உலகத்தில் உள்ள பெரும் பணக்காரர்களைப் பட்டியிலிட அமைப்புகள் இருக்கின்றன. அப்படிப் பணக்காரர்களை அடையாளம் காண்பதும் பட்டியலிடுவதும் மிகவும் சுலபமும்கூட. ஆனால் ஓர் ஏழை யார் என்று தீர்மானிப்பதுதான் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. அதைத் தீர்மானிப்பவர்களும் ஏழையைப் பற்றி அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் (ஆடக) யார் என்பதற்கான கணக்கெடுப்பை நடத்தும்போது யாரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவராகக் கருதலாம், யாரை நீக்கிவிடலாம் என்பதற்கான சில வரையறைகளை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது.
இந்த வரையறைகள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் உள்ள வசதிகள் (டிவி. சமையல் இணைப்பு, மின்வசதி உள்பட), வருமானம், படித்தவர் எண்ணிக்கை, குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை எனப் பலவாறாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா, நிலமற்ற விவசாயக் கூலியா, சாதாரணத் தொழிலாளியா, சுயதொழில் செய்பவரா, வீட்டில் 5-வது வகுப்பு வரை படித்தவர்கள் எத்தனை பேர், யாருக்காவது டிபி, எய்ட்ஸ், ஊனம் உள்ளதா, குடும்பத்தலைவர் 60 வயதுக்கு மேற்பட்டவரா என்பது போன்ற கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண் வழங்கி, 17 மதிப்பெண் கிடைத்தால் அவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர் என்று தீர்மானிப்பார்களாம். இந்த மதிப்பெண் முறை தவறானது என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்கட்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வராதவர் என்று நீக்கிவிடுவதற்கு ஐந்து வரையறைகள் தந்துள்ளனர். அவை: குடும்பத்தின் மாதச் சம்பளம் ரூ. 5,000-க்கு அதிகம், இரண்டு சக்கர வாகனம் வைத்திருத்தல், பண்ணை இயந்திரங்கள் வைத்திருத்தல், நிரந்தர வசிப்பிடம் இருத்தல், அந்த மாவட்ட விவசாயிகளுக்கான சராசரி நிலம் உடையவர் என இந்த ஐந்து வரையறையில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அவரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் சேர்க்கத் தேவையில்லை.
இதில் சிக்கலானதும், அனைவருடைய ஆட்சேபத்துக்குரியதுமான விவகாரம் ஒரு குடும்பத்தின் மாத வருவாய் ரூ. 5,000 என்று வரையறுக்கப்பட்டிருப்பதுதான். ஒரு கட்டடத் தொழிலாளிக்கு நாள்கூலி ரூ. 200 கிடைக்கிறது என்பதற்காக அவரது மாத வருவாயை ரூ. 6,000 என்று கணக்கிட்டு, அவரை ஏழைகள் பட்டியலிலிருந்து நீக்கிவிடுவது என்பது பேதைமையிலும் பேதைமை.
தற்போது தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுவருவாய் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கணக்கீடும் இந்த அடிப்படையில்தான் என்பதைப் பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது.
ஒருவர் நிரந்தரமான வேலையில் இருக்கிறாரா, தாற்காலிக வேலையில் ஈடுபடுகிறாரா, அவரது தொழில் பருவகாலத்தைச் சார்ந்ததா அல்லது தினமும் செய்யக் கூடியதா, அவருக்கு வேலை கிடைக்காத நாள்கள் எத்தனை என்பதையெல்லாம் நிதானமாகக் கணக்கிட்டு, அந்தக் குடும்பத்தின் வருவாயைத் தீர்மானிக்கும் பொறுமை, அங்கே கணக்கெடுக்க வருபவருக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். அவர்களாகத் தோராயமாக வருமானத்தை எழுதிக்கொள்வதுதான் நடைமுறையாக இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் சித்தாள் வேலைக்குப் போவதாகச் சொன்னால், உடனே அந்தக் குடும்பம் வறுமைக்கோட்டிற்கு மேலே போய்விடும்!
ஓர் ஏழையை "வறுமைக் கோட்டிற்குக் கீழ்' தள்ளிய பெருமை அமெரிக்கக் கலாசாரத்துக்குச் சொந்தமானது. நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஆடம்பரமில்லாத, குறிப்பிட்ட கலோரி உணவுக்காக மாதம் எத்தனை ரூபாய் செலவிடுமோ அந்தத் தொகையின் மூன்று மடங்கு தொகையை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கான வருமானமாகத் தீர்மானிப்பது அமெரிக்கப் பொருளாதாரம். அவர்களைப் பொருத்தவரை உணவு, மருத்துவம், கல்வி ஆகிய மூன்றும்தான் வாழ்க்கைச் செலவு. அதற்காக வருவாயை மூன்று சமபங்குகளாகப் பிரித்துக் கணக்கிடப்படுகிறது.
இந்திய வாழ்க்கை முறை வேறானது. இங்கே கொடுக்கப்படும் முன்னுரிமைகளும் வேறானவை. இங்கே ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே சேமிக்கத் தொடங்கினால்தான் கல்யாணம் செய்துதர முடியும். அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக இருக்கலாம். ஆனாலும் குழந்தை ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கே அவமானம் என்று ஏற்று, ஒரு சிறு வருமானத்தை இழந்தால்தான் ஒரு குழந்தைக்குக் கல்வி வாய்ப்பே கிடைக்கும். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் அரசு வழங்கிய இலவச டிவி இருக்கிறது. இந்த டிவிகளில் சீரியல் பார்க்க வேண்டுமானால் கேபிள் கட்டணங்கள் கட்ட வேண்டும். அதற்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் செய்வதற்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு ஆகும் போக்குவரத்துச் செலவுகள் எல்லாம் தனிச்செலவுகள். ஏழைகளின் நல்வாழ்வுக்காகத் திறக்கப்பட்டுள்ள அதிக லாபத்தில் விற்கப்படும் மதுபான-மருந்து?-கடைகள் வேறு! ஓர் ஏழை எப்போதும் ஏழையாக இருப்பதற்கான எல்லாச் சூழலையும் ஏற்படுத்திவிட்ட பின்னர், எதற்காக இந்த வருமான வரம்புகள்?
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதால்தான் இவ்வளவு கறாராக வருமானத்தைத் தீர்மானிக்கிறார்கள். இன்றைய விலைவாசியில் குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ. 1 லட்சம் என்றாலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள்தான் என்பதை ஏன் அரசு நினைக்க மறுக்கிறது.
அமைச்சகம் தந்துள்ள இன்னொரு சலுகை: யார் ஏழை என்பதைத் தீர்மானிப்பதில் அந்தந்தப் பஞ்சாயத்து அல்லது கிராமசபை தீர்மானிக்கலாம் என்பதுதான். இந்த வரத்தை அனைத்துப் பஞ்சாயத்துகளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் - விழிப்புணர்வை ஏற்படுத்தினால், ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும்.
நன்றி : தினமணி
Friday, October 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment