Monday, October 12, 2009

கடனும் இலவசம்

கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிப்பு செய்தது. 2009-10-ம் கல்வியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடியை அரை மனதுடன்தான் பாராட்ட முடிகிறது. ஏனெனில், மத்திய அரசு அறிவித்திருக்கும் நிபந்தனையைப் பார்க்கும்போது, யாருக்கு இந்தக் கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அவர்களை மீண்டும் பின்னுக்குத் தள்ளுகிற நிலைமையை மத்திய அரசே உருவாக்கப்போகிறது என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.

வீட்டு வங்கிக் கடன்கூட 8 முதல் 8.5 சதவீத வட்டியில் தருகிறார்கள். அதாவது நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகக்கூடிய ஒரு உடைமை மீதான கடனுக்கே இந்த அளவுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் படிப்பைத் தவிர எந்தவித வருவாய்க்கும் வழியே இல்லை என்கிற மாணவருக்கு அளிக்கும் கல்விக் கடனுக்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வட்டி 11 சதவீதம்.

ஒரு மாணவர் முதல் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், அவர் மாதம் ரூ.1000 வரை வட்டி கட்டியாக வேண்டும். அடுத்தஆண்டு இன்னொரு லட்சம் வாங்கினால் அந்த ஆண்டில் மாதம் ரூ. 2,000 வட்டி. மாணவர் படித்துக்கொண்டிருக்கிறாரே தவிர, தொழில் செய்பவர் அல்ல. வீடு, நிலம் போல ஆண்டுதோறும் மதிப்புக்கூடக்கூடிய பொருள் அல்ல அவருடைய படிப்பு. அவர் வேலைக்குச் சேர்ந்தாலொழிய கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி அவருக்குக் கிடையாது.

தற்போது மத்திய அரசு அனைத்துக் கல்விக் கடனுக்கும் வட்டியைத் தானே செலுத்தும் இந்த அறிவிப்பால், வசதி உள்ளவர்களும், சொத்து உள்ளவர்களும், கருப்புப்பணத்தை வைத்திருப்பவர்களும்கூட, "சும்மா கிடைக்கிற கடன்தானே', "நாலு வருஷத்துக்கு வட்டியில்லாத கடன்தானே' என்று கல்விக் கடனை வாங்கி, அதைத் தொழிலில் முதலீடு செய்தோ அல்லது அப்படியே அதே வங்கியில் வைப்பு நிதியாக வைத்து 7 சதவீதம் வட்டியைப் பெறுவதற்கான ஆசையாலோ, கல்விக்கடன் பெற முயல்வர். இதனால் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியுள்ளவர்களையே "பாதுகாப்பாக'த் தேர்வு செய்யும். முன்னுரிமை வழங்கும். மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் குறிப்பிட்ட அளவுக்குமேல் கல்விக் கடன் வழங்க முடியாது. ஆகவே, தகுதியுடைய, ஏழை மாணவர்கள் இந்த இலவசக் கடன் போட்டியில் நிராகரிக்கப்படுவார்கள்.

தற்போது மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஒரேயொரு நிபந்தனை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அதாவது பெற்றோரின் ஊதியம் மாதம் ரூ. 37,500-க்கு மிகாமல் இருந்தால் இந்தக் கல்விக் கடன், வட்டி தள்ளுபடிச் சலுகையைப் பெற முடியும். ஆகவே, இந்த இலவசக் கடனைப் பெற எல்லோரும் முயற்சி செய்வார்கள் என்பது நிச்சயம். இந்தக் கல்விக் கடன் திட்டத்தில் பயன்பெறவுள்ள 5 லட்சம் மாணவர்களில் 75 சதவீதம் பேர் வசதி உள்ளவர்களாகவும், அரசு இலவசக் கடன் என்று அறிவித்ததால் வாங்க வந்தவர்களாகவும் இருப்பர்.

மாணவர்களின் உயர்கல்வியில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அவர்கள் செய்திருக்கவேண்டிய முதல் வேலை, கல்விக் கட்டணத்தைக் குறைப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் சேர்த்து ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் ஏறக்குறைய ரூ. 1 லட்சம் செலுத்தவேண்டியுள்ளது. மத்திய அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுத்தால், இந்தக் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ. 50,000 என குறைக்க முடியும். இதனால் பெற்றோர் நேரடியாகப் பயன்பெறுவார்கள். அவர்கள் கல்விக் கடன் வாங்கினாலும்கூட, அதுவும் 50 சதவீதமாகக் குறையும். அதற்கு மத்திய அரசே வட்டியைச் செலுத்தினாலும், அதுவும் பாதியாகக் குறையும்.

இதற்கு மாறாக, கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் அரசே ஏற்பதன் மூலம், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறார்கள் என்பதோடு, அனைவரும் கல்விக்கடன் பெறவும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு முழு வட்டி தள்ளுபடி என்றும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி என்றும் அரசு அறிவித்தாலும்கூட, இந்தக் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி நியாயமானதாகவும், உண்மையானதாகவும் அமையும்.
கர்நாடக மாநில அரசைப் போல, கல்விக் கடனில் 6 சதவீத வட்டியை மானியமாக அளிக்கும் வழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டால்கூட, வெறுமனே இலவசக் கடன் என்பதற்கான போட்டி பெருமளவு குறையும்.

அனைத்து மாணவர்களின் கல்விக் கடனுக்கும் வட்டி தள்ளுபடி என அறிவித்து, தேவையில்லாமல் ஒரு போட்டியை உருவாக்கி, அதில் வலுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெறவும், இளைத்தவர்கள் ஒதுங்கி நின்று ஏங்கவும் அரசே பாதை அமைத்துள்ளது. நல்ல திட்டம், ஆனால் நடைமுறையில் சில கடிவாளம் தேவைப்படுகிறது.
நன்றி : தினமணி

No comments: