கரும்பு மற்றும் சர்க்கரைக்கு தாயகமாகக் கருதப்படும் நம் நாட்டில் கரும்பு பயிரிடுதலிலும், அதைச் சார்ந்த பிற தொழில்களிலும் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியாவில் கரும்புக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற அதிருப்தி விவசாயிகள் மத்தியில் நீண்டகாலமாக நிலவுகிறது. எனவே, இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டன்னுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், 2006-ம் ஆண்டில்தான் கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,000-ஐ எட்டியது.
அப்போதைய சூழ்நிலையில், அதைவிடச் சாகுபடிச் செலவு பல மடங்கு உயர்ந்துவிட்டது. எனவே, கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,000 என நிர்ணயிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்குப் பயனில்லை. இடு பொருள், ஆள்கள் கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துவிட்டதே இதற்குக் காரணம்.
ஒரு ஏக்கருக்கு கரும்பு நடவு செய்யும் போது, உரம், ஆள் கூலி உள்ளிட்ட சாகுபடிச் செலவு ரூ. 22,000-ம், வெட்டுக் கூலி மற்றும் ஆலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு ரூ. 16,000-ம் என மொத்தம் ரூ. 38,000 செலவாகிறது.
தமிழகத்தில் ஏக்கருக்கு சராசரியாக 42 டன் கரும்பு கிடைக்கிறது (அகில இந்திய அளவில் ஏக்கருக்கு சராசரி செலவு ரூ. 62,000; சராசரி மகசூல் 35 டன்கள்).
சாகுபடிச் செலவு பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையிலும்கூட, கடந்த ஆண்டு கரும்பு பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்) டன்னுக்கு ரூ. 1,034 என்றும், இந்த ஆண்டு ரூ. 1,050 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் ஏக்கருக்கு ரூ. 40,000 முதல் ரூ. 45,000-தான் வருவாய் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பாடுபட்டாலும், செய்த செலவைவிட, ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை மட்டுமே லாபம் ஈட்டும் நிலை உள்ளது. அகில இந்திய அளவிலான சராசரி மகசூலுடன் ஒப்பிடுகையில் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர்.
குத்தகை நிலமாக இருந்தால், நிலத்துக்கான குத்தகைத் தொகை கிட்டத்தட்ட ரூ. 20,000 செலுத்த வேண்டியுள்ளது. எனவே, குத்தகை விவசாயிகளுக்கு இந்த விலையால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைதான் உள்ளது.
வெட்டுக் கூலி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை ஆலையே ஏற்றுக் கொண்டு டன்னுக்கு ரூ. 2,000 அல்லது ரூ. 2,500 என விலை கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக 50 சதம் விலை நிர்ணயித்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழு அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 2,100 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்றாலும், இந்த விலையை அமல்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், வரும் கரும்பு பருவத்துக்கான (அக்டோபர் 2009-செப்டம்பர் 2010) விலையை டன்னுக்கு ரூ. 1,077.60 என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. ரூ. 27.60 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணயம் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், சர்க்கரை பிழிதிறனும் 9-லிருந்து 9.5 சதமாக உயர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளை மேலும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
கடந்த 1972-73-ம் ஆண்டில் பிழிதிறன் 9.4 சதத்திலிருந்து 8.5 சதமாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2005-06-ம் ஆண்டில் சர்க்கரை பிழிதிறன் 9 சதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் விளையும் கரும்பு பயிர்களில் சர்க்கரை பிழிதிறன் 8 முதல் 8.5 சதம்தான் இருக்கிறது.
இந்நிலையில், 9.5 சதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் கரும்பு சாகுபடி குறித்த அச்சம் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இந்த வேதனையான சூழ்நிலையிலும்கூட, மாநில அரசு நிர்ணயிக்கும் பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஏற்பதில்லை. மாறாக, அரசு நிர்ணயித்த விலையைவிட ஏறத்தாழ ரூ. 50 குறைத்துத்தான் விவசாயிகளுக்கு வழங்குகின்றன.
விலை நிர்ணயத்தின்போது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளும், ஆலோசனைகளும் பெறப்படுவதுமில்லை. முன்னோடி விவசாயிகளின் கருத்துகளும் புறக்கணிக்கப்படுகின்றன.
எனவே, உற்பத்தி செய்த செலவைவிடக் குறைவான விலைக்கு விற்கும் நிலை இருப்பதால், லட்சக்கணக்கான விவசாயிகள் சொத்துகளை இழந்து, வங்கியில் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் திணறுகின்றனர். மேலும், அரசு தள்ளுபடியை எதிர்பார்த்து, தனியாரிடம் பெற்ற கடனையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
அரிசிக்கும், கோதுமைக்கும் அதிக விலை கிடைத்ததால், பல விவசாயிகள் கரும்பிலிருந்து மாற்றுப் பயிருக்குச் சென்றுவிட்டனர். இதனால், தமிழகத்தில் மட்டும் கரும்பு உற்பத்தி 4 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் சர்க்கரை கொண்டு வரப்பட்டாலும், அதன் மீதான கட்டுப்பாட்டால் விவசாயிகளுக்குப் பாதகமே தவிர, எந்தவிதப் பயனும் இல்லை.
குறிப்பாக, 1966-ம் ஆண்டு சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை, 1966-ம் ஆண்டு கரும்பு கட்டுப்பாட்டு ஆணை, 1979-ம் ஆண்டு லெவி சர்க்கரை வழங்குதல் உத்தரவு, 1977-ம் ஆண்டு சர்க்கரை சிப்பம் மற்றும் சந்தை ஆணை, 1982-ம் ஆண்டு சர்க்கரை, தீர்வைச் சட்டம் ஆகியவற்றால் தொடக்கத்தில் சில பயன்கள் கிடைத்திருந்தாலும், அதன் பிறகு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இந்த நிலை தொடர்ந்தால் கரும்பு சாகுபடி கேள்விக்குறியாகி, சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
கட்டுரையாளர் : வி. என். ராகவன்
நன்றி : தினமணி
Tuesday, August 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment