Monday, January 4, 2010

நண்பனாக மாறுங்கள்

காவல் நிலையங்களில் பொதுமக்கள் தரும் புகார்களை முதல் தகவல் அறிக்கையாகப் (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவும்கூட, காவல்துறை முன்னாள் தலைவர் ரத்தோர், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ருசிகாவிடம் முறைகேடாக நடந்துகொண்ட சம்பவத்தில், புகாரை உடனே பதிவு செய்யாததும், காவல்துறை அதிகாரிகளின் குறுக்கீடும்தான் தீர்ப்புக் கிடைக்க 19 ஆண்டுகள் ஆனதற்குக் காரணம் என்று பல்வேறு தரப்பினர் நாடுமுழுவதும் கண்டித்துப் பேசிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் தரும் புகாரை ஏற்று, முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்ய மறுக்கும் காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும், அதே வேளையில், தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதும் உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய புதிய அணுகுமுறை.

ஆனால், நடைமுறையில் தற்போது உள்ள சட்டத்திலேயே, பொய்ப் புகார் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுவரை தண்டனை கொடுக்கவும், புகாரைப் பதிவு செய்யாத காவலர் மீது இந்திய குற்றவியல் சட்ட விதி 154-ன் படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய முடியும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்குட்பட்ட புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் தண்டனை நிச்சயம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை என்பதுதான் பிரச்னையே. இந்த நடவடிக்கை பெரும்பாலும் துறை நடவடிக்கையாக அமைந்துவிடுவதால், எல்லா காவலர்களையும் காவல்துறை காலம்காலமாக காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. காவல்கைதி மரணத்துக்குக் காரணமானவர்களையும் காவல்நிலையத்திலேயே கற்பழித்தவர்களையும்கூட துறை நடவடிக்கை மிக சாமர்த்தியமாகக் காப்பாற்றிவிடுவதால்தான், காவல்துறையில் தொடர்ந்து தவறுகள் நடக்கின்றன. உங்கள் நண்பன் என்று சொன்ன போதிலும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.

இருக்கின்ற சட்டமே பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், இப்போது உள்துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவால் காவல்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட பொதுமனிதரின் புகாரை, காவல்துறை ஏற்க மறுப்பதற்கும் அல்லது வழக்கைப் பதிவு செய்யக் காலதாமதம் செய்வதற்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்- ஒன்று ஊழல், இரண்டாவது பணிச்சுமை.

காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் முதலில் பலியாகிறவர் காவல்நிலையத்தைத் தேடிப்போய் புகார் கொடுக்கும் பொதுமனிதர்தான். புகார் கொடுப்பவரையே ஒரு குற்றவாளியைப் போல நடத்தும் மனோபாவம் காவல்துறையின் நாள்பட்ட வியாதி. இந்த வியாதியின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கிறதென்றால், ஒரு பெண் காவலர் வீடு திரும்பவில்லை என்று புகார் கொடுக்கச் சென்ற கணவரை எல்லையைக் காரணம் காட்டி அலைக்கழிக்கிற அளவுக்கு நோய் முற்றிக்கிடக்கிறது. பாதுகாப்புப் பணிக்காக பல்லடம் சென்ற பெண் காவலர், பாலியல் வன்முறைக்குப்பின் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரிந்த பிறகுதான், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கணவரை அலைக்கழித்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு பெண்-காவலர் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆண்-காவலர் மீது வழக்குத் தொடரவும் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது என்றால், இந்தக் காவல் நிலையங்கள் பொதுமக்களை என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

காவல்நிலையத்தைத் தேடி வருபவர், தாங்கொணா துயரத்துக்கு ஆளாகி, கையறு நிலையில் நம்மிடம் வருகிறார் என்ற எண்ணமே இல்லாமல், "நம் கடைக்கு இன்று லாபம் தரப்போகும் நுகர்வோர் வருகிறார்' என்று பார்க்கும் ஒரு வியாபாரியின் மனநிலை மாறாமல், வெறும் சட்டத்தால் மட்டும் இதை மாற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை.

ரெüடித்தனம், முறைகேடு, பாலியல் புகார், கொலை எதுவென்றாலும் உடனடியாக விசாரணை நடத்துகிறார்கள். என்ன விசாரணை? குற்றம் சாட்டப்படும் நபர் யார், எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர், அவரது பின்புலம் என்ன என்பதுதான். அதன் பிறகுதான் புகார் கொடுப்பவர் யார் என்ற பேச்சு எழுகிறது. அரசியல்வாதியின் பலத்துக்கு ஏற்ப முதல் தகவல் அறிக்கை பலம் குறைக்கப்படுகிறது. வீட்டில் திருட்டு, வாகனத் திருட்டு, ஜேப்படி போன்ற அன்றாடத் துயரங்களுடன் வருபவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அந்தந்தக் காவல்நிலைய எல்லைக்குள் ஆண்டுதோறும் எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் திருடு போயின, எவ்வளவு மீட்கப்பட்டன என்ற புள்ளிவிவரங்கள் அவர்களது செயலின்மையை அம்பலப்படுத்துவதால், அத்தகைய புகார்கள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பொதுமக்கள் இந்த அவமானங்களை "பொருள்'படுத்தாமல் தவிர்ப்பது சிரமம்.

காவல்நிலையங்கள் ஆர்வமுடன் எடுத்துக்கொள்ளும் புகார்கள் சாலை விபத்துகள்தான். அவர்கள் சொல்கிற வழக்கறிஞரிடம் வழக்கை நடத்தி, இழப்பீட்டில் 40 சதவீதம் வரை வழக்கறிஞர் கட்டணமாகக் கொடுக்கச் சம்மதிக்காவிட்டால், சாலையில் முன்சக்கரத்தில் இறந்தவர்கூட முதல் தகவல் அறிக்கையில் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு செத்துவிடுவார்.

கணினி வந்த பிறகும் காவல்துறையில் இன்னமும் கட்டுக்கட்டாக காகித வேலைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. பணிப்பளுவின் காரணமாக பல புகார்களை காவல்நிலைய தலைமைக் காவலர்கள் தட்டிக் கழிக்கப் பார்ப்பதும் நடக்கிறது. முதல் தகவல் அறிக்கை எழுத ஆளில்லை என்பதற்காகப் புகார்களைத் திருப்பி அனுப்பும் காவல்நிலையங்கள் உள்ளன. தங்கள் சொந்தச் செலவில் (வசூல்தான்) ஆட்களை நியமித்து, பணிப்பளுவைக் குறைத்துக் கொள்ளும் காவல்நிலையங்களும் உள்ளன.

புகார் கொடுக்க வருபவரை பாதிக்கப்பட்ட மனிதராக மதித்து, அவரைப் பரிவுடன் நடத்தவும், புகாரை எந்த எல்லை வேறுபாடும் சொல்லாமல் கணினியில் பதிவு செய்து நகல் தருவதற்கு, தனிஅறையை, நல்ல இருக்கை வசதிகளுடன் அமைக்கும் குறைந்தபட்ச நடவடிக்கைகூட காவல்துறையை நண்பனாகக் கருதச் செய்யும். புகார்களின் தன்மைக்கேற்ப, விசாரணை நடத்தும் பொறுப்பை அந்தந்தப் பகுதியின் காவலர்களுக்கு, கோட்ட அளவிலான காவல்துறை அதிகாரி பிரித்தளிக்கும் நடைமுறையைக் கைக்கொள்ளலாம். "மாதவர் நோன்பும் மாதரார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றாம்' என்கிறது தமிழ் இலக்கியம். இன்றைக்கு அந்தக் காவலன் - காவல்துறைதான்!
நன்றி : தினமணி

No comments: