Saturday, July 18, 2009

வாக்கினிலே இனிமை வேண்டும்!

""பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகை என்பது உமக்கே தெரியும்...'' திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி கதாபாத்திரம் நக்கீரரிடம் பேசும் இந்த வசனத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன அண்மைக் கால அரசியல் சம்பவங்கள்.
அரசியல்வாதிக்குப் பேச்சுதான் மூலதனம். அதைக் கொண்டுதான் தன் நியாயத்தை நிலைநாட்டுவதும் மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்புவதும் சாத்தியமாகும். ஆனால், மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க் கட்சித் தலைவரை கண்ணியமற்ற, தரக்குறைவான சொற்களால் விமர்சனம் செய்யும்போது, தேவையற்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. அகில இந்திய அளவில் பேசப்படும் நபர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் யார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்களுக்கே கூடத் தெரியுமா என்பது சந்தேகம்தான். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஹேமவதி நந்தன் பகுகுணாவின் புதல்வியான ரீட்டா பகுகுணாவின் பெயர் இப்போது இந்திய அளவில் அனைத்து ஊடகங்களிலும் பேசப்படுகிறது. அனைத்து செய்தித்தாள்களிலும் முதல் பக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாயாவதி அரசு நிதியுதவி அளிப்பது குறித்து விமர்சனம் செய்ய ரீட்டா பகுகுணாவுக்கு முழு உரிமை உள்ளது. கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ரீட்டா பகுகுணா பயன்படுத்திய சொற்கள்தான் ஆட்சேபத்துக்குரியவை. குறிப்பாக, மாயாவதியும் ஒரு பெண், அவரை விமர்சனம் செய்யும் தானும் ஒரு பெண் என்ற உணர்வே இல்லாமல், தரக்குறைவாகப் பேசியதால்தான் அங்கே வன்முறைகளும், தீயிடும் சம்பவங்களும், கைதுகளும் நிகழ்ந்தன.
நடந்து முடிந்த தேர்தலின்போது, பாஜக வேட்பாளர் வருண் காந்தி ஒரு கருத்தைத் தெரிவிக்க, அது மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. அதுநாள்வரை, வருண்காந்தியைப் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைந்த நபர்கள்தான். ஆனால் அவரது பேச்சுக்குப் பிறகு இந்தியா முழுவதற்கும் அவர் பெயரைச் சொன்னாலே போதும் என்கிற அளவுக்கு பிரபல்யம் அடைந்தார். இதே மாயாவதி அரசு அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததும், அது தொடர்பாக எழுந்த கருத்து மோதல்களும் அவரை அரசியல்வாதியாக மாற்றிவிட்டன. இன்னமும் வழக்கு முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால், இப்படிப் பேசுபவர்களை அவர்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை கண்டிப்பதோ அல்லது அவர்கள் பேச்சுக்காக தண்டிப்பதோ கிடையாது என்பதுதான்.
கட்சித் தலைமை மகிழ்கிறது என்பதற்காகவே இத்தகைய மோசமான, தரக்குறைவான பேச்சுகள் மற்றும் கேலிகள், விமர்சனங்களை முன்வைக்க இரண்டாம் நிலைத் தலைவர்கள் முற்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படும்போது, கட்சித் தலைமை இத்தகைய தரக்குறைவான போக்கை அங்கீகரிப்பதாகவே அமைந்துவிடுகிறது. இத்தகையவர்களை தொடக்கத்திலேயே கண்டிக்கவும், பதவிகளிலிருந்து நீக்கவும் கட்சித் தலைமை முற்பட்டால், இந்த அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஒரு மனிதரின் நடவடிக்கை மீதான வெறுப்பு தனிநபர் மீதான வெறுப்பாக மாறுவது சரியான பண்பாடு அல்ல. ஆனால், தமிழக அரசியல் கட்சி மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும், தங்கள் கட்சித் தலைமை மேடையில் அமர்ந்திருக்க, எதிர்க்கட்சித் தலைமையின் கொள்கையை விமர்சிக்காமல் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளை விமர்சித்து காயப்படுத்தி, கைத்தட்டல் பெறுவதுதான் அதிகம் நிகழ்கிறது.
"திரு. கருணாநிதி அவர்கள்' என்று சொல்லியோ, "செல்வி ஜெயலலிதா அவர்கள்' என்று சொல்லியோ அவர்களது கொள்கைகளை அழகான தமிழ்ச் சொற்களால் விமர்சிக்கும் நாநலம் இன்றைய அரசியலில் காணாமல் போய்விட்டது. இதே நிலைமைதான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஒவ்வோர் அரசியல் கட்சித் தலைவரும் நினைத்தால் இதை முற்றிலுமாக மாற்றி அமைக்க முடியும்.
பொய் சொல்லாதிருக்கும் "வாக்குச் சுத்தம்' அரசியலில் மிகமிகக் கடினம்தான். "வார்த்தைச் சுத்தம்' கூட அத்தனைக் கடினமா, என்ன?
நன்றி : தினமணி

No comments: