Monday, January 4, 2010

காலம் கடந்துவிடவில்லை

நீர்நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்களைப் பாதுகாப்பதா? அல்லது அங்கு ஏழைகள் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதா, கூடாதா? என்ற சங்கடமான கேள்விக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்துள்ள பதில் மிகத் தெளிவானது. "இரண்டுமே சமூகப் பிரச்னைதான். ஆனால், நீர்நிலைகளையும் நீர்வரத்துப் பகுதிகளையும் பாதுகாப்பதுதான் இதில் முக்கியமானது' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம்.

தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும்.

ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன.

நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன.

நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை.

கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும்.
நன்றி : தினமணி

No comments: