Thursday, November 19, 2009

அளவுக்கு மீறினால்...

குழந்தைக்கு அலங்காரம் செய்து திருஷ்டி கழிக்க கன்னத்தில் கரும்புள்ளி வைப்பது போல, மகாராஷ்டிர மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் நிறைந்த 20 ஆண்டு கிரிக்கெட் விளையாட்டுக்காக உலகம் முழுவதும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அவரது சொந்த மாநிலத்தில் அவர் தலையில் ஒரு குட்டு விழுந்திருக்கிறது. குட்டு வைத்திருப்பவர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.

பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சச்சின், "நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன். மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் எந்தவித முரண்பாடான கருத்துகளோ, மறைமுகமான பதிலடியோ அல்லது அரசியல் பிரவேசமோ எதுவுமே இல்லை. ஆனாலும் தேவையே இல்லாமல் சச்சினைக் கண்டித்திருக்கிறார் பால் தாக்கரே.

"உன் விளையாட்டுத் திடலை விட்டுவிட்டு அரசியல் களத்திற்குள் புகுந்துகொண்டு, எல்லா இந்தியருக்கும் மும்பையில் சமஉரிமை உள்ளது என்று பேசியிருக்கிறீர். சச்சின், இந்த வார்த்தைகளால் மராட்டியர் இதயம் உடைந்துபோனது. மும்பைக்குள் இடம்பெயர்வோரை ஏன் தூண்டி விடுகிறாய்?...'என்று பலவாறாக சச்சினுக்குக் கண்டனம், எச்சரிக்கை, கேள்விக் கணைகள் என்று ஒரு கட்டுரை வடித்திருக்கிறார் பால் தாக்கரே, தனது சாம்னா இதழில்!

மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் முடிந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழியேற்பின்போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி, மராத்தி மொழியில் உறுதி மொழி ஏற்காமல் ஹிந்தியில் உறுதிமொழி ஏற்றார் என்பதற்காக அவரை அடித்து, உதைத்து ரகளை செய்தனர் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏக்கள். இதன் மூலமாக, இத்தனை காலமாக இந்த விவகாரங்களில் சிவசேனாவுக்கு இருந்துவந்த புகழை ராஜ் தாக்கரே தட்டிச்சென்றுவிட்டாரே என்ற ஆதங்கம் இருந்துவந்தது.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அவதூறாகப் பேசியதற்காக அபு ஆஸ்மி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரகளை செய்தனர். மராட்டிய மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இப்போது, சச்சின் டெண்டுல்கர் மீது பாய்ந்துள்ளதன் மூலம், மராட்டியர்கள் மட்டுமன்றி, இந்தியர்கள் மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை, மகாராஷ்டிர மண்ணின் மைந்தர் என்பதற்காக, மாநில உணர்வுடன் குறுகிப் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அழகல்ல. "உலகம் கொண்டாடும் இந்தியர் சச்சின், எங்கள் மண்ணின் மைந்தர்' என்று சொல்லிக் கொள்வதில்தான் ஒவ்வொரு மராட்டியரும் பெருமை காண முடியும். சச்சின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள கருத்தும் இதுதான். "நான் மராட்டியன் என்பதற்காகப் பெருமை கொள்கிறேன். ஆனாலும் முதலில் இந்தியன்' என்று சச்சின் குறிப்பிடும்போது, அதனால் அவருக்கு மட்டுமல்ல, மராட்டியர் அனைவருக்கும் பெருமை உண்டாகுமே தவிர, இழிவை ஏற்படுத்தாது.

இருப்பினும், மொழிப்பற்று, இனப்பற்றை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முற்படும்போது, இத்தகைய தேவையற்ற கண்டனங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.

மனித உணர்வு விரிந்துகொண்டே சென்றாக வேண்டும். தன் குடும்பம், தன் மொழி, தன் இனம், தன் ஊர், தனது மாவட்டம், தன் மாநிலம், தனது நாடு என்ற பரந்துபட்ட மனதுடன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகைத் தழுவ வேண்டும். மொழி, இனம், நாடு என்ற எல்லைகள் கடந்து உலக மக்கள் அனைவரையும் சகோதரனாக எண்ணும்போதுதான் அவன் "மனிதன்' ஆகிறான்.

உணவுக்கு உப்பு மிகமிக அவசியம். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பில்லாவிட்டாலும் பசித்தவாய்க்கு சாப்பிட்டுவிட முடியும். ஆனால் உப்பு அளவுக்கு அதிகமானால் அந்த உணவைச் சாப்பிடவே முடியாது என்பதுமட்டுமல்ல, சாப்பிடுபவர் நலனுக்கும் நோய் சேர்க்கும்.

மொழி உணர்வும், கலாசார உணர்வும் உப்பு போன்றதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மொழி, தன் இனம் குறித்த உணர்வும் பெருமிதமும் இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை ருசிக்காது. சப்பென்று ஆகிவிடும். அதே நேரத்தில், அந்த உணர்வு அளவுகடந்த வெறியாக மாறும்போது, அரசியலுக்காக வெறியேற்றும்போது, உலகின் பார்வையில் அவர்கள் கடுகினும் சிறுத்துப் போவார்கள்.
நன்றி : தினமணி

No comments: