நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் தவிர மற்ற அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் அனைத்து வேலை நாட்களிலும் விநியோகம் செய்ய வேண்டும்; வெளிநபர்கள் கடைகளில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என, அண்மையில் நடைபெற்ற வட்ட வழங்கல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.
ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைத்தான் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் நியாயவிலைக் கடைகளில் நடப்பது என்ன?
எந்தப் பொருள் என்று விநியோகம் செய்யப்படும் என்பது கடை திறக்கப்படும் வரை தெரியாது. எல்லா கடைகளிலும் வெளிநபர் ஒருவர் அதிகாரபூர்வ விற்பனையாளர்போல மக்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருப்பார். தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க வரிசையாக நிற்கும்போது திடீரென கவுன்டரை மூடுவதுபோல எந்த நேரம் பொருள்கள் தீரும் எனச் சொல்ல முடியாது.
ஒவ்வொரு கடையிலும் இருப்பு இல்லாத பொருள்கள் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் வழங்கல் அலுவலகத்துக்குத் தெரிவித்து, உடனுக்குடன் பொருள்களை அனுப்பும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில் போலி பதிவு மூலம் பொருள்களை வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டு குடும்ப அட்டைதாரர்களை ஏமாற்றுவது, இரவோடு இரவாகக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளைக் கடத்துவது போன்ற செயல்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கூடுதல் சர்க்கரை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிக் கடைகளில் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
அதே தீபாவளி தினத்தன்று அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் "சரக்குகளை' நூறு சதம் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி, அதன்படி எந்தவகை மதுபானங்களும் இல்லை என்று கூறாத அளவு விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி தினத்தன்று மட்டும் தமிழகத்தில் மதுபான விற்பனை சுமார் 250 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
நியாயவிலைக் கடைகள், டாஸ்மாக் கடைகள் இரண்டையுமே அரசுதான் நடத்துகிறது. குடிமகன்களுக்கு டாஸ்மாக் மூலம் அளிக்கப்படும் முக்கியத்துவம், குடிமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அளிக்கப்படாதது ஏன்?
வருமானம் ஒன்றுதான் இதற்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவிநியோகத் திட்டத்தால் அரசுக்கு செலவு; டாஸ்மாக் கடைகளால் வருமானம். அதனால் அதற்கு முக்கியத்துவம். ஆனால், தனியார் நிறுவனங்களைப்போல லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படுவது நியாயமா?
நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைச் சீரமைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை.
மாதம் ஒருமுறை "கூட்டுறவு பறக்கும் படையினர்' நியாயவிலைக் கடைகளில் சோதனை(!) நடத்துவதும், முறைகேடுகளைக் கண்டறிந்து, கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறி பத்திரிகைகளுக்கு செய்தி அளிப்பதும் மட்டும் தீர்வு தருமா?
எடுக்கும் நடவடிக்கைகள் கடை ஊழியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினால் அல்லவா அவர்கள் மீண்டும் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பார்கள்?
வழங்கல் அலுவலர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அமைச்சர் வேலு தந்த அறிவுரைகளில் ஒன்று.
ஆனால், வழங்கல் அலுவலகங்களில் நடப்பதோ நேரெதிர். குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், சேர்த்தல் போன்றவற்றுக்காக பொதுமக்கள் செல்லும்போது அவர்களுக்கு முறையாக பதில்சொல்லக் கூட ஆள் இருப்பதில்லை. அலைக்கழிப்பு, மன உளைச்சலுடன்தான் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.
முறைகேடுகளுக்கு நியாயவிலைக் கடை ஊழியர்கள் மட்டுமே காரணம் என்றும் கூறமுடியாது. அவர்கள் தங்கள் தரப்பில் பல்வேறு காரணங்களை எடுத்து வைக்கின்றனர். குறைவான ஊதியம் என்பதே பிரதான காரணம்.
மற்றபடி முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்துப் பொருள்களையுமே பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என்று நியாயவிலைக் கடை ஊழியர்களே சொல்கின்றனர். ஆனால், எல்லா பொருள்களையும் பாக்கெட்டுகளில் அடைப்பது நடைமுறை சாத்தியமற்றது என அரசு தட்டிக் கழிக்கிறது.
பொதுவிநியோகத் திட்டம் என்பது நாட்டின் மிகப் பெரிய, சிறப்பான திட்டங்களுள் ஒன்று. அதில் குறைகள் ஏற்படுவது இயல்புதான்.
ஆனால், அதை அவ்வப்போது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் எடை குறைவது போல குறைகளும் குறைந்தால் நல்லது.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி
Monday, November 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment