Monday, October 12, 2009

தரம் தாழ்கிறோமே!

ஒரு தமிழர் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி எழுதாமல் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன வழி?
நல்ல விஷயம் பற்றி எழுத நாலு நாள் தள்ளிப்போகலாம். ஆனால் தவறுகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும்.

பத்திரிகைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதையும், சமுதாயத்துக்குப் பயனில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வெறும் பரபரப்பை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோலவே பத்திரிகைத் துறையிலும் தரக்குறைவு ஏற்பட்டிருப்பது உண்மை.

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட செய்தி, எந்தவிதத்திலும் சமுதாய வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு. இப்படிச் செய்திகள் பிரசுரிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

திரைப்பட நடிகைகளின் ஒழுக்கத்தைப் பொது விவாதமாக்குவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவோ, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவோ பத்திரிகைகளுக்கு யார் அதிகாரம் அளித்தது? பெரிய, பெரிய வண்ணப்படங்களைப் போட்டு நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இதுபோல வரம்புமீறி விமர்சனம் செய்யும் உரிமை பத்திரிகைகளுக்குக் கிடையாது.

அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.

நடிக, நடிகையர் ஒன்றுகூடி நடிகர் சங்க வளாகத்தில் நடத்திய கூட்டத்தில், பத்திரிகையாளர் பற்றிய விமர்சனங்களும், செவிகூசும் வார்த்தைகளால் சில பிரபல நடிக, நடிகையர் நடத்திய சொல்அபிஷேகங்களும் அவரவர் தரத்தையும் கலையுலகத்தின் தராதரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நா கூசாமல் பேசும் இவர்களுக்கு, நாசூக்கான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்திகூடக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.

பிராந்திக்கும், பிரியாணிக்கும், பணத்துக்கும் விலைபோகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று பொத்தாம்பொதுவாக நடிக, நடிகையர் விமர்சிக்கலாம் தவறில்லை. காரணம், அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். தங்களது செய்திகளும், படங்களும் பிரசுரமாவதற்காக இவர்கள் தயாரிப்பாளர்களின் செலவில் மேலே குறிப்பிட்ட தானதர்மங்களை அல்லது கையூட்டல்களைக் கொடுக்கலாம் தவறில்லை. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். இது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்று யாரும் கருதலாகாது. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்.

கலையுலகம், கலையுலகம் என்று கூக்குரலிடும் இன்றைய கலையுலகத்தின் சமுதாயப் பங்களிப்புதான் என்ன? ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் ஆண்டொன்றுக்குச் செய்யப்படும் மொத்த விற்றுமுதல் எவ்வளவு தெரியுமா? சுமார் நூறோ, இருநூறோ கோடிகள். அதுவும் பெரிய படங்கள் வந்தால் மட்டுமே. திருப்பூரிலும் சிவகாசியிலும் இருக்கும் பல தனியார் நிறுவனங்களின் வருட வருமானம்தான் சினிமாத்துறையின் ஒட்டுமொத்த விற்றுமுதல்!

ஆனால் ஊடகங்களில் கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமோ பல மடங்கு அதிகம். இவர்களது கலைச்சேவையால் மொழி வளர்ச்சி அடைகிறதா? நமது கலாசாரம் மேன்மையடைகிறதா? சமுதாயப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றனவா? நாளைய தலைமுறைக்கு நல்ல பல கருத்துகளை முன்வைத்துக் கடமையாற்றுகிறதா? வரிவிலக்குக்காக தமிழில் பெயரை வைத்துவிட்டு தமிழையும் தமிழனின் கலாசாரத்தையும் சீரழிப்பதைத்தவிர இவர்களது கலைச்சேவைதான் என்ன என்று யாராவது விளக்கினால் நலம்.

அரிதாரம் பூசும் நடிகர்கள், தங்களது துறையில் ஈடுபட்டிருக்கும் கடைநிலை ஊழியர்களுக்காகவும், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் எந்தவிதத்தில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை அவர்களது மனசாட்சியே கூறும். இவர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் தங்களது முகத்தைத் தாங்களே ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நலம். நடிகரானாலும் நடிகையானாலும் இவர்களது சாதனைகளின் அடிப்படை எழுத்தாளர்களின் கற்பனாசக்தியும் பேனா வலிமையும்தான். நல்ல கதை அமையாத திரைப்படங்கள் நடித்தது யாராக இருந்தாலும் ஓடுவதில்லை என்பதுதான் திரையுலக சரித்திரம் கூறும் உண்மை.

பத்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?

பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேதனை!
நன்றி : தினமணி

No comments: