வாழ்வாதாரத்துக்குப் போராட வேண்டிய கம்யூனிஸ்டுகள் வழிபாட்டுக்காகப் போராடுவதா? என்ற கேள்வியை எழுப்புவதே ஆலய நுழைவுப் போராட்டத்தில் மைய விஷயமான ஜாதிய ஒடுக்குமுறையை மறைப்பதற்காக முயற்சி செய்வதாக இருக்கிறது. குறிப்பாக உடல் முழுவதும் காணப்பட்ட புண் முற்றிலும் குணமாகிவிட்டதாகவும், ஏதோ ஓர் இடத்தில் ஆறாத சிறு புண் இருப்பதை ஆவேசமாகச் சொரிந்து புண்ணாக்கி விடுகிறார்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள் என்பதும் தவறான குற்றச்சாட்டு.
நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழகத்தில் 7,000 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இருக்கிறது என்பது மாநில அரசின் ஆவணங்கள் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். டீக்கடைகளில் இரண்டு கிளாஸ், செருப்பு போட முடியாமை, குடிதண்ணீர் எடுக்க முடியாமை, சைக்கிளில் போக முடியாமை, கோயிலுக்குள் நுழைய முடியாமை, முடிவெட்டச் செல்ல முடியாமை, ஏன் செத்தால் சுடுகாடு செல்ல முடியாமை என்று பலவிதமான கொடுமைகள் தொடர்கின்றன. அந்தக் கொடுமைகளின் ஒரு பகுதி ஆலயத்தில் நுழைய முடியாமை, வழிபாட்டுத் தலங்களில் ஜாதிப்பாகுபாடு, இது ஏதோ ஓரிரு கோயில்களில் நடப்பதுபோலவும், அதுவும் தனியார் கோயில்களில் நடப்பதாகவும், அரசுப் பொறுப்பில் அறநிலையத்துறை சார்ந்த கோயில்களில் நடப்பதில்லை என்றும் ஒரு மிகப்பெரிய பொய் சொல்லப்படுகிறது.
"எவிடன்ஸ்' என்ற அமைப்பின் கள ஆய்வு அறிக்கையில், ஆலயங்களில் தீண்டாமை குறித்து பின்வரும் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2009-ல் தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 85 பஞ்சாயத்துகளில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வாகும் இது.
""எமது ஆய்வில் 85 பஞ்சாயத்துகளில் வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85 பஞ்சாயத்துகளில் 69 கோயில்களில் தலித்துகள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். 72 கோயில்களில் சன்னிதானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 56 கோயில்களில் 54}ல் வழிபாட்டு நேரங்களில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகின்றன. 52 கோயில்களில் தலித்துகளுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. 33 கோயில்களில் தலித்துகளுக்கு வடம் பிடிக்க அனுமதி மறுப்பு. பிரசாதம் வழங்குவதில் 59 கோயில்களில் பாகுபாடு.
பாதிரியார்கள் மற்றும் பூசாரிகள் காட்டுகிற பாகுபாடுகள் 63 கோயில்களில் உள்ளன. கோயில் கலை நிகழ்ச்சிகளின்போது 64 கோயில்களில் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். பால்குடம், தீச்சட்டி போன்ற சடங்கின்போது 60 கோயில்களில் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன''.
இந்த ஆய்வு கூறும் உண்மை என்ன? ஆலய நுழைவு பாகுபாடு என்பது ஒரு சிறு புண் அல்ல. பல இடங்களில் நீக்கமற நிறைந்திருக்கிற ஒரு பெரும் ஜாதியக்கொடுமை. இதை எதிர்த்துப் போராடுபவர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அரசியல் நோக்கமே. அதுமட்டுமல்ல, தலித்துகளைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்குப் பின் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதையும், மத்திய, மாநில அரசுகளின் ஆவணங்களும், பல்வேறு ஆய்வுகளும் தெளிவுபடுத்தியுள்ளன. 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகும், தலித் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமைகள் குறையவே இல்லை என்ற காரணத்தினால்தான் 1989-ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உருவாக்கப்பட்டது. இப்பொழுது இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இச்சட்டத்தில் வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனி நீதிமன்றம், தனி வழக்கறிஞர், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கு குழுக்கள் என்று பல்வேறு ஏற்பாடுகளும், கடமையைப் புறக்கணிக்கும் அரசு அதிகாரிகளுக்குத் தண்டனை, குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், 20 ஆண்டு அனுபவம் என்ன? தமிழகத்தில் 1535 காவல்நிலையங்கள் உள்ளன.
சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 3 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் வன்கொடுமைச் சட்டத்தில் பதிவு செய்யப்படுகிற வழக்குகள் மிகமிகக் குறைவு.
2002-ல் 917 வழக்குகள், 2003-ல் 974 வழக்குகள், 2004-ல் 891 வழக்குகள், 2005-ல் 1056 வழக்குகள், 2006-ல் 851 வழக்குகள் என காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களில் இரண்டு சதவிகிதம்கூட பதிவாகவில்லை என்கின்றன ஆய்வுகள்.
அப்படிப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் ஐந்து சதவிகித வழக்குகளுக்கு மட்டும்தான் தண்டனை கிடைக்கிறது. 95 சதவிகித வழக்குகள் தள்ளுபடியாகின்றன. இதற்குப் பிரதான காரணம் வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்வது, புலனாய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் பாரபட்சமாக இருப்பதுதான் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் அமலாவது குறித்து பரிசீலிக்க, ஒழுங்குபடுத்த மற்றும் தலித் மக்களின் பிரச்னை மீது அரசு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, மத்தியில் சிறப்புக்கமிஷன் ஒன்றும் அமைக்கப்பட்டு, பூட்டா சிங் தலைமையில் இப்பொழுது அது செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்தகைய கமிஷன்கள் இல்லை. ஆக, சுதந்திரத்துக்கு முன் இருந்த நிலையிலிருந்து, சுதந்திரத்துக்குப் பின் இருக்கும் நிலை என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, உண்மைகளை வேண்டுமென்றே மறைப்பதும் ஆகும்.
தலித் மக்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு நிலமில்லை, வீடு இல்லை, கல்வி வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீட்டுச் சட்டம் இருந்தும் அமலாகவில்லை. உரிய மருத்துவமில்லை. சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இவையனைத்தும் ஒருவகையில் வாழ்வாதாரப் பிரச்னைகள்.
இன்னொருவகையில் அவர்கள் தாழ்ந்த ஜாதி என்பதனால் ஏற்படுத்தப்படும் சமூகக் கொடுமைகள் என்பதனால் இந்தப் போராட்டங்களைப் பொருத்தவரை பொருளாதாரப் பிரச்னைகளாகவும், சமூகப் பிரச்னைகளாகவும் அவை கருதப்பட வேண்டும். ஆலய நுழைவு அவசியம்! அவசியம்!
கட்டுரையாளர் : கே. வரதராஜன்
நன்றி : தினமணி
Friday, November 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment