Monday, July 28, 2008

பணவீக்கத்தால் 32 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் பாதிப்பு


இந்தியாவில் பணவீக்கத்தால், விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து, சாதாரண மக்கள் வாழ்க்கை மட்டுமல்ல, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கன்சல்டன்சி நிறுவனம், ஆன்-லைன் மூலம் இது தொடர்பான தகவல்களை திரட்டி, ஆய்வு செய்துள்ளது. அது வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுப்பொருட்கள் முதல், பல பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகள் போட்ட திட்டங்கள் எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திட்டங்களில் மதிப்பீட்டு செலவு அதிகரித்து விட்டது; சில திட்டங்கள் தாமதப்படுகின்றன. இன்னும் சில திட்டங்கள் இப்போதைக்கு கைவிடப்பட்டுள்ளன. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கம் கண்டிப்பாக குறைந்து, நிலைமை சீராகும் என்று நிதி ஆலோசகர்கள் திடமாக நம்புகின்றனர். ஆனாலும், இப்போதுள்ள நிலையில் பல முக்கிய திட்டங்கள் தாமதப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு பக்கம் உற்பத்தி குறைகிறது; இன்னொரு பக்கம் வாங்கும் சக்தி குறைகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை. முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் உள்ளதால், மொத்த உற்பத்தி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 400. பணவீக்கத்தால் இந்த திட்டங்ளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் 11 ஆயிரம் திட்டங்கள் மொத்த மதிப்பு, 15 லட்சம் கோடி ரூபாய். திட்ட அமலாக்க விகிதம் 45 சதவீதமாக இருந்தது, பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து விட்டதால், திட்டப்பணிகள் வேகம் 42 சதவீதமாக குறைந்து விட்டது. இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் கூறுகையில், 'பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. இதனால், திட்டச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
அரசு திட்டங்களில் முக்கியமானவற்றை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிட்டாலும், தனியாரை பொறுத்தவரை, அவசர திட்டங்கள் தவிர, மற்றவற்றை தாமதம் செய்யவே நினைக்கின்றனர்; இதனால், இழப்பு குறையும் என்பதும் அவர்கள் கணிப்பு' என்று தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 1,750 திட்டங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்


4 comments:

rapp said...

என்னங்க இப்படி சொல்றீங்க, நம்ம நிதி அமைச்சரைப் பொறுத்தவரையில் ஒரு நாட்டில் பணவீக்கம் இருந்தா நாம பணக்கார நாடுன்னு அர்த்தம், இது தெரியாம நாம தப்புத் தப்பா புலம்பறோம் பாருங்க

சின்னப் பையன் said...

இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மந்திரக்கோல் ஜார்ஜ் புஷ் கையில் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

பாரதி said...

rapp நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜிம்பாப்வே நாடு தான் இன்று பணக்கார நாடுபோல் தெரிகிறது

பாரதி said...

//ச்சின்னப் பையன் said...
இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மந்திரக்கோல் ஜார்ஜ் புஷ் கையில் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....//


ச்சின்னப் பையன் வருகைக்கு நன்றி .
நம்பத்தகாத வட்டாரங்களை என்றுமே நம்பிவிடதிர்கள்.