிறுதுளிகள். இன்று பாலாறில் அணை ஒரு பிரச்னை. எதிர்க்கட்சிகள் சிலநாள் தூக்கிப் பிடித்தன. இலங்கைத் தமிழர் பிரச்னை வந்ததும் காவிரிப் பிரச்னை, பாலாறு பிரச்னைகளையெல்லாம் ஓசை இல்லாமல் அடங்கிவிட்டன.

இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைப்பது இயலாத காரியம் என்று ராகுல் காந்தி கைவிரித்துவிட்டதும் ஒருவிதத்தில் நல்லது. நதி இணைப்பில் எச்சரிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆமோதித்து விட்டார். ஒரு காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில், இருபது மாநிலங்களிலும் இருபது காவிரிப் பிரச்னைகள் - ஒவ்வொரு நதியும் அடுத்த மாநிலத்துக்கு வரும்போது - யார் குடுமி யாரிடம் இருக்கும், என்று பாரதப் பிரதமர் யோசித்துத்தான் இப்படிச் சொல்லியிருப்பார். அதற்குப் பின் சுற்றுச்சூழல், வன அழிப்பு, புதிய வாழ்விடம் என்ற பிரச்னைகள் ஏழைகளை மிகவும் பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் என்றால் அதிகம் உணவு. அதிகம் உணவுக்கு நதிநீர் இணைப்பு என்று ஒரு சுலபமான செய்தியைச் சொல்லும் அரசியல்வாதிகளும், பெரும்பாலான பொதுமக்கள் கருத்தும் ஒன்றாயுள்ளன. வேறு மாற்று யோசனைகளை நாம் சிந்திக்க மறுப்பது ஏன்?

முதலில் நீரில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோமா? விவசாயத் தேவைக்குப் பயன்பட்ட தண்ணீர் முக்கிய அணைகள் அல்லது நீர்நிலைகளிலிருந்து குடிநீருக்காகத் தொலைதூரங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இடையில் எத்தனை உடைப்புகள் என்ற கணக்கு ஒருவரைத் தலை சுற்ற வைக்கும். பல இடங்களில் புதிய குளங்களே தேவையில்லாத பாழ்நிலத்தில் உருவாகியுள்ளது.

தோராயமாக இப்படி உடைப்பு எடுத்து ஓடும் தண்ணீரை ஸ்ப்ரிங்க்ளர் அல்லது "ரெயின்கன்'
மூலம் 2 லட்சம் டன் மக்சாச்சோளம் அல்லது 2 லட்சம் டன் கேழ்வரகு அல்லது 1.5 லட்சம் டன் வெள்ளைச்சோளம் உற்பத்தி செய்யலாம். கோ - 3 தீவனப்புல் சாகுபடி செய்தால் 10,000 பசுமாடுகள் (கலப்பினம்) மூலம் 50,000 டன் பால் உற்பத்தி செய்யலாம். பொது இடங்களில் குழாய் இருக்கும்; டேப் இருக்காது. டேப் இல்லாமல் தினம் வழிந்தோடும் தண்ணீரைக் கொண்டு பார் அமைத்துத் துவரையோ, உளுந்தோ போட்டால் ஒவ்வொரு வழிந்தோடும் குழாய்களைச் சுற்றியுள்ள இடத்திலும் 10 மூட்டை விளைச்சல் எடுக்கலாம்.

மழைநீர் சேமிப்பு என்பது கருத்தரங்கிலும் மேடைப் பேச்சுகளிலும் உள்ள வேகம் செயலில் இல்லை. இந்தியாவின் சராசரி மழை அளவு 115 செ.மீ. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 90 செ.மீ. உலக சராசரி மழை அளவு 70 செ.மீ. ஆகவே இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் மழை அளவு உலக சராசரியைவிட அதிகமே.

மழைப்பொழிவு அதிகமுள்ள பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் - காவிரி டெல்டாப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 1000 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. பல மாநிலங்களில் இதே பிரச்னை.

நீர்ச்சிக்கனப் பயிர் சாகுபடிக்கு திட்டமிடப்படுகிறது. இதில் மிகவும் வியப்பான விஷயம், ராலிகன் சித்தி, ஹிவாரே பாசார் போன்ற வறட்சியான மகாராஷ்டிர மாநிலப் பகுதியில் மழை அளவு 46 செ.மீ. தான்.

உலக சராசரி - இந்திய சராசரியைவிடக் குறைவான தக்காண பீடபூமிப் பிரதேசம் இப்பகுதிகளில் இப்போதெல்லாம் 30, 40 அடியில் ஊற்று இருந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் அண்ணா ஹசாரே வழிகாட்டி, மக்கள் சேர்ந்து சிறப்பாக மழைநீரைச் சேமிப்பதுவே. இதுபோல் ஒவ்வொரு கிராமங்களிலும் ராலிகன் சித்தியின் உதாரணம் பின்பற்றப்படுமானால் நதிநீர் இணைப்பு என்ற பேச்சுக்கே அவசியமில்லை. கிடைக்கும் மழைநீரில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். 50 சதவீதம் பயன்படுத்தத் திட்டமிட்டாலே போதும். பத்தில் 1 பங்கு இயல்பாகவே பூமிக்கடியில் செல்கிறது. பத்தில் 1 பங்கு ஏரி, குளங்களுக்கும் செல்கிறது. மீதி 8 பங்கு - பெய்யும் மழையில் 80 சதவீதம் பாழாகிறது.

ராலிகான் சித்தியிலும் ஹிவாரே பாசாரிலும் நிகழ்ந்தது என்ன? வனத்துறையின் துணையுடன் கிராமத்தின் மேற்கட்டில் இருந்த மலைகளில் ஏராளமாக மரங்களை நட்டார்கள். வனம் உருவானது. ஆங்காங்கே நீண்ட வரப்புகளை வெட்டினார்கள். பல்வேறு நீர்த்தடுப்பு - கசிவுநீர்க் குட்டைகள் - குறுக்கணைகள் கட்டினார்கள். தீவனப்புல், வெங்காயம் சாகுபடி செய்தனர். கிராமத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்கச் சென்ற விவசாயிகள் கிராமத்துக்கு வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தனர். சிறப்பாகக் கால்நடை - கறவைப்பசு வளர்த்தார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசன் பாட்டுக்கு இலக்கணம் வகுத்தனர், வறட்சிப்பகுதி விவசாயிகள்.

உணவுக்குத் தேவை உள்ளது, சரி. ஆனால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி தேவையில்லாமல் வீணாவது ஒருபுறம். அரிசிச் சோறு உண்டு பழக்கமில்லாத மலைவாழ் மக்கள் ஒரு ரூபாய் அரிசியால் கேப்பை, வரகு, பொட்டுக்கம்பு போன்றவற்றைச் சொந்த உணவுத் தேவைக்கு என்று சாகுபடி செய்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். அரிசி உண்ணும் வழக்கம் இல்லாதவர்களிடம் அரிசி நுகர்வைத் திணிப்பது சரியா? கொஞ்சநஞ்சம் எஞ்சியுள்ள புஞ்சை தானிய சாகுபடியையும் அழித்துவிட்டு நீர்ச்செலவுள்ள அரிசி போன்ற உணவு சாகுபடியை ஊக்குவிப்பதும் சரிதானா?

1 டன் அரிசி உற்பத்தியாவதற்குச் செலவாகும் நீரிலிருந்து 10 டன் புஞ்சை தானியங்களையோ 10 டன் பருப்பு வகை தானியங்களையோ உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ஸ்ப்ரிங்க்ளர் அல்லது ரெயின்கன் அமைத்துக் கொள்ளலாம். நீர்ச்சிக்கனம் பற்றி மீண்டும் விவாதிக்கும் முன்பு பொது வினியோக அரிசியானாலும், அதிக விலை கொடுத்து வெளி அங்காடி அரிசியானாலும், வேறு பயனாவதும் வீணாவதும் தொடர்கதை. பொதுவினியோக அரிசி வெளி அங்காடிக்குக் கடத்தப்படும் கதை ஒருபுறம். 1 ரூபாய் அரிசியைப் பயனீட்டாளர்களே, 5 ரூபாய்க்கு விற்பது ஒருபுறம். தமிழ்நாட்டு கிராமங்களில் 1 ரூபாய் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கறவைப் பசுக்களுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது. ஏனெனில் புஞ்சை தானியங்களைவிட அரிசி மலிவாக உள்ளது. மனித உணவாக புஞ்சை தானியங்கள் பயன்படுவதற்கு அரிசி நுகர்வு குறுக்கே நின்றது சரி. இப்போது கால்நடை உணவாகவும் அரிசி மாறிவிட்டதால், புஞ்சை தானிய சாகுபடி எவ்வாறு ஊக்கம் பெறும் என்று புரியவில்லை.

""ஒருபக்கம் உண்ணச் சோறில்லை'' என்று புலம்பல். எனினும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இன்று ரேஷன் அரிசி சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது என்று காரணம் சொல்லி வெளி அங்காடியில் நல்ல விலை கொடுத்து நல்ல அரிசி வாங்கி உண்பது இல்லையா? குப்பையில் நாள்தோறும் கொட்டும் அரிசிச்சோறை விளைவிக்கத் தமிழ்நாட்டுக்கு கங்கையே வந்தாலும் பத்தாது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்கள் அரிசியைச் சற்று மறந்துவிட்டு வேறு உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்தக்கூடாதா? 1964 - 68 காலகட்டத்தில் பொன்னையா என்பவர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, புஞ்சை தானியப் பயிர் சாகுபடிக்கும், பருப்புவகைப் பயிர் சாகுபடிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கித் தேர்வு விதைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவரால் செயலானது. தமிழ்நாட்டில் விளையக்கூடிய சம்பா கோதுமைக்கும் அன்றே சான்று விதை உற்பத்தித் திட்டம் வகுத்தவர். இன்று பருப்பு விலைகள் எல்லாம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 என்று உயர்ந்துள்ளன. பருவகாலத்துக்கு முன்பே சரியான நேரத்தில் உணவு தானியம், பருப்பு வகை விதை விநியோகம் செய்யாமல், இம்மாநில அரசின் வேளாண்மைத்துறை முனைவர்கள் பி.ட்டி கத்தரிக்காய் விற்பனைக்கு வந்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணும் காரணம் என்னவென்று புரியவில்லை. உண்ட விஷம் போதாதா? மரபணு மாற்ற மலட்டு விதைகளைக் கொண்டு வந்து பாரம்பரிய விதைகளையும் வீரிய விதைகளையும் அழித்துவிட நினைக்கும் மடமையை என்னென்பது? காலநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை ஒரே சீராக இல்லை. ஒரே இடத்தில் மழைகொட்டி, பருவமழை பரவலாகப் பெய்யாமல், இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் எட்டாக்கனியாகி வருவதால், மேல்மட்ட ஊற்றுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீர்ச்சிக்கன உணவு தானியப் பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசரத்தை வேளாண்மை அமைச்சரகம் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால், நாடு நன்மை பெறும்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

No comments: