Tuesday, July 28, 2009

கவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு...!

2008 - 2009, பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 71.9 சதவிகித கிராமப்பகுதி மக்களும், 32.3 சதவிகித நகர்ப்புறப் பகுதி மக்களும் ஒரு நபருக்காகச் செலவிடும் நுகர்வு செலவினம் ஒரு நாளுக்கு, ரூ. இருபதுக்கும் குறைவானதே. இதன் அடிப்படையில் தேசிய அளவில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளதாக சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இந்தக் கணக்கெடுப்புகளும் தோராயமானவையே. உண்மையில் பெரும்பான்மை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையோ, வாழ்வாதாரமோ, சமூகப் பாதுகாப்போ இன்றி அன்றாடம் பிழைப்பிற்காக அல்லலுறும் நிலையிலேயே உள்ளனர். இந்நிலையில், மக்கள்தொகையில் 40 சதவிகிதம் உள்ள குழந்தைகளின் நிலையை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 76 சதவிகிதம் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைச் சார்ந்தே வாழ்பவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்களின் பெற்றோர்கள் அடிப்படை உயிர் வாழ்விற்கான உணவு உத்தரவாதத்திற்கே போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான்.

கிராமப் பகுதிகளில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின், உணவிற்கு கூட அரசின் அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளின் ஒருவேளை மதிய உணவுத் திட்டத்தையே நம்பியுள்ளனர். இவ்வாறு பெரும்பான்மை மக்கள், அரசின் நலத் திட்டங்களை நம்பி வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உணவு, ஆரோக்கியம் - மருத்துவம், கல்வி, பாதுகாப்பு (பெற்றோர் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு) ஆகியவற்றுக்கான நிதியானது, சமூக சேவைத் துறைகள் என்ற தலைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, சமூகத் துறைகளுக்கான பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்கும் பொதுவான பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இரண்டு இயந்திரங்களும் இதற்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலம் சம்பந்தப்பட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு 2007 - 08-ல் 4.93 சதவிகிதமாக இருந்தது, 2008 - 09-ல் 4.13 சதவிகிதமாகக் குறைந்து, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 - 10 பட்ஜெட்டில் 4.15 சதவிகிதமாக உள்ளது. இந்த 0.2 சதவிகிதம் உயர்வின் மதிப்பு ரூ. 5,193 கோடி.

இதில் அதிகபட்சமாக கல்விக்கான செலவினம் ரூ. 3,515 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில், 1,450 கோடி கூடுதல் ஒதுக்கீடாக மத்திய அரசு நடத்தும் கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,350 கோடி நடுநிலைக் கல்விக்கான பள்ளிகள், வகுப்பறைக் கட்டடங்களுக்கான திட்டமும், பிரதமர் அறிவித்த மாடல் பள்ளிகளுக்கான (வட்டார அளவில்) 350 கோடி திட்டமும் கல்விக்கான கூடுதல் செலவினத்தில் அடங்கும். மற்றபடி, மதிய உணவுத் திட்டத்திற்கோ, தொடக்கக் கல்விக்கோ எந்தவித நிதி உயர்வும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 13,100 கோடியும் உலக வங்கிக் கடன் மூலமே செயல்படுத்தப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும், சமமான, தரமான, கட்டாயத் தொடக்கக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்நிலையில் 6 வயது முதல் 14 வயது வரை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையின்படி நிறைவேற்ற வேண்டிய தொடக்கக் கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை.

ஏற்கெனவே, தொடக்கக் கல்விக்கான 88 சதவிகிதம் நிதி, மாநில அரசுகளாலேயே ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்கள் தொடக்கக் கல்வியில் தனியார்மயத்தை அதிக அளவில் ஊக்குவித்து வருகின்றன. இதனால் கல்வியில் மிக அதிகமான பாகுபாடுகளைக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பட்ஜெட்டில் (4.15 சதவிகிதம்), 71 சதவிகிதம் மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்காகவும், 11 சதவிகிதம் குழந்தைகள் ஆரோக்கியம் - மருத்துவம் (போலியோ சொட்டு மருந்து, பிற தடுப்பு மருந்துகள் திட்டம் போன்றவற்றுக்கானவை), 17 சதவிகிதம் குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடிகள் - ஊட்டச்சத்து - ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை), 0.8 சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் (ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மையங்கள் அமைத்தல்) ஒதுக்கப்பட்டுள்ளது. இப் புள்ளிவிவரங்களை மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதுபோல் தோன்றும். ஆனால் இவை அனைத்தும் அவ்வப்போது வெளியிடும் திட்டங்களே அன்றி, நிலையான முதலீடுகள் அல்ல.

மேலும், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போதும், அடிமட்ட அளவில் குழந்தைகளுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த ஒதுக்கீடு மிகச் சொற்பமே. 2005-ல் தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுப்பினராக இடம் பெற்றிருந்த கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுமம் தெரிவித்த கணக்கின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான, கட்டாயத் தொடக்கக் கல்வி 14 வயது வரை உறுதி செய்ய வேண்டுமானால், தற்போது தொடக்கக் கல்விக்காகச் செலவிடப்பட்டு வரும் ரூ. 47,100 கோடியுடன் (2003 - 04) சேர்த்து கூடுதலாக ஒவ்வோர் ஆண்டும் 53,500 கோடி முதல் 72,700 கோடி வரை 6 ஆண்டுகளுக்கு மொத்தம் 3,21,000 கோடியிலிருந்து 4,26,000 கோடி வரை செலவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நிதியை மத்திய அரசு ஏற்கெனவே வசூலித்து வரும் கல்வி வரியைக் கொண்டு சரிக்கட்டலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இவையனைத்தும் மத்திய அரசின் நிதிக் கொள்கையைப் பொறுத்தே செயல்படுத்தப்படும். தற்போதைய நிலை, மத்திய அரசு எப்படியாவது இக்கூடுதல் நிதிச்சுமையை தனியார்மயத்தைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்று பார்ப்பதாகவே தெரிகிறது. இதனால் பொதுப் பள்ளிக் கல்வி முறையின் மூலமான சமச்சீர்கல்வி என்பது எட்டாக்கனியாகி வருகிறது.

குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு இந்தப் பாடுபட்டு வரும் நிலையில், 2008 - 09-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக அப்போது ஒதுக்கப்பட்ட 180 கோடியில், 54 கோடி மட்டுமே மாநிலங்களால் செலவிடப்பட்டதால், 2009 - 10-ம் நிதி ஆண்டில், அதற்கான ஒதுக்கீடு 60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த பட்ஜெட் குறைப்பிற்கு காரணம், இதில் பெரும் தொகை ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டட உருவாக்கத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அவற்றை நடைமுறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் உள்ள நிர்வாகச் சிக்கல்களே காரணம்.

மாவட்ட அளவில், அனைத்துத் துறைகளுக்கும் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற ஒரு நபரே பொறுப்பாக இருப்பதால், அவரால் அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் குறித்த நேரத்திற்கு நிறைவேற்ற இயலாமல் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தவிர, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சட்டம், ஒழுங்கு, வருவாய் நிர்வாகம் ஆகிய மிகப்பெரும் இரண்டு பொறுப்புகள் உள்ளன. மேலும் ஓராண்டுக்கான நிதி, மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் வந்து சேர்வதற்குள் பாதி நிதியாண்டு முடிவடைந்து விடும். மீதமுள்ள காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், தரமில்லாமல், ஊழல் குறைபாடுகளுடனே நிறைவேற்றப்படுகின்றன அல்லது செலவிடப்படாமல் வைக்கப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் அனைத்து செலவினங்களும், திட்டம் சார்ந்த நிதியாகவே உள்ளது. மேலும், அவை மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே அதற்கான வரையறைகளைப் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பெரும்பாலான தொகை மாநிலங்களால் செலவிடப்படாமலேயே உள்ளது.

உதாரணமாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பிற்கான திட்டம் என்பது அரசின் கண்ணோட்டத்தில் குழந்தைகள் இல்ல கட்டடங்கள் அமைத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்களைக் கொண்டு, சமூகக் குழுக்களை வலுப்படுத்துவதன் மூலமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசுகள் தங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் திட்ட நிதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

நிலையான முதலீடுகள் குழந்தைகளுக்கான முழுமையான வளர்ச்சி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. இதற்கு உதாரணம், கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். 6 வயது வரையிலான பள்ளி முன்பருவப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வேண்டிய இத்திட்டம் சரியான முதலீடின்றி, ஊழியர்களுக்கான மிகக் குறைந்த ஊதியத்துடனே செயல்படுத்தப்படுகிறது. தேசம் முழுமைக்கும் இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,705 கோடி மட்டுமே.

உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரம் அளித்து, அதற்கான அரசின் நிதி முறையாக ஒதுக்கப்பட்டால் பல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி திட்ட நிதியாக மட்டுமல்லாமல், திட்டம் சாரா முதலீடுகளாக அமைந்து, உள்ளாட்சிகள் உள்ளூர் சூழலுக்குத் தக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நடைமுறையும் கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும், உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, குடிநீர் விநியோகம், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய சமூக சேவைத் துறைகள், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமையாக இல்லை. இவை தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே அலங்காரத்திற்காக இடம்பெறும் வாக்கியங்களாக உள்ளன.

மேலும், பாரம்பரியமாக இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், குழந்தைகளுக்கான மூலதனமாக அல்லாமல், மத்திய அரசின் நலத்திட்டங்களாகவே தொடர்வது குழந்தை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.

போதுமான நிதி ஆதாரங்களும், ஊழியர்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளுக்கும் நேரிடையாக எந்தவித குளறுபடிகளும் இன்றி சென்றடைய வேண்டுமானால் மத்திய, மாநில உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இவற்றுக்கான, நிதிச் சுமையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதோடு, முறையான வழிகாட்டுதலுடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே மக்களால் ஜனநாயகத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டும். இதற்கான, கொள்கை, சட்டம், நிர்வாக மாற்றங்களும், சீர்திருத்தங்களும் இன்றைய உடனடி தேவை.
கட்டுரையாளர் : கல்பனா சதீஷ்
நன்றி : தினமணி

No comments: