Monday, October 12, 2009

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸýக்கு ஆதாயமா?

திரைப்படத் தயாரிப்பாளரான கரண் ஜோஹர், சமீபத்தில் மகாராஷ்டிர நிர்மாண் சேனை அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேயைச் சந்தித்து, தனது படத்தில் "மும்பை' என்ற வார்த்தையை "பம்பாய்' எனப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இதனால் எல்லாம் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் மனதில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

எனினும் இதன் மூலம் ஜோஹர் தனது படம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் திரையிடப்படுவதை உறுதி செய்துள்ளார். அவ்வளவுதான்! திரைப்படங்களுக்குத் தணிக்கை அதிகாரிகள்தான் நற்சான்றிதழ் கொடுத்து படத்தை வெளியிட அனுமதி அளிப்பது வழக்கம். ஆனால், தங்கள் படம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தியேட்டரில் ஓடவேண்டுமானால், அதற்கு முன்னதாக மகாராஷ்டிர நிர்மாண் சேனை அமைப்பிடமும் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக கரண் ஜோஹர் மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவாணை நாடவில்லை. ஆனால், அவசரம் அவசரமாக ராஜ் தாக்கரேயைச் சந்தித்துள்ளார். "சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலிலேயே விழுந்துவிட்டால் பிரச்னை ஏதும் இருக்காது' என்று அவர் எண்ணியிருக்கலாம்.

அரசியல் கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால் இதனால் காங்கிரஸýக்குத்தான் லாபம் என்பது தெரியவரும். மகாராஷ்டிரத்தில் இப்போதைய நிலையில் முடிசூடா மன்னனாக இருப்பவர் மகாராஷ்டிர நிர்மாண் சேனை அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேதான். அவரது செல்வாக்கு உயர்ந்தால் பரவாயில்லை. அதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. ஆனால், சிவசேனை என்ற கிழட்டுப் புலி மீண்டும் தலையெடுத்துவிடக்கூடாது என்று நினைக்கிறது காங்கிரஸ்.

சிவசேனையிலிருந்து ராஜ் தாக்கரே பிரிந்து வந்து தனிக் கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால் காங்கிரஸýக்குத்தான் லாபம்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மும்பை, தாணே பகுதியில் 17 இடங்களைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.

மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஹரியாணாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அங்கு காங்கிரஸ் புதுவிதமான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியொரு நிலை அங்கு உருவாகலாம்.
ஒருமுறைக்கு மேல் முதல்வராக இருந்தவர்கள் மேலிடத் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட நினைக்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணத்துக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகக் கோரி வருகிறார்கள். எல்லைப்புற மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், உண்மையான தேர்தல் போட்டி மகாராஷ்டிரத்தில்தான்.

மகாராஷ்டிரத்தில் இந்த முறையும் பாஜக, சிவசேனை கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறது. மகாராஷ்டிர நிர்மாண் சேனையின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி வெற்றியைக் குவிக்குமா என்பது கேள்விக்குறிதான். மகாராஷ்டிர நிர்மாண் சேனை, வட இந்தியர்களைத் தாக்கிப் பேசி வருகிறது. இதனால் பிராமணர்கள், ராஜபுதனத்தினர், இதர பிற்பட்ட வகுப்பினர்கள், உ.பி. மற்றும் பிகாரைச் சேர்ந்த தலித்துகள் "பையாக்கள்' என்ற ஒரே பிரிவாகத் தனித்து நின்று காங்கிரûஸ ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மராத்தி பேசும் மக்களிடம் ஒருவித விரக்தி ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலத்தவர்கள் மீது அவர்களுக்குக் கோபம் உள்ளது. ஆனால், உண்மை நிலவரம் என்னவெனில் வெளிமாநிலத்தவர்கள்தான் அங்கு உழைப்பதுடன் செல்வாக்காகவும் உள்ளனர்.

சாதாரண நிலையில் உள்ள பேப்பர் போடும் பையனிலிருந்து, பால்காரர், காய்கறி வியாபாரி, டாக்ஸி டிரைவர் வரை அனைவரும் வெளிமாநிலத்தவர்தான். இவர்களுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடையப் பார்க்கிறது மகாராஷ்டிர நிர்மாண் சேனை.

ராஜ் தாக்கரேயின் நோக்கமெல்லாம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடவேண்டும் என்பதல்ல. உத்தவ் தாக்கரேயின் கை ஓங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதுமட்டுமல்ல; இன்னும் மூன்று ஆண்டுகளில் நடைபெற உள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலில் வென்று தற்போது சிவசேனை கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சியை தங்கள் வசம் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான்.

ராஜ் தாக்கரேயின் அரசியல் விளையாட்டை நன்கு புரிந்துகொண்டுள்ள சிவசேனை கட்சி, மகாராஷ்டிர நிர்மாண் சேனை, காங்கிரஸ் இரண்டையும் தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேயும் "நீங்கள் பால் தாக்கரே மீது உண்மையிலேயே அன்பு கொண்டிருந்தால் தேர்தலில் சிவசேனை கட்சிக்கு வெற்றியைத் தேடித் தாருங்கள்' என்று தொண்டர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும் இதுதான் தனது கடைசித் தேர்தல் என்றும் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டப் போவதாகவும் கூறியுள்ளார். இந்தத் தேர்தல் பால் தாக்கரேவுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையிலான போட்டி என்பது போலவும், இது தனக்கும் (உத்தவ் தாக்கரே), ராஜ் தாக்கரேவுக்கும் இடையிலான போட்டி அல்ல என்பது போலவும் உத்தவ் தாக்கரே பேசி வருகிறார். உடல்நலம் இல்லாமல் இருக்கும் பால் தாக்கரேவுக்கும் இது கடைசித் தேர்தலாக இருக்கும் என்று தெரிகிறது. எப்படியாவது தமது மகனை மும்பையின் முடிசூடா மன்னராக்க வேண்டும் என்பதுதான் பால் தாக்கரேயின் ஆசை.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சரத் பவார், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரை மாநில முதல்வராக ஆட்சிப் பீடத்தில் அமர்த்தலாம். இன்னும் சொல்லப்போனால் தமக்குச் சாதகமான நிலை ஏற்பட்டால் கட்சியை அவர் காங்கிரஸýடன் இணைத்துவிடவும் முடிவு எடுக்கலாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாவது அணி என்பது எடுபடவில்லை. குடியரசுக் கட்சி (கவாய் பிரிவு), காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல வடஇந்தியர்களும், முஸ்லிம்களும் காங்கிரஸ் பக்கம்தான் உள்ளனர். சமாஜவாதி கட்சியைப் பொருத்தவரை அந்தக் கட்சிக்கு மாநிலத்தில் முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை.

இதர மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலைவிட மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தால் அது காங்கிரஸýக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதுமட்டுமல்ல; 2014-ல் தனித்து ஆட்சியைப் பிடிக்க இது வழிகோலலாம்.

மற்றொருபுறம் பார்த்தால் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஓரளவு கணிசமான இடங்களைப் பிடித்துள்ளது பாஜக-சிவசேனை கூட்டணி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று கட்சிக்குப் புத்துயிரூட்டலாம். இந்தத் தேர்தல் அந்தக் கட்சிக்கு வாழ்வா-சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனை கட்சியின் எதிர்காலம் என்ன என்பது இந்தத் தேர்தல் மூலம் தெளிவாகிவிடும் என்று தெரிகிறது. ஏனெனில் சிவசேனை கட்சி நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அதை ஒரு கிழட்டுப் புலிபோல மக்கள் கருதுகிறார்கள். ஒரு வீரியம் நிறைந்த கட்சி போல அதன் செயல்பாடுகள் இல்லை என்றே பலரும் நினைக்கின்றனர். நகர்ப்புறங்களில் அதன் தலைவர்கள் தோல்வியைத் தழுவி வருகின்றனர். ஊரகப் பகுதிகளில் மட்டுமே அவர்களின் செல்வாக்கு நீடித்து வருகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவிதமான தேர்தல் உத்தி இருக்கும். ஆனால், கவலை தரும் விஷயம் என்னவெனில் மகாராஷ்டிர நிர்மாண் சேனைக்கு காங்கிரஸ் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதுதான். இதன் மூலம் குறுகிய லாபம் அடைய காங்கிரஸ் நினைக்கிறது.

1970-களில் மகாராஷ்டிரத்தில் கம்யூனிஸ்டுகளைச் சமாளிக்க காங்கிரஸ், சிவசேனையை ஆதரித்தது. அதுபோல இப்போது மகாராஷ்டிர நிர்மாண் சேனையை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

ராஜ் தாக்கரேயை வளரவிட்டால் மீண்டும் அவரது கட்சியைக் கட்டுப்படுத்துவது என்பது காங்கிரஸýக்கு பெரும் தலைவலியாகப் போய்விடும்.

மத அடிப்படையிலான அரசியல் எப்படி ஆபத்தானதோ அதேபோல மொழி அடிப்படையிலான அரசியலும் ஆபத்தானது. இதை காங்கிரஸ் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் :நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

No comments: