Tuesday, December 22, 2009

விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

'உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.

இதை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறியதாவது: இந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என்றால், பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வட்டி வீதத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ரொக்க கையிருப்பு வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், கடந்த 18ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசி உள்ளார். இதனால், நிதிக் கொள்கைகள் கடுமையாக்கப்படலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கையை, அடுத்த மாதம் 29ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல், அரசு செயலற்று இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இவ்விவகாரத்தால், பார்லிமென்ட் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. அதே சமயம், முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலான் கருத்து தெரிவிக்கையில், 'அதிகப் பணப்புழக்கத்தை உறிஞ்சி எடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், விலைவாசி குறையும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும், வியட்னாமும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை சமீபத்தில் குறைத்திருப்பதையும் நிதித்துறையும் ரிசர்வ் வங்கியும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: