இதுவரை உலகில் இவ்வளவு உயர்ந்த இடத்தை யாருக்கும் அளித்தது இல்லை; அன்று முதல் இன்றுவரை இதில் மாற்றமும் இல்லை; இதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா? இருக்கிறது.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன வெறும் மொழிகள் இல்லை; பொன்மொழிகள்! மனித வரலாற்றில் வழிவழி வந்த மாறாத மணிமொழிகள்.
மக்கள் மட்டுமல்ல, மாமன்னர்களே மண்டியிடும் இடம் குருவின் பாதங்கள். அவர் பேச்சே வேதம்; அவர் மூச்சே அரசியல்; அவர் அன்றி நாட்டில் ஓர் அணுவும் அசையாது; அவர் காட்டும் வழியில்தான் அரசாங்கமே நடந்தது.
முடியுடை மூவேந்தர்களாக இருந்தாலும் புலவர்களைப் போற்றியதற்குக் காரணம் இதுதான்; சாணக்கியனின் வழியில் சந்திரகுப்தன் போனதற்குக் காரணமும் இதுதான்; அர்த்தசாஸ்திரம் ஆக்கப்பட்டதற்கும் அதுவே காரணம்.
மாபெரும் இதிகாசமாகப் போற்றப்படும் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், பகைவர்களான கௌரவர்களுக்கும் ஒரே குரு துரோணாச்சாரியார். அவர் கட்டை விரலைக் கேட்டபோதும் கவலைப்படாமல் எடுத்துத் தந்த மாணவன் கதை, காலம் காலமாகக் கவலையோடும், கண்ணீரோடும் கேட்கப்படுகிறது.
கிரேக்க வரலாற்றில் இடம்பெற்ற ஆசிரியர் சாக்ரடீஸ், அவர் மாணவர் பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டாட்டில் இவர்களை உலகம் இன்னும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறது. அறிஞர் அரிஸ்டாட்டில் மாவீரன் அலெக்சாண்டருக்கு மட்டுமா ஆசிரியராக இருந்தார்? அறிவுலகம் அனைத்துக்குமே ஆசிரியராகப் போற்றப்படுகிறார்.
""நான் வாழ்வதற்காக என் பெற்றோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்'' என்றார் அந்த அலெக்சாண்டர்.
கல்வியா? செல்வமா? வீரமா? இவ்வாறு எத்தனை கேள்விகள் கேட்டாலும் அவற்றில் முதலில் வைத்துக் கேட்கப்படுவது கல்வியேயாகும். அதனை அளிப்பவர்கள் மதிக்கப்படுவதும், துதிக்கப்படுவதும் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பதை எடுத்துக்கூற வேண்டுமோ?
இவ்வாறு மரியாதை அளித்துவரும் மக்கள் சமுதாயத்துக்கு ஆசிரியர் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்குப் பங்கம் ஏற்படாதவண்ணம் நடந்து காட்ட வேண்டுமல்லவா? தேசத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் இளைய சமுதாயத்துக்குக் கல்வியும், ஒழுக்கமும் அளித்து அவர்களைப் பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய நன்றிக்கடனை நமது ஆசிரியர்கள் மறந்துவிடலாமா?
ஆனால் ஆசிரியர்கள் இதற்கெல்லாம் தகுதியுடையவர்களாக நடந்து கொள்கிறார்களா? அன்றைய கால ஆசிரியர்களைப்போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இன்றைய ஆசிரியர்கள் பணிபுரிகிறார்களா? சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தியாகம், தொண்டு இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதில் தவறில்லையே!
""மாணவர்கள் நாட்டை நிர்மாணிக்கும் சிற்பிகள். அவர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களுடைய செயல் நாட்டிற்குத் தலைகுனிவும், ஏமாற்றமும் உண்டுபண்ணும். ஐம்பது ஆண்டுகள் உலகின் பல பகுதிகளில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டவன் என்ற முறையில் ஒன்று கூறுவேன். ஆசிரியர் செய்வதை மாணவர் பின்பற்றுவர். ஆகவே முந்தியவர், சரியான வழிகாட்டுவது அவசியம். மேலும் மூளைத்திறனைவிட உன்னத உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...'' என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆசிரியப் பணி என்பது ஊதியத்துக்காக மட்டுமே செய்யப்படும் தொழில் அல்ல; தொண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த நாட்டின் இளைய தலைமுறை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; அவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியும் சேர வேண்டும்; கல்வியும், அறிவும் அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும்; இந்த நாட்டைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை என்று இவர்கள் கூற முடியாது; கூறவும் கூடாது.
"ஆசிரியர் அடித்ததால் கிணற்றில் விழுந்து தற்கொலை' என்றும், "மாணவி மீது பாலியல் வன்முறை - பேராசிரியர் கைது' என்றும், "மாணவரைச் சாதியைச் சொல்லித் திட்டியதால் தலைமையாசிரியரை எதிர்த்துப் போராட்டம்' என்றும் வரும் செய்திகள் நாட்டின் நலனை நாடுவோருக்குக் கவலை தருகிறது. பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியதால் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாற்காலிகப் பணிநீக்கம்; அவர் மீதான ஊழல் புகார்கள் பற்றி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிடாமல் இருக்க அவரது பாஸ்போர்ட் முடக்கம்; இதற்குப் பல்கலைக்கழக அதிகாரிகளும், ஆசிரியர்களும் துணை என்னும் செய்திகள் ஆசிரியர் சமுதாயத்தை மாசுபடுத்துகின்றன.
ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்தால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது; சில மாணவர்கள் அவசரப்பட்டு தன்னையே மாய்த்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தவறுகளைத் திருத்திக் கொள்வதால் பயன் என்ன?
இவையெல்லாம் எங்கேயோ நடப்பவை, யாரோ சிலரால் செய்யப்படுபவை என்றாலும் அந்தச் செய்திகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆசிரியர் சமுதாயத்துக்குத் தீராத பழியாகவே நின்று நிலவும். மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு ஒழிந்துபோகும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும்.
கறுப்புத் துணியில் கறைபட்டால் கண்ணுக்குத் தெரியாது. வெள்ளைத் துணியில் கறைபடக் கூடாது என்பதில் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் இந்தப் பண்பு நலன்களை வளர்த்தெடுத்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது; அனைவருக்கும் நல்லது.
""தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளி - கல்லூரிகளில் நியமிக்கப்படுகின்றனர்'' என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்; வரவேற்க வேண்டியதுதான்.
இதுதவிர, முறையான பயிற்சியில்லாத புதிய ஆசிரியர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறாத போலி பயிற்சிப் பள்ளிகள் புற்றீசல்கள் போல் புறப்பட்டதுதான். இதற்கு யார் காரணம்?
படிக்காமலேயே, பயிற்சி பெறாமலேயே பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் போதும், தேர்வில் அமர்ந்து விடலாம். அதன்பிறகு கல்வித்துறையை எதிர்த்து நீதிமன்றம் போய் வெற்றி பெற்று விடலாம் என்ற கல்வி வணிகர்களின் கணக்குத்தானே அரசியல்வாதிகளின் துணையோடு தொடர்கிறது.
நீதிமன்றமும் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் நடத்திய கல்வி வணிகர்களுக்குத் தண்டனை தராமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் துணை செய்வதாகக் கூறிக்கொண்டு தீர்ப்பு என்ற பெயரால் துணைபோனது.
போலிப் பல்கலைக்கழகங்கள், போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், போலி மருத்துவர்கள் போலவே போலி ஆசிரியர்களும் புகுந்துவிட்டனர். இதற்கு யார் காரணம்? அரசும், கல்வித்துறையும்தான். போலிக் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்மேல் நடவடிக்கை எடுக்காமல், "அந்தக் கல்விக்கூடங்களில் சேர வேண்டாம்' என்று மக்களை எச்சரித்தால் போதுமா? இந்த எச்சரிக்கை எத்தனை பேருக்குத் தெரியும்?
கடுமையான வெயிலில் பாறைமேல் வைக்கப்பட்டுள்ள வெண்ணெய் உருகி ஓடுவதை, கையில்லாத ஊமையன் கண்ணால் பார்த்துக் கலங்கி நிற்கும் நிலையில்தான் உண்மையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தங்கள் காலத்திலேயே, தங்களுக்கு எதிரிலேயே கல்வி சீரழிவதைப் பார்த்து வேதனைப்படுகின்றனர்; மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
உலகமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கமே உயர் தனிச் செம்மொழி என்று ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகும் தமிழ்வழிக் கல்வி எதிர்க்கப்படுகிறது. எல்லோரும் வரவேற்கும் "சமச்சீர் கல்வி'யை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், "அதனை எதிர்த்து நீதிமன்றம் போவோம்' என்று மெட்ரிக்குலேஷன் நிர்வாகங்கள் அரசாங்கத்தையே மிரட்டுகின்றன.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்குப் பொறுப்புகள் அதிகம். ஆசிரியர் சங்கங்கள் இனியும் ஊதிய உயர்வு கேட்கும் சங்கங்களாக மட்டும் இல்லாமல், எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்களுக்குத் தங்கள் உரிமைகளோடு கடமைகளையும் செய்யும்படி எடுத்துக்கூறத் தயங்கக்கூடாது.
ஆசிரியர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் - குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் அவரும் ஓர் ஆசிரியரிடம் பயின்றவர்தாம். ஆசிரியர்கள் அந்த உயர்ந்த இடத்தை இழந்துவிடலாமா?
(இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்)
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Saturday, September 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பூங்கொத்து!
nandri அன்புடன் அருணா
Post a Comment