Tuesday, November 17, 2009

உயர பறக்குது தங்கம் விலை: ஒரு சவரன் 12,864 ரூபாய்

ஆபரணத் தங்கத்தின் விலை எகிறிக் கொண்டே போகிறது. இரண்டு நாளில் 160 ரூபாய் அதிகரித்து, நேற்று சவரன், 12,784 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் ஏறிக் கொண்டே போகிறது. கடந்த மாதத்தில் ஒரு சவரன் 11 ஆயிரத்துக்கு மேல் விற்று வந்தது. கடந்த 3ம் தேதி சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென 12 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்தது. ஒரு கிராம் 1,559 ரூபாயாகவும், சவரன் 12,472 ரூபாய்க்கும் விற்றது. அடுத்தடுத்த நாளில் விலை உயர்வதும், சற்று குறைவதுமாக இருந்தது. 14ம் தேதி ஒரு கிராம், 1,578 ரூபாய் எனவும், சவரன் 12,624 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று திடீரென தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு மேலும் 20 ரூபாய் அதிகரித்தது. நேற்று ஒரு கிராம், 1,598 ரூபாயாகவும், சவரன், 12,784 ரூபாய்க்கும் விற்பனையானது. இரண்டு நாளில் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.

'தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதால், உலகில் பல நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. விரைவில் ஒரு சவரன், 13 ஆயிரத்தைத் தொட்டுவிடும்' என, தங்க மொத்த விற்பனையாளர்கள் கூறினர்.

இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 864 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1, 608 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 17 ஆயிரத்து 295 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 31.50 ரூபாயாகவும் உள்ளது. பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 430 ரூபாயாக உள்ளது.
நன்றி : தினமலர்


No comments: