Monday, November 16, 2009

அதிர வைக்கும் அமைச்சர்கள்!

மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது அண்மையில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி.

சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாக (தற்போது 33 பேர்) இருந்துள்ளனர். ஆண்டுதோறும் சராசரியாக ஒவ்வொரு அமைச்சரும் தலா ரூ.2 கோடியைப் பயணத்துக்காகச் செலவிட்டுள்ளனர்.

இதில் உள்நாட்டில் செய்த பயணச் செலவு ரூ.163 கோடிக்கும் அதிகம்; வெளிநாடுகளுக்குச் சென்ற பயணச் செலவு சுமார் 137 கோடி.

இது தவிர கடந்த 3 ஆண்டுகளில் இணையமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.21 கோடியும், உள்நாட்டுப் பயணத்துக்காக ரூ.27 கோடியும் செலவிட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணச் செலவுக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. இது அந்த ஆண்டின் அரசின் மொத்தச் செலவில் 0.01 சதவீதமாக இருந்தது. ஆனால் 2009 - 10-ம் ஆண்டு பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணச் செலவுக்காக ரூ.161 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசின் மொத்தச் செலவில் 0.02 சதவீதம். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 4 மடங்கு தொகை அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நலத்திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாகப் பயணச் செலவு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பயணச் செலவு 4 மடங்காக அதிகரித்துள்ளதென்றால் அமைச்சர்கள் எந்த அளவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படும் தொகையைவிட பயணச் செலவு இரு மடங்கு ஆகிறது என்பது வேறு விஷயம்.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தமுள்ள 76 மத்திய அமைச்சர்களுக்கு (தற்போது 78 பேர்) ரூ.161 கோடி பயணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒருவருக்கு ரூ.2 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இது முன்பு ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகம். அமைச்சர்கள் இதையும் விஞ்சி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றால் பணம் அதிகமாகத் தான் செலவாகும், இது சாதாரண விஷயம் தான் என்று கூட சிலர் நினைக்கக்கூடும். ஆனால் அழைப்பு விடுக்கும் நாடுகள் பல தங்கள் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்ள அமைச்சர்களை அனுமதிக்கும். ஆனால் நமது அமைச்சர்களில் பலர் அதைப் புறக்கணித்து, ஆடம்பரமான 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதையே விரும்புகின்றனர்.

மேலும் அமைச்சர்கள் வெளிநாடுகள் செல்லும் போது அங்கு தேவைப்படும் கார் வசதியை அழைப்பு விடுத்த நாடுகளே பெரும்பாலும் செய்து கொடுக்கும். உணவுச் செலவும் இதே போன்றுதான். இதுதவிர வெளிநாடு செல்லும் அமைச்சர்களுக்கு தினப்படியாக ரூ. 3,000 வழங்கப்படுகிறது.

உள்நாட்டுப் பயணத்தின் போது விருந்தினர் மாளிகை போன்றவற்றில் அமைச்சர்கள் தங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவற்றையெல்லாம் மீறி இந்த அளவுக்கு பயணச் செலவு அதிகரித்திருப்பதே அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

கடந்த ஆட்சியில் நமது அமைச்சர்கள் சுமார் 1 கோடி கி.மீ. தூரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்திருக்கிறார்கள். இதில் சொந்தப் பயணங்களும் அடங்கும் என்றாலும் பெரும்பாலானவை அதிகாரப்பூர்வ பயணங்களே. இவர்கள் பயணம் செய்துள்ள மொத்த தூரத்துக்கு, பூமியை சுமார் 250 முறை சுற்றி வந்து விடலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2006-07 பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ரூ.45.18 கோடி ஒதுக்கினார். ஆனால் செலவு ஏற்பட்டதோ ரூ.92.31 கோடி.

நிறையச் செலவாகிறதே என்று இதற்கு அடுத்த நிதியாண்டியில் (2007-08) பயணச் செலவுக்கு ரூ.75.5 கோடியை ஒதுக்கினார். அந்த ஆண்டில் ரூ.150.43 கோடி செலவிட்டு அசத்தினர் நமது அமைச்சர்கள்.

2004-05-ல் ரூ.15 கோடியாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணச் செலவு, 2008-09-ல் 22.58 கோடியாக அதிகரித்தது. நடப்பு பட்ஜெட்டில் அவரது பயணச் செலவுக்காக 23.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் எந்த வேலைக்காகப் பயணம் செய்தாலும் சரி, அந்தச் செலவுகள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையில் தான் விழுகிறது. இவை அனைத்தும் நாம் செலுத்தும் வரிப் பணம் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகம் செலவிடும் இந்த அமைச்சர்கள், செலவைக் காட்டிவிட்டு எவ்வாறு செலவானது என்பதைக் கூற பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.

இவ்வளவு செலவு செய்யும் அமைச்சர்கள், விவசாயிகள் கரும்புக்குக் கூடுதல் விலை கேட்டால் அதனை ஏற்க மறுக்கின்றனர். அதனை எதிர்த்து அவசரச் சட்டமும் இயற்றப்படுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது அண்மையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்த சிக்கன நடவடிக்கையும், அமைச்சர்கள் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம், ராகுல் காந்தியின் ரயில் பயணம் எல்லாம் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகவே தோன்றுகிறது.

பெரும்பாலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறோம் என்ற பெயரில்தான் அமைச்சர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் அமைகின்றன. அமைச்சர்கள் செய்யும் பயணச் செலவு இவ்வளவு உயர்வதற்கு, செலவு உச்சவரம்பு நிர்ணயிக்காததே முக்கியக் காரணம். எனவே செலவைக் கட்டுப்படுத்த உச்சவரம்பு நிர்ணயிப்பது அவசர, அவசியமானது.
கட்டுரையாளர் : சு. வெங்கடேஸ்வரன்
நன்றி : தினமணி

1 comment:

அஹோரி said...

வரி பணமா? அப்டின்னா ?

அரசு ஊழியர் குடும்பங்களுக்கு கருணாநிதி தன் பரம்பரை சொத்திலிருந்தில்ல சம்பளம் தரார். அதுல வயித்த கழுவுரதால தான வாரிசு வாரிசா பிரச்சாரம் + சப்ப காட்டு கட்டுது அந்த குடும்பங்கள்.

என்னமோ ... ஒண்ணுமே பிரியல ....