Friday, November 13, 2009

தள்ளாடும் தலைமுறை!

ஆற்றில் மூழ்கியிருந்த கரடியை, போர்வை என நினைத்த ஒருவன், எடுப்பதற்காக அருகே சென்றான். நெடுநேரமாகியும் அவன் நடுஆற்றிலேயே நிற்பதை, கரையில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த அவனது நண்பன், ""போர்வையை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கரைக்கு வா'' என்றான். அவனோ, ""நான் அதை விட்டுவிட்டேன். அதுதான் என்னை விடவில்லை'' என்றானாம்.

ஒரு பொழுதுதான், பொழுதுபோக்குக்காகத்தான் என விளையாட்டாக மதுவைத் தொடுவோரின் நிலையும், போர்வை என நினைத்துக் கரடியைத் தொட்டவனின் நிலையும் ஒன்றுதான்.

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பது முதுமொழி, "பாட்டில்' பழக்கமோ பல தலைமுறைகளைப் பாதிக்கும் என்பது கண்கூடு.
அறிவில் ஆதவனாக இருப்பவரைக்கூட மது அறிவில்லாதவனாக ஆக்கிவிடும் என்பதை உணர வேண்டும்.

பொதுநலவாதி ஆட்டின் ரோமத்தை நீக்குகிறான். அரசியல்வாதியோ ஆட்டின் தோலையே உரிக்கிறான் என்றார் மேலை நாட்டுக் கவிஞர் ஒருவர். இன்றைய ஆட்சியாளர்களோ "குடும்பத் தலைவன்' என்ற தோலை உரித்துவிட்டு "குடும்பம்' என்ற ஆட்டுக்குப் பல்வேறு "இலவசங்கள்' என்னும் அணிகலன்களை அணிந்து அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தங்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருந்தோருக்குப் பிரமிக்கத்தக்க வகையில் சிலைகளை நிறுவியும், அவர்களின் பெயர்களைக் கட்டடங்கள், திட்டங்களுக்குச் சூட்டியும் அழகுபார்ப்பது மட்டுமல்ல, அவர்கள் வலியுறுத்திய கள்ளுண்ணாமை, மதுவிலக்கு போன்றவற்றை இளைய தலைமுறை கடைப்பிடித்து வாழ்வில் உயர்வதற்குத் தங்களால் ஆனவற்றைச் செய்வதும் இன்றைய தலைவர்களின் தலையாய கடமைதான்.

""மறைவாய் நின்று பயந்து பயந்து குடித்துச் சாகாதே; தைரியமாய் அமர்ந்து ஆறஅமர குடித்துச் சிறிது சிறிதாக உடைமைகளையும், உயிரையும் இழ'' என மறைமுகமாகச் சொல்கின்றன இன்றைய அரசுகள்.

சாதா குடிமக்களை சதா குடிமகன்களாக மாற்றிய பெருமையும், பெரும் நகரங்களில் மட்டுமே விற்கப்பட்ட மேல்நாட்டு மதுவகைகளை கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைக்கச் செய்து சமத்துவத்தை நிலைநாட்டிய பெருமையும் நம் ஆட்சியாளர்களுக்கு உண்டு.

ஆட்சியைத் தள்ளாடாமல் நடத்த வீதிக்குவீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருமானத்தைப் பெருக்குவதாக அரசுகள் கூறுகின்றன. ஆனால், ஏழைகளின் குடும்பங்களோ உள்ள மானத்தையும் இழந்து தள்ளாடுகின்றனவே! மதுகுறித்து கவலைப்படும் அரசுக்கு இதுகுறித்து கவலைப்பட நேரமேது?

மது வகைகளால் அரசுகளின் கஜானாக்கள் நிரம்பலாம். ஆனால், குடித்துக்குடித்துச் சாகும் ஏழைக் குடும்பங்களோ "விதை நெல்லை விற்று, வீட்டையும் இழந்த நிலைக்கு' உள்ளாகி விடுகின்றன.

விளைகின்ற பயிர்களைத் தொலைவிலிருந்து வரும் பெருச்சாளிகள் பிடுங்கித் தின்றால்கூடப் பாதகமில்லை. ஆனால், காக்க வேண்டிய வேலிகளே களவாடிக் கொண்டால்...? இறைஞ்சும் ஏழைகளைப் பராசக்தியாய்க் காக்க வேண்டியவர்களே பாராசக்தியாய் இருந்தால்...?

பிரமிக்கத்தக்க வகையில் வழங்கப்படும் பல்வேறு இலவசங்கள் என்னும் தாழம்பூ சூடிய கொண்டைக்குள் மது விற்பனை என்னும் பேனும், ஈறுமே நிறைந்து நாற்றமடிக்கச் செய்கிறது.

மதுவைக் குடித்துவிட்டுப் பேருந்து நிலையங்களிலும், சாக்கடை ஓரங்களிலும், பொது இடங்களிலும் விழுந்து கிடக்கும் தகப்பன், தமையன்களால் அவர்களின் குடும்பத்தினர் அடையும் அவமானங்களையும், மனஉளைச்சலையும் ஆட்சியாளர்கள் அறிவார்களா?

அவர்களின் நோக்கமெல்லாம், வெளிநாட்டில் வசித்தபோதும்கூட, தன் தாய்க்குச் செய்து தந்த சத்தியத்துக்காக மதுவைத் தொடாத மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த கரன்சி கட்டுகளே!

ஆண்டுக்கொரு முறை என கணக்குப் பார்த்ததுபோக, மாதந்தோறும், பண்டிகைகள்தோறும் என்றாகி மதுவிற்பனை அதிகரிப்பதையும், வசூலாகும் தொகையையும் எண்ணி மகிழும் ஆட்சியாளர்கள், மதுவால் ஏற்படும் விபத்துகளிலும், விலை மதிப்பில்லா உயிரிழப்புகளிலும், குடிமகன்களாக மாறும் குடிமக்களின் எண்ணிக்கையிலும் தங்களுக்கும் பங்குண்டு என எண்ணிப் பார்ப்பார்களா?

வீட்டுக்கு ஒருவர் போருக்குச் சென்றது சங்கத் தமிழ்க் காலம்; வீட்டுக்கு ஒருவர் "பாருக்கு'ச் செல்வது செம்மொழித் தமிழ்க் காலமோ?

"மதுவிலக்கு வேண்டும்' என பெரும்பான்மையினர் குரல் கொடுத்த பின்பும், இலவசங்கள் என்ற இருட்டில் மக்களை மூழ்கடித்து, தங்கள் பாதைகளை வெளிச்சமாக்கிக் கொள்ள மது "விளக்கு' வேண்டும் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்?

ஆட்சி தம் வசம் இருக்க வேண்டுமெனில், இலவசம் தந்து மக்களின் இதயங்களைக் கவர்வதில் தவறில்லைதான். ஆனால், அதைப் பாதகமில்லா பிற வழிகளில் சேரும் தொகைகளிலிருந்து தருவதுதானே உத்தமம்.

அரசுகள், வீரநடை நடந்து செல்லும் தலைமுறைகளை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை, "விஸ்க்கி' "விஸ்க்கி' தள்ளாடி நடக்கும் தலைமுறையை உருவாக்காமல் இருந்தால்தான் வீட்டுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.
கட்டுரையாளர் : மா. ஆறுமுககண்ணன்
நன்றி : தினமணி

3 comments:

ரோஸ்விக் said...

அருமையான கட்டுரை நண்பரே! வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்தல்...
சிந்திக்க வைக்கும் கட்டுரை...

முனைவர் இரா.குணசீலன் said...

யாவரும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு மகிழ்ச்சி..