Friday, November 13, 2009

இதோ ஒரு புது வரி!

உலகையே இப்போது அச்சமூட்டி வரும் பிரச்னை புவி வெப்பமடைவதுதான். அதைக் குறைக்க யார் யார் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்தெந்தத் துறைகளில் இதற்கான சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறுகின்றன. அதே சமயம், உலகத்தின் பெரும்பாலான நாடுகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார மந்த நிலையும் உலகத் தலைவர்களின் கவனத்தை அதே அளவுக்கு ஈர்த்து வருகிறது. இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரு சேர தீர்வு காணும் யோசனை ஒன்று இப்போது வளர்ந்த நாடுகளில் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

அது, அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜேம்ஸ் டோபின் என்பவர் 1970-களில் தெரிவித்த உலகளாவிய பணப் பரிமாற்றத்தின் மீது வரி விதிக்க வேண்டும் என்ற யோசனையாகும். இது இன்னமும் யோசனை அளவிலேயே இருக்கிறது, நடைமுறைக்கு வரவில்லை.

சர்வதேச அளவில், பணப் பரிமாற்றத்தின்போது மொத்தத் தொகை மீது 0.5% வரி விதித்தால் அதுவே கணிசமான அளவுக்கு நிதியாகத் திரளும். அந்த நிதியில் பாதியை அதை வசூலிக்கும் நாடுகள் தங்களுடைய பட்ஜெட் பற்றாக்குறையை இட்டு நிரப்பவும், எஞ்சிய தொகையை புவி வெப்பமடைவதைச் சுயமாகக் குறைக்க முடியாத வளரும் நாடுகளுக்கு உதவவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüன் இதை முதலில் பரிந்துரைத்தார். அதற்கு வரவேற்பைவிட கண்டனமே அதிகம் இருக்கிறது.

""இதை நாங்கள் விரும்பவில்லை'' என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதிபர் பராக் ஒபாமா இதை ஆதரிப்பார் என்று பிரெüன் நம்புகிறார்.

""அப்படி சர்வதேச பணப் பரிமாற்றத்தின் மீது வரி விதிப்பதாக இருந்தால் அதிக விகிதத்தில் வரி விதிக்காதீர்கள், மிகக் குறைந்த அளவு விதியுங்கள்'' என்று கனடா நாட்டவர் தயக்கத்துடனேயே கூறியுள்ளனர்.

""இப்படி ஒரு வரி விதிப்பை அறிமுகப்படுத்தி அதை அமல்படுத்துவது மிகவும் கடினம்'' என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) கருத்துத் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச அளவில் காணப்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க கார்டன் பிரெüன் தெரிவித்த 4 யோசனைகளில் ஒன்றுதான் இந்த சர்வதேச பணப் பரிவர்த்தனை மீதான வரி விதிப்பாகும். இந்த யோசனையை ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்கல், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஆகியோரும் ஆதரித்துள்ளனர். அதேசமயம் ""ஜி-20'' நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் நிதியமைச்சர்கள் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்ப்பார்கள், அதை கார்டன் பிரெüனின் திறமையான வாதத்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பிரிட்டிஷ் நாட்டின் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகள் மீதும் 0.05% (அதாவது அரை சதவீதம் மட்டுமே) வரி விதிப்பதன் மூலம் மட்டுமே ஓராண்டில் சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமாம். எந்த நிதியமைச்சரும் இப்படியொரு தொகை தானாக வருவதை வேண்டாம் என்று நிராகரிக்க மாட்டார். அத்துடன் இதில் பாதியைக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் நிதிப் பற்றாக்குறையை இட்டு நிரப்பிவிடலாமாம்.

ஆனால் இந்த வரிவிதிப்பில் உள்ள பிரச்னையே இதை உலகம் முழுக்க உள்ள நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சில நாடுகளில் மட்டும் இப்படியொரு வரியை விதித்தால், அதை மக்களை ஏமாற்றி கூடுதல் நிதி திரட்டும் உத்தி என்றே அந்த நாட்டுப் பொருளாதார அறிஞர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டுவர். எனவே இதை உலகின் அனைத்து நாடுகளும் ஏற்கச் செய்தால்தான் முழு வெற்றியைப் பெற முடியும்.

இந்த வரியை எதிர்ப்பவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் மீண்டும் சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலையோ, நெருக்கடியோ ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றே எல்லா நாடுகளிலும் விரும்புவார்கள். எனவே அதற்கு உதவும் இந்த நிதிச் சீர்திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த நிதியைத் திரட்ட, பணப் பரிமாற்றம் நடைபெறும் நிதி நிறுவனங்களைத் தவிர உற்ற இடங்கள் வேறு இல்லை. எனவே சர்வதேச வர்த்தகம், தொழில்துறை பற்றுவரவு நடைபெறும் நிதி நிறுவனங்களிலேயே இந்த வரியை விதித்து வசூலிப்பது எளிது.

சர்வதேச பணப் பரிவர்த்தனை மீது வரி விதிப்பதில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது. ஏதோ சில காரணங்களுக்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், சில நாடுகளில் நடைபெறும் பணப் பரிமாற்றங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கின்றன. அங்கே எத்தனை கோடி பணம் புரள்கிறது, யார் யாருக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாமலேயே மூடுமந்திரமாக இருக்கிறது. இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால் அந்த நாடுகளில் திரைமறைவாக நடக்கும் பணப் பரிமாற்றம் ஓரளவுக்காவது வெளியில் தெரிய வாய்ப்பு ஏற்படும்.

புதிய வரி விதிப்பு வசூல் தொகையில் பாதி அளவு, வளரும் நாடுகளில் புவி வெப்பமடைதலுக்குத் துணைபுரியும் காரணிகளை நீக்கச் செலவிடப்படும். அதனால் சுயமாக நிதி திரட்டிச் செலவிட முடியாத வளரும் நாடுகள் பலன் அடையும். வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டும் சேர்ந்து புவி வெப்பம் அடைவதைக் குறைத்தால்தான் இந்தப் புவி நாம் வாழ்வதற்கு ஏற்றதாக மாறும். எனவே இந்த யோசனை அந்த வகையில் வரவேற்கத்தக்கது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி : தினமணி

2 comments:

ரோஸ்விக் said...

ம்ம்ம்....உள்ள வரி பத்தாதுன்னு இனிமே இது வேறையா....? நடத்துங்கப்பா நடத்துங்க....

பகிர்விற்கு நன்றி நண்பரே!

பாரதி said...

ரோஸ்விக் வருகைக்கு நன்றி