Tuesday, November 17, 2009

ஓரிவா எலக்ட்ரிக் கார் விலை ரூ.1 லட்சம்

அஜந்தா குழுமம் நிறுவனம், இந்தியாவில், கடிகார விற்பனையில் புகழ் பெற்றது. இத்துடன் வீட்டு உபயோக பொருட்கள், டைல்ஸ், எலக்ட்ரிக் பைக்குகள், சி.எஃப்.எல்., லேம்ப்கள் ஆகியவற்றின் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, சீன எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனத்தை விலைக்கு வாங்க, அஜந்தா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், சீன நிறுவனத்தை விலைக்கு வாங்கி, ஆண்டுக்கு 5 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய அஜந்தா குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் 'ஓரிவா' என்ற பெயரில் கார் விற்பனைக்கு வரும். இதன் விலை ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் அஜந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு தான், ஆண்டுக்கு 10 ஆயிரம் எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை விரிவுப்படுத்தி கார் தொழிற்சாலையை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, அஜந்தா நிறுவன அதிகாரிகளிடம் பேசிய போது, இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. எனினும், அரசு உதவியை எதிர்பார்க்கிறோம். அரசு உதவினால் தான் விலை குறைந்த கார்களை உருவாக்க முடியும். மொத்த உற்பத்தி செலவில் நான்கில் ஒரு பகுதி என்ற அளவுக்கு வாட் மற்றும் கலால் வரிகள் உள்ளன. இந்த விஷயத்தில் அரசு சலுகை காட்டினால், ஒரு லட்சம் ரூபாய் என்ற விலைக்கு எலக்ட்ரிக் காரை நிச்சயம் விற்பனை செய்ய முடியும் என்றனர்.
நன்றி : தினமலர்


No comments: