Monday, March 16, 2009

பண்ணை சாரா கடன்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் வசூலாகாமல் உள்ள பண்ணை சாராக் கடன்களுக்கான அபராத வட்டியை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் காலங்கடந்து நிலுவையில் இருந்த பண்ணை சாராக் கடன்களை வசூலித்து, வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த, வட்டிக் குறைப்புத் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இத்திட்டம், கடந்த 2008 ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களை சரிவர திருப்பி செலுத்தாவிட்டால், அவை தவணை தவறிய கடன்களாகி, வசூல் ஏதுமின்றி வங்கிகளின் லாபம் குறைந்தது. இந்நிலையில், பண்ண சாரா கடன்கள், நில அடமான கடன், தொழில் மற்றும் வணிகம் செய்ய பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டுமென சட்டசபை பட்ஜெட் தொடரில் வலியுறுத்தப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்துக்கு கடந்த மாதம் 25ம் தேதி பதிலளித்த நிதியமைச்சர் அன்பழகன், 'இந்த கடன் தொகை 739 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளதால், அவற்றை ரத்து செய்ய முடியாது. எனினும் கடன் தொகையை மட்டும் செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார். இதன்படி, பண்ணை சாராக் கடன்களுக்கான வட்டிக் குறைப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதன்படி, அபராத வட்டியை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 28ம் தேதி, கூட்டுறவுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பண்ணை சாராக் கடன்கள், சிறு போக்குவரத்துக் கடன்கள், வீட்டு வசதி கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், நுகர்பொருள் கடன்கள், சம்பளக் கடன்கள், தொழில் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், சிறு வியாபாரக் கடன், தொழில், சேவை வியாபாரம் போன்றவற்றின் கீழ் வரும் இதரக் கடன்கள், தனி நபர்கள் பெற்ற காசுக் கடன்கள் ஆகியவற்றுக்கு இத்திட்டம் பொருந்தும்.
இத்திட்டப்படி, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பண்ணை சாராக் கடன்கள் பெற்று, தவணை தவறி நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும், 2001 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வட்டி விகிதம் 12 சதவீதமாக கணக்கிடப்பட்டு, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள கடன்களுக்கான இச்சலுகை, கடன்காரர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தவறிய நிலுவைத் தொகைக்கு மட்டுமே நேர் செய்யப்படும். இதனால், கூட்டுறவு வங்கிகளில் இருந்து நிதி வெளியேற்றம் ஏதும் இருக்கக் கூடாது. இதில், தீர்ப்பாணை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப் பட்ட இனங்களுக்கும், மற்ற சாதாரணக் கடன்கள் போலவே வட்டி குறைப்பு அளிக்கப்படும். திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி வசூலிக்க வேண்டிய தொகையில் 25 சதவீதத்தை இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, மீதமுள்ள 75 சதவீத தொகையை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்தி கடனை முடிக்க, கடன்தாரர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட தேதிக்குள், இச்சலுகையை பயன்படுத்தி தவணை தவறிய கடன்கள் முழுவதையும் செலுத்துவோருக்கு மட்டுமே சலுகைகள் முறைப்படுத்தப்படும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் நேர் செய்யாதவர்களிடம், வர வேண்டிய தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வங்கிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்படுவதாலும், அபராத வட்டி தள்ளுபடி செய்வதாலும் ஏற்படும் நிதியிழப்பை அந்தந்த கூட்டுறவு வங்கிகளே ஏற்க வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட பிப்ரவரி 28ம் தேதி நிலுவையில் உள்ள கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஏற்கனவே, 2008 ஜூன் 30ம் தேதி வரை வட்டி குறைப்புத் திட்டப்படி, 25 சதவீத தொகையை மட்டும் செலுத்தி, எஞ்சிய 75 சதவீத தொகையை அந்த தேதிக்குள் செலுத்த முடியாமல் போன கடன்தாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு கூட்டுறவுத் துறை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: