Wednesday, December 16, 2009

உண்​மை​யான கூட்​டாட்​சி​தான் காலத்​தின் கட்​டா​யம்!

மேற்கு வங்​கத்​தில் சட்​டம் ஒழுங்கு அடி​யோடு சீர்​கு​லைந்​து​விட்​டது.​ எனவே மாநி​லத்​தின் நிலை​மையை நேரில் மதிப்​பிட்டு அம் மாநில அர​சைப் பத​வி​நீக்​கம் செய்து,​​ குடி​ய​ர​சுத் தலை​வர் ஆட்​சியை ஏற்​ப​டுத்த வேண்​டு​மென்று மத்​திய அமைச்​ச​ரும் காங்​கி​ரஸ் கூட்​ட​ணிக் கட்​சி​யின் தலை​வ​ரு​மான மம்தா பானர்ஜி மத்​திய அர​சுக்கு அழுத்​தம் கொடுத்​தார்.​ இந்த வேண்​டு​கோளை ஏற்று மத்​திய உள்​துறை இணைச் செய​லா​ளர் வி.எஸ்.​ சௌத்ரி தலை​மை​யில் மத்​திய அதி​கா​ரி​க​ளைக் கொண்ட ஒரு குழு மேற்கு வங்​கத்​துக்கு அனுப்​பப்​பட்டு அங்​குள்ள உயர் அதி​கா​ரி​க​ளை​யும்,​​ அர​சி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​க​ளை​யும் சந்​தித்​துப் பேசி​யது.​

÷இப் பிரச்னை குறித்து நாடா​ளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சி​கள் கடும் கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளன.​ எதி​ரும் புதி​ரு​மான பா.ஜ.க.​ இட​து​சா​ரிக் கட்​சி​கள்,​​ சமா​ஜ​வாதி,​​ பகு​ஜன் சமாஜ் கட்சி ஆகி​யவை இணைந்து நின்று மத்​திய அர​சின் இச்​செ​ய​லுக்​குக் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளன.​ ​

÷மத்​திய உள்​துறை அமைச்​சர் ப.சிதம்​ப​ரம் எதிர்க்​கட்​சி​க​ளின் கண்​ட​னத்​துக்​குப் பதி​ல​ளிக்​கும்​போது,​​ மத்​திய அர​சின் குழு அனுப்​பும் முடிவு,​​ மாநில அர​சு​டன் மோத​வேண்​டும் என்ற நோக்​கில் எடுக்​கப்​பட்​ட​தல்ல.​ இதை 356-வது விதி என்ற கண்​ணாடி வழி​யா​கப் பார்க்​கத் தேவை​யில்லை என்று கூறி​யி​ருப்​பது,​​ தேங்​காய் திருட தென்னை மரத்​தில் ஏறி​ய​வனை தோட்​டக்​கா​ரன் கண்​டு​பி​டித்​த​வு​டன் புல் பறிக்க மர​மே​றி​ய​தா​கப் பசப்​பிய கதை​தான் நினை​வுக்கு வரு​கி​றது.​

÷சி​றந்த வழக்​க​றி​ஞ​ரான சிதம்​ப​ரம் அர​சி​யல் சட்​டத்​தின் பிரி​வு​கள் என்ன கூறு​கின்​றன என்​பதை அறி​யா​மல் இருக்க முடி​யாது.​ சட்​டம் ஒழுங்​குப் பிரச்னை என்​பது மாநில அர​சு​க​ளின் கட்​டுப்​பாட்​டுக்கு உள்​பட்ட ஒன்​றா​கும்.​ ஒரு மாநி​லத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​டு​விட்​டது என்ற குற்​றச்​சாட்டு எழு​மா​னால் மத்​திய அரசு என்ன செய்​ய​வேண்​டும் என்​பதை அர​சி​யல் சட்​டம் தெளி​வா​கக் கூறு​கி​றது.​ அர​சி​யல் சட்​டத்​தின் 163,​ 164,​ 356-வது பிரி​வு​கள் மத்​திய,​​ மாநில உற​வில் முக்​கி​யப் பங்கு வகிக்​கின்​றன.​

÷ஒரு மாநி​லத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​ட​தா​கப் புகார் செய்​யப்​ப​டு​மா​னால்,​​ மத்​திய அரசு உட​ன​டி​யாக அந்த மாநில அர​சி​டம் விளக்​கம் கேட்க வேண்​டும்.​ அவ்​வாறு செய்​வ​தற்கு மாநில அரசு மறுக்​கு​மா​னால்,​​ அர​சி​யல் சட்​டம் வழங்​கி​யி​ருக்​கிற 257(1) பிரி​வின்​படி மாநில அரசு என்​னென்ன செய்ய வேண்​டும் என்​ப​தற்​கான ஆணை​களை மத்​திய அரசு பிறப்​பிக்க வேண்​டும்.​ அந்த ஆணை​க​ளை​யும் மாநில அரசு புறக்​க​ணிக்​கு​மா​னால்,​​ அங்கு குடி​ய​ர​சுத் தலை​வர் ஆட்சி குறித்து மத்​திய அரசு யோசிக்க வேண்​டும்.​ அதன் பின்​னரே 356-வது பிரி​வின் கீழ் மாநில அர​சைப் பதவி நீக்​கம் செய்​யும் நட​வ​டிக்​கையை மேற்​கொள்ள வேண்​டும்.​

÷அ​ர​சி​யல் சட்​டம் வகுக்​கப்​பட்ட காலத்​தில் அர​சி​யல் நிர்​ணய சபை​யில் இப் பிரச்னை குறித்து விரி​வான-​ஆழ​மான விவா​தங்​கள் நடை​பெற்​றுள்​ளன.​ 1949-ம் ஆண்டு மே 31-ம் தேதி அர​சி​யல் சட்​டத்​தின் 356-வது பிரிவு கு றித்து விவா​தம் நடை​பெற்​ற​போது,​​ மத்​திய சட்ட அமைச்​சர் அம்​பேத்​கர் பின்​வ​ரு​மாறு குறிப்​பிட்​டார்:​

​ மாநில அர​சு​க​ளுக்கு அர​சி​யல் சட்​டம் வகுத்​துத் தந்​துள்ள விதி​மு​றை​க​ளுக்கு மாறாக அந்த அர​சு​கள் செயல்​ப​டு​மா​னால் மத்​திய அரசு தலை​யி​டும் நிலை உரு​வா​கி​றது.​ ஆனால் மாநி​லத்​தில் நல்ல அரசு செயல்​ப​டு​கி​றதா இல்​லையா என்​பதை நிர்​ண​யிப்​பது மத்​திய அர​சின் வேலை அல்ல.​ இந்த விஷ​யத்​தில் நான் மிகத் தெளி​வா​கவே இருக்​கி​றேன்.​ இந்​தச் சட்​டப்​பி​ரிவு செயல்​ப​டாத செத்த பிரி​வா​கவே இருக்​கும்.​ எனி​னும் இந்​தச் சட்​டப்​பி​ரி​வைச் செயல்​ப​டுத்த வேண்​டிய நிலை ஏற்​பட்​டால் மாநில ஆட்​சி​யைக் கலைப்​ப​தற்கு முன்​பாக குடி​ய​ர​சுத் தலை​வர் முன்​னெச்​ச​ரிக்​கை​யான நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும்.​

​ முத​லா​வ​தாக அர​சி​யல் சட்​டம் வகுத்​துத் தந்த வழிப்​பி​ர​கா​ரம் நடக்​கு​மாறு தவறு செய்​யும் மாநி​லத்​துக்கு எச்​ச​ரிக்கை விட​வேண்​டும்.​ அந்த எச்​ச​ரிக்கை உரிய பயனை அளிக்​கா​மல் போகு​மா​னால்,​​ அந்த மாநில மக்​களே தங்​கள் விவ​கா​ரங்​க​ளைத் தீர்த்​துக் கொள்​ளும் வகை​யில் மாநி​லச் சட்​ட​மன்​றத் தேர்​த​லுக்கு உத்​த​ர​விட வேண்​டும்.​ மேற்​கண்ட இரண்டு பரி​கா​ரங்​க​ளும் தோல்​வி​ய​டை​யு​மா​னால் மட்​டுமே 356-வது சட்​டப்​பி​ரி​வைப் பயன்​ப​டுத்த வேண்​டும்.​

÷மா​நி​லங்​கள் மீது மத்​திய அரசு ஆதிக்​கம் செலுத்​தக்​கூ​டிய பல்​வேறு சட்​டப்​பி​ரி​வு​கள் நமது அர​சி​யல் சட்​டத்​தில் இடம்​பெற்​றி​ருந்த போதி​லும்,​​ நமது அர​சி​யல் அமைப்பு,​​ கூட்​டாட்சி அமைப்​பா​கும்.​ அதா​வது ​ மத்​திய அர​சுக்கு என்று ஒதுக்​கப்​பட்ட துறை​க​ளில் மத்​திய அர​சுக்கு எவ்​வ​ளவு சுய​ஆ​திக்​கம் உண்டோ அதைப்​போல மாநி​லங்​க​ளுக்​கென்று ஒதுக்​கப்​பட்ட துறை​க​ளில் மாநி​லங்​க​ளுக்கு சுய​ஆ​திக்​கம் உண்டு.​ கூட்​டாட்​சித் தத்​து​வத்​தின் அடிப்​ப​டைக் கொள்கை என்​பது மத்​திய,​மாநில அர​சு​க​ளுக்கு இடையே சட்​டம் இயற்​றும் நிர்​வாக அதி​கா​ரங்​க​ளைப் பகிர்ந்து தரு​வ​தா​கும்.​

​ இது மத்​திய அரசு இயற்​றும் சட்​டத்​தின் மூலம் அல்​லது அர​சி​யல் சட்​டத்​தின் மூலமே வகை​செய்​யப்​ப​டு​கி​றது.​ நமது அர​சி​ய​ல​மைப்​பின்​படி மாநி​லங்​கள் சட்​டம் இயற்​றும் அல்​லது நிர்​வாக அதி​கா​ரங்​க​ளுக்கு மத்​திய அர​சைச் சார்ந்​தி​ருக்​க​வில்லை.​ இந்த விஷ​யத்​தில் மாநில அர​சும்,​​ மத்​திய அர​சும் சரி​ச​ம​மான அதி​கா​ரங்​கள் படைத்​தவை.​

÷1951-ம் ஆண்​டில் முதல் முத​லாக பஞ்​சாப் மாநில அரசு பதவி நீக்​கம் செய்​யப்​பட்டு அங்கு குடி​ய​ர​சுத் தலை​வர் ஆட்சி நிறு​வப்​பட்​டது.​ அதற்​குப் பிறகு 100 தட​வை​க​ளுக்கு மேல் இந்​தி​யா​வின் எல்லா மாநி​லங்​க​ளி​லும் மத்​திய அரசு இத்​த​கைய ஜன​நா​யக விரோத நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டது.​ எல்லா கட்​சி​க​ளுக்​கும் இதில் பங்கு உண்டு.​ 1977-ம் ஆண்​டில் ஜனதா கட்சி மத்​தி​யில் ஆட்​சிப் பொறுப்​பேற்​ற​போது 9 மாநி​லங்​க​ளில் இருந்த காங்​கி​ரஸ் அர​சு​கள் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டன.​ 1980-ம் ஆண்டு மீண்​டும் காங்​கி​ரஸ் ஆட்சி ஏற்​பட்​ட​போது 9 மாநி​லங்​க​ளில் இருந்த ஜனதா கட்சி அர​சு​கள் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டன.​ ஆனால் அப்​போது மாநி​லங்​க​ள​வை​யில் எதிர்க்​கட்​சி​கள் பெரும்​பான்​மை​யாக இருந்த கார​ணத்​தால் இந்​தப் பதவி நீக்​கத்தை ஏற்​ப​தற்கு அது மறுத்​து​விட்​டது.​ ஆனால் 1994-ம் ஆண்​டில் கர்​நா​டக மாநில முத​ல​மைச்​ச​ராக இருந்த எஸ்.ஆர்.​ பொம்​மை​யின் அரசு பதவி நீக்​கம் செய்​யப்​பட்​ட​போது,​​ இந்​திய உச்ச நீதி​மன்​றத்​தில் 9 பேர்​க​ளைக் கொண்ட நீதி​ப​தி​க​ளின் ஆயம் தலை​யிட்டு உன்​ன​த​மான ஒரு தீர்ப்பை வழங்​கி​யது.​

÷இந்த ஆயத்​தில் ஒரு​வ​ரான நீதி​பதி கே.​ ராம​சாமி பின்​வ​ரு​மாறு குறிப்​பிட்​டார்:​

நமது அர​சி​யல் சட்​டம் கூட்​டாட்​சித் தத்​து​வத்தை தன்​னு​டைய அடிப்​படை அம்​ச​மா​கக் கொண்​டி​ருக்​கி​றது.​ அது ஒரு​போ​தும் அழிக்​கப்​பட முடி​யா​தது.​

​ மற்​றொரு நீதி​ப​தி​யான குல்​தீப் சிங் கூறு​கை​யில்:​ மாநி​லங்​கள் சுதந்​தி​ர​மா​ன​தும் தனித்​தன்மை வாய்ந்​த​து​மான அர​சி​யல் சட்ட ரீதி​யான நிலை​யைக் கொண்​டி​ருக்​கின்​றன.​ நாட்​டின் அர​சி​யல்,​​ சமு​தா​யம்,​​ கல்வி போன்ற துறை​க​ளில் மத்​திய அர​சைப் போலவே மாநில அர​சு​க​ளுக்​கும் முக்​கி​யப் பங்​க​ளிப்பு உண்டு.​ மத்​திய ஆட்​சி​யின் ஏஜெண்​டு​க​ளா​கவோ அல்​லது அதைச் சார்ந்து நிற்​க​வேண்​டிய நிலை​யி​லேயோ மாநில ஆட்​சி​கள் இல்லை.÷ ÷மற்​றொரு நீதி​ப​தி​யான ரத்​தி​ன​வேல் பாண்​டி​யன் கூறு​கை​யில்:​ 356-வது சட்​டப்​பி​ரிவு அபூர்​வ​மா​கவே பயன்​ப​டுத்​தப்​பட வேண்​டும்.​ அர​சி​யல் சட்ட அமைப்​பின்​படி மத்​திய,​​ மாநில அர​சு​க​ளுக்​கி​டையே நில​வும் உற​வைச் சீர்​கு​லைக்​கும் வகை​யில் இந்​தப் பிரிவை ​ ​ அடிக்​கடி பயன்​ப​டுத்​தக் கூடாது.​ அவ்​வாறு இந்​தப் பிரிவு பயன்​ப​டுத்​தப்​ப​டு​மா​னால்,​​ மாநில முத​ல​மைச்​சர் தன்​னு​டைய அர​சி​யல் ரீதி​யான கட​மை​க​ளைச் சரி​வ​ரச் செய்ய முடி​யாது.​ தான் தொடர்ந்து பத​வி​யில் இருக்க முடி​யுமா முடி​யாதா ​ என்ற அச்​சத்​தின் கீழ் அவர் இயங்க வேண்​டிய நிலைமை ஏற்​பட்​டால் மாநி​லத்​தின் நலன்​கள் பெரு​ம​ளவு பாதிக்​கப்​பட்​டு​வி​டும் என்று நீதி​ப​தி​கள் குறிப்​பிட்​ட​னர்.​

÷உச்ச நீதி​மன்ற நீதி​ப​தி​கள் 9 பேரைக் கொண்ட ஆயம் அளித்த இந்​தத் தீர்ப்பு என்​பது,​​ மத்​திய ஆட்​சிப் பொறுப்​பில் இருப்​ப​வர்​க​ளுக்கு விடப்​பட்ட எச்​ச​ரிக்​கை​யா​கும்.​

​ 1980-களில் மத்​திய,​​ மாநில உறவு பற்றி ஆராய பிர​த​மர் இந்​திரா காந்​தி​யால் அமைக்​கப்​பட்ட சர்க்​கா​ரியா ஆணை​யம் தன்​னு​டைய அறிக்​கை​யில் பின்​வ​ரு​மாறு திட்​ட​வட்​ட​மா​கக் கூறி​யி​ருக்​கி​றது:​

​ ​ மிக மோச​மான சூழ்​நி​லை​யில் வேறு​வ​ழியே இல்​லா​த​போ​தும்,​​ மற்ற வேறு வகை​யான முயற்​சி​கள் அனைத்​தும் தோற்​றுப்​போ​ன​போ​தும்,​​ அந்த மாநி​லத்​தில் சீர்​கு​லைந்த சட்​டம் ஒழுங்​கைத் திருத்​தும் நோக்​கத்​து​டன் 356-வது பிரிவு மிக​மிக அபூர்​வ​மா​கப் பயன்​ப​டுத்​தப்​பட வேண்​டும்.​ இவ்​வாறு செய்​வ​தற்கு முன்​னால் அந்த மாநி​லத்​தில் எழுந்​துள்ள பிரச்​னை​யைத் தீர்ப்​ப​தற்கு சகல வித​மான முயற்​சி​க​ளும் மேற்​கொள்​ளப்​பட வேண்​டும்.​ தவறு செய்​யும் மாநில அர​சுக்கு எச்​ச​ரிக்கை விடப்​ப​ட​வேண்​டும்.​ 356-வது பிரி​வின்​படி நட​வ​டிக்கை எடுப்​ப​தற்கு முன்,​​ மாநில அரசு அளிக்​கும் விளக்​கத்தை மிகக் கவ​ன​மு​டன் பரி​சீ​லனை செய்ய வேண்​டும்.​ இவ்​வா​றெல்​லாம் செய்​யா​மல் மாநில அர​சைப் பத​வி​நீக்​கம் செய்​வ​தென்​பது சரி​யா​னது அல்ல.​

​ உல​கத்​தின் பல்​வேறு கூட்​டாட்சி முறை உள்ள நாடு​க​ளின் அர​சி​யல் சட்​டத்​தில் இத்​த​கைய சட்​டப்​பி​ரிவு என்​பது இல்​லவே இல்லை.​ எனவே இச்​சட்​டப்​பி​ரிவை அடி​யோடு நீக்​கு​வது பற்றி ஆரா​ய​வேண்​டிய கட்​டம் வந்​து​விட்​டது.​

​ அர​சி​யல் சட்​டம் உரு​வாக்​கப்​பட்ட கால​கட்​டத்​தில் இருந்த இந்​தி​யா​வின் நிலைமை முற்​றி​லு​மாக மாறி​யி​ருக்​கி​றது.​ அப்​போது காங்​கி​ரஸ் கட்சி ஒன்றே வலிமை வாய்ந்த கட்​சி​யா​கத் திகழ்ந்​தது.​ 1947-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்​டு​கள் மத்​தி​யி​லும்,​​ மாநி​லத்​தி​லும் காங்​கி​ரஸ் கட்​சியே ஆட்சி நடத்​தி​யது.​ சுதந்​தி​ரப் போராட்​டத்​தில் முன்​ன​ணி​யில் நின்று தலைமை தாங்​கிப் போரா​டிய பல தலை​வர்​கள் மத்​தி​யி​லும்,​​ மாநி​லத்​தி​லும் ஆட்​சிப் பொறுப்​பு​க​ளில் இருந்​தார்​கள்.​ எனவே மத்​திய,​​ மாநில அர​சு​க​ளுக்​கி​டையே பிரச்​னை​கள் எழும்​போது அவற்​றைக் கட்சி மட்​டத்​தி​லும் ஆட்சி மட்​டத்​தி​லும் சுமு​க​மா​கத் தீர்த்​துக் கொண்​டார்​கள்.​

​ ஆனால் 1967-ம் ஆண்​டுக்​குப் பிறகு கொஞ்​சம் கொஞ்​ச​மாக நிலைமை மாறி மத்​தி​யில் ஒரு கட்​சி​யும் மாநி​லங்​க​ளில் வெவ்​வேறு கட்​சி​க​ளும் ஆட்​சிப் பொறுப்​பு​களை ஏற்​கும் நிலை வந்​து​விட்​டது.​ இந்த நிலை​மை​யி​லும் ஒரு பெரும் மாற்​றம் ஏற்​பட்டு மத்​தி​யில் எந்​த​வொரு கட்​சி​யும் ஆட்சி செய்​ய​மு​டி​யா​மல் பல்​வேறு மாநி​லக் கட்​சி​க​ளின் உத​வி​யோடு கூட்​டணி ஆட்​சியை நடத்​தும் நிலை மிகத் தெளி​வாக உரு​வா​கி​விட்​டது.

​ இனி எந்​தக் காலத்​தி​லும் ஒரு கட்​சி​யின் ஆட்சி என்​பது மத்​திய அர​சில் ஏற்​ப​டப் போவ​தில்லை.​ எனவே மத்​திய,​​ மாநில அர​சு​க​ளுக்​கி​டையே மோத​லற்ற போக்கு ஏற்​ப​டு​வது நாட்​டின் வளர்ச்​சிக்கு உத​வும்;​ இல்​லை​யென்​றால் வளர்ச்சி திட்​ட​வட்​ட​மா​கப் பாதிக்​கப்​ப​டும்.​

÷நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளி​லும் சீரற்ற வளர்ச்​சிப் போக்​கு​கள் இருப்​பது மோதல்​களை அதி​க​மாக்​கு​வ​தற்கே வழி​வ​குக்​கும்.​ மாநில உரி​மை​களை வலி​யு​றுத்தி காங்​கி​ரஸ் அல்​லாத கட்​சி​கள் நடத்​தும் போராட்​டம் என்​பது மத்​திய அர​சின் அதி​கா​ரங்​க​ளுக்கு அறை​கூ​வல் விடு​வ​தில் போய் முடி​யும்.

​ இந்​தி​யா​வைச் சுற்​றி​யுள்ள பல்​வேறு நாடு​க​ளில் ஜன​நா​ய​கம் சீர​ழிக்​கப்​பட்டு சர்​வா​தி​கார ஆட்சி முறை​கள் நிலவி வரும்​போது இந்​தி​யா​வி​லும் அத்​த​கைய நிலைமை வந்​து​வி​டக் கூடாது.​ மாநி​லங்​க​ளின் உரி​மை​களை நிலை​நாட்​டும் வகை​யி​லும் உண்​மை​யான கூட்​டாட்சி மல​ரும் வகை​யி​லும் நமது அர​சி​யல் சட்​டம் திருத்​தி​ய​மைக்​கப்​பட வேண்​டிய கால​கட்​டம் பிறந்​து​விட்​டது.​ இந்த உண்​மையை மத்​திய ஆட்​சிப் பொறுப்​பில் இருப்​ப​வர்​கள் உண​ர​வேண்​டும்.​ இல்​லை​யென்​றால் வேண்​டாத விளை​வு​கள் ஏற்​ப​டும் என்​ப​தில் சந்​தே​க​மில்லை.
கட்டுரையாளர் : பழ.​ நெடு​மா​றன்
நன்றி : தினமணி

No comments: