Monday, November 9, 2009

இழப்புக்கு ஈடு!

தமிழர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வதற்கும், தமிழர்களின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாக வெளிமாநிலத்தவர் பாராட்டுவதற்கும் ஒரு துறை உண்டென்றால் அது தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துத்துறைதான்.

ஆனால் அந்தத் துறையின் இன்னொரு முகமோ, மனிதாபிமானமே இல்லாமல் கொடூரமாக இருப்பதை அறியும்போது பதறித் துடிக்காத நல்ல உள்ளங்களே இருக்க முடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், முதல்வர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியில் இருந்தும் இத்துறையில் இப்படி ஒரு அவலமா என்று அரற்றாமல் இருக்க முடியாது. அந்த அவலத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன்.

சாலை விபத்தில் அரசு பஸ்களால் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அளித்த தொகைகளையும் அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் கேட்டு, தகவல் அறியும் சட்டப்படி அவர் மனுச் செய்திருக்கிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் பதில் அவரை மட்டும் அல்ல நம்மையுமே அதிர்ச்சியில் உறையவைக்கின்றன.

"தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்குத் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகை மொத்தம் ரூ.323.96 கோடி. 11,233 பேர் இந்தத் தொகை பெற காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 28 ஆண்டுகளாகியும் நயா பைசா கூடப் பெற முடியாமல் தவித்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு.

"சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ரூ.18.61 கோடி தொகை வழங்கப்படவே இல்லை; சாலை விபத்து வழக்குகளை விசாரிக்கும் நடுவர் மன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் தரப்பட வேண்டிய ரூ.305.14 கோடியும் தரப்படவே இல்லை.

தீர்ப்பு கூறிய பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் காட்டும் மெத்தனத்தைப் பொறுக்க முடியாமல், பயணிகளுடன் சென்று கொண்டிருக்கும் அரசு பஸ்களை நடுவழியில் நிறுத்தி ஜப்தி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிடும் சம்பவங்களும் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் அடிக்கடி பிரசுரமாகிறது.

போக்குவரத்துத்துறை செயலரிடம் இந்த நிலுவை குறித்து கேட்டபோது, ""எவ்வளவு சீக்கிரம் பைசல் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பைசல் செய்யவே பார்க்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

"ஸ்டேண்டிங்' என்ற பெயரில் பயணிகளை நிற்க வைத்துக்கொண்டு போகக்கூடாது, அதிக வேகம் செல்லக்கூடாது, போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது, நல்ல நிலையில் இல்லாத பஸ்களை ஓட்டக்கூடாது என்றெல்லாம் தனியார்துறையில் போக்குவரத்து இருந்தபோது தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுடன் கண்காணித்தார்கள். அப்போதெல்லாம் இந்த அளவுக்கு விபத்துகளும் நடக்கவில்லை. அனுபவம் உள்ள டிரைவர்கள் பொறுப்போடு வண்டிகளை ஓட்டினார்கள்.

இப்போது அரசு பஸ்களின் பராமரிப்பு சொல்லும் தரம் அன்று. அதற்குத் தொழிலாளர்களைவிட நிர்வாகமே முக்கிய காரணம். அரசு பஸ் டிரைவர்களின் அனுபவம், பயிற்சி எல்லாம் திருப்திகரமாக இல்லை. இளம் டிரைவர்களைக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நெரிசலான நேரங்களிலும் மோசமான பாதைகளிலும் ஓட்டச் சொல்வதும் அதிகரித்து வருகிறது. எனவே விபத்து இல்லாமல் பஸ் ஓட்டும் டிரைவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

தனியார் துறையில் பஸ்கள் இருந்தபோது அவற்றை அவர்கள் நன்கு பராமரித்தார்கள். அந்த பஸ்களை அதிகாரிகளும் அதிக அக்கறையோடு அடிக்கடி சோதித்து நல்ல நிலைமையில் ஓட்டவைத்தனர். அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி வழியில் நின்றாலும், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, தெருவே அலறும் அளவுக்கு ஓசை எழுப்பிச் சென்றாலும் அதைத் தடுக்கவோ, கேட்கவோ பிற துறை அதிகாரிகளுக்கு அதிகாரமே இல்லை என்ற மனோபாவமே நிலவுகிறது. வெள்ளைக் கோட்டைத் தாண்டக்கூடாது, மஞ்சள் சிக்னல் இருந்தால் போகக்கூடாது என்ற சாதாரண விதியைக் கூட அப்பட்டமாக மீறுவதே அதிகமாக அரசு பஸ்கள்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இன்சூரன்ஸ் செய்யாமல் தனியார் யாரும் எந்த வாகனத்தையும் தெருவில் ஓட்ட முடியாது. ஆனால் அரசு பஸ் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்துமே தங்களுடைய வாகனங்களை இன்சூர் செய்வதில்லை. கேட்டால், விபத்து நடந்தால் நாங்கள் உடனே இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிடுவோம், அதற்காக கோடிக்கணக்கான ரூபாயை இன்சூரன்ஸ் பிரிமீயமாக வீணாக்க விரும்பவில்லை என்று பதில் சொன்னார்கள். இவர்கள் நஷ்ட ஈடு வழங்கிய லட்சணத்தை கார்வேந்தன் அம்பலப்படுத்திவிட்டார். இப்போதுதான் மீண்டும் இன்சூர் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

அரசு பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் போர்க்கால அடிப்படையில் முழுத் தொகையையும் வட்டியுடன் செலுத்த முதல்வர் கருணாநிதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதப்படுத்தியதே கொடுஞ்செயல் என்பதை அதிகாரிகளுக்கு அவர் உணர்த்த வேண்டும். அதுவே அவர்களுடைய மனப்புண்களை ஆற்றும் மருந்து. அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அரசு போக்குவரத்துத்துறையிலேயே வேலையும் தர வேண்டும். அப்போதுதான் நஷ்டஈடு முழுமையானதாக இருக்கும்.
நன்றி : தினமணி

No comments: