தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் மேல் முறையீட்டு மனுக்கள் பெறப்படுகின்றன என்று மாநிலத் தகவல் ஆணையர் ஆர். பெருமாள்சாமி தெரிவித்திருக்கிறார்.
இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மேல்முறையீட்டு மனுக்கள் மாநிலத் தகவல் ஆணையத்துக்கு வருகின்றன என்றால், அதற்கு என்ன பொருள்? தகவல் பெறும் உரிமை குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்பதாக நினைக்க வைத்தாலும், தகவல் மறுக்கப்படுவதால்தான் அதிக அளவில் மாநிலத் தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்கிறார்கள் என்பதுதானே உண்மையான பொருள்! அதாவது, தகவல் தர மறுப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பதுதான் இதன் தன்னிலை விளக்கம்!
தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்கள் வரையிலும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. ஒளிவு மறைவு இல்லாமல் அதிகாரிகள் பதில் கூறினார்கள். இத்தகைய பதில்கள் அரசு நிர்வாகத்தின் கோளாறுகளை அம்பலப்படுத்தும் வலுவான சாட்சியங்களாக மாறுவதைக் கண்டவுடன், அரசாங்கமே "சில துறைகள் பதில் தர வேண்டியதில்லை' என்று சட்டப்படி விலக்கு அளித்தது. அரசின் இந்த தவறான முன்னுதாரணம், அரசு அதிகாரிகளுக்கு தெம்பைக் கொடுத்துவிட்டது. அவர்களும் பதில் அளிக்காமல் இருக்கும் வழிகளைக் கண்டடைந்துவிட்டனர்.
அண்மையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் "ஒரு பள்ளிச் சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?' என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டார். "அந்தப் பணி அனுமதிக்கப்பட்டு, இத்தனை லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டது' என்று பதிலும் கிடைத்தது. அந்த பதில் கிடைத்தபிறகுதான் சுற்றுச்சுவர் எழுப்பாமலேயே பணம் கரைந்த ஊழலை அம்பலப்படுத்தவே இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார் என்பது அதிகாரிகளுக்குப் புரிந்தது. அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துவிட்டனர். சக ஊழியர் பாதிக்கப்படுகிறார்; நாளை நமக்கும் இதே கதி ஏற்படலாம் என்ற புரிதலுடன் பதில் தர மறுக்கின்றனர் அரசு அதிகாரிகள்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்குள் பதில் தராவிட்டால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். பதில் அளிக்காமல் இருந்தால்தானே இந்த பிரச்னை!. அதனால் பதில் அளித்துவிடுகிறார்கள். என்ன பதில் தெரியுமா? ""தாங்கள் கேட்டுள்ள கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 2 (ஊ)-ல் குறிப்பிட்ட தகவல் என்ற வரையறையில் வராது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது''.
இதற்காக அதே துறையில் மீண்டும் இரண்டாவது முறை முறையீடு செய்தாலும் இதே பதில்தான். ஆகவே மாநிலத் தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். ஆகவேதான், மாநிலத் தகவல் ஆணையத்துக்கு மேல்முறையீட்டு மனுக்கள் குவிகின்றன. கடந்த ஜூன் மாதம் வரை ஒரு லட்சத்து பதினோராயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதில் 8341 மனுக்கள் மட்டுமே விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான மேல்முறையீட்டு மனுக்கள் வரும் என்றால், அவற்றுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது மிகமிக அரிது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனைக் கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். அவற்றில் சில கேள்விகள் வேண்டுமானால் "தகவல்' என்ற வரையறைக்குள் வராமல் இருக்கலாம். ஆனால் எல்லா கேள்விகளையும் ஒட்டுமொத்தமாக மறுப்பது எந்தவகையில் நியாயம்? ஆனால் அப்படித்தான் செய்கிறார்கள்.
"ஓர் ஓய்வூதியதாரர் இறந்த மாதத்தில், அவர் உயிரோடு இருந்த நாள்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா?' என்ற மிகச் சாதாரண கேள்விக்கு, தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீடு அலுவலர் இருவரும் சொல்லி வைத்தாற்போல, பிரிவு 2 (ஊ)-வை மேற்கோள்காட்டி பதில் தர மறுப்பதைக் காணும்போது, அதிகாரிகள் திட்டமிட்டுத் தெளிவாக செயல்படுகிறார்கள் என்பது புரிகிறது.
மாநில அரசு அதிகாரிகள்தான் இப்படியென்றால், பொதுத்துறை நிறுவனமான வங்கிகள்கூட இதே பாணியைக் கையாளுகின்றன. "எந்தெந்த வைப்பு நிதிக்காக (வருமான வரிப் பிடித்தம் தவிர்க்க) படிவம்-15ஜி தரப்பட்டது என ரசீது அல்லது அத்தாட்சியை வங்கி தன் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமா, இல்லையா?' என்பது ஒரு சாதாரண கேள்வி. தரவேண்டும், வேண்டியதில்லை என்ற எந்த பதிலையும் தெரிவிக்கலாம். ஆனால் அவர்களும் கிளிப்பிள்ளை போல சொல்கிறார்கள்- "தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 2 (ஊ)-ல் குறிப்பிட்டுள்ள....'
முள்ளை முள்ளால் எடு, வைரத்தை வைரத்தால் அறு, சட்டத்தை சட்டத்தால் நெரி- அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
நன்றி : தினமணி
Monday, July 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment