""குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று'' என்று வாய் அளவில் வாழ்த்துகிறோம். ஆனால் செயல் அளவில் குழந்தைகளை வதைக்கிறோம். பெரியவர்கள் குழந்தைகளைத் துன்புறுத்துதல் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.
சென்னையில் மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கணவன், தன் மகனை அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை அக்கம்பக்கத்தவரது தகவலால் மாநகரப் போலீஸôர் தலையிட்டு குழந்தையை மீட்டுள்ளனர்.
கொடூரத் தந்தை மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது. எவ்வாறு இளம் பிஞ்சுகளை அதுவும் தன் குழந்தையை உடல்ரீதியாகச் சித்திரவதை செய்ய மனம் வருகிறது என்பது உளவியல் முறையில் ஆராய்ச்சிக்குரியது. இத்தகைய கல்நெஞ்சக்காரர்கள் "உறுப்பொத்தல் மக்களொப்பு' என்ற அளவில் மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்களாகத் திரிகிறார்களே என்று மனம் பதைபதைக்கிறது.
குழந்தைகள் முறைகேடாக நடத்தப்படுவது பற்றிய விழிப்புணர்வு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவு. குழந்தைகளை வேலையில் அமர்த்தக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆயினும், குழந்தைத் தொழிலாளிகள் பரவலாகப் பணியில் இருக்கிறார்கள். கண்ணாடி, வெடிமருந்து, நச்சுப் பொருள்கள், ரசாயனம் போன்ற அபாயகரமான பொருள்களை வைத்து நடத்தப்படும் தொழிற்கூடங்களிலும் குழந்தைகள் வேலை செய்கிறார்கள். "பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கால்பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைகள் பணிபுரிகிறார்கள் என்பதால் அங்கு தயாரிக்கப்படும் கால்பந்துகளை புறக்கணிக்கிறோம் என்று சர்வதேச கால்பந்துக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்தது.
1989-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நலனுக்கான கூட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. 54 பிரிவுகளைக் கொண்ட இத்தீர்மானத்தை இந்தியா உள்பட பல நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதன் அடிப்படையில்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எவை, குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளைக் குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது, பாதிப்புக்கு உள்ளானவர்களாகக் கருத வேண்டும் என்ற வகையில் உலக நாடுகள் குழந்தைகள் நலனுக்காகச் சட்டங்கள் இயற்றியுள்ளன. இந்தியாவில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2000-வது ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய உடன்படிக்கையில் முக்கியமான அம்சங்களாவன:
பதினெட்டு வயதுக்கு உள்பட்டவர்களை குழந்தைகளாகக் கருத வேண்டும். குடியுரிமை, பெயர் சொல்வதற்கான உரிமை, இலவசக் கட்டாய ஆரம்பக்கல்வி, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளை கொடுமைப்படுத்துவது, கட்டாயக் கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுத்தல்.
குழந்தைகளை எந்தவிதத்திலும் மனம் மற்றும் உடல்ரீதியாக கொடுமைக்கு உள்ளாக்கக்கூடாது.
குழந்தைளை இனம், ஜாதி, நிறம், மதம், பொருளாதார நிலை போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்யாதிருத்தல்.
குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.
பாதுகாப்பு நடவடிக்கைகளும், சட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பல நடத்தப்பட்டாலும், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்கின்றன. குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்தல், பள்ளிக்கு அனுப்பாமல் தொழிலில் ஈடுபடச் செய்வது, வீட்டில் வேலைக்கு வைப்பது மட்டுமல்லாமல் அவர்களை அடித்து வேலை வாங்குவது போன்ற அவலங்கள் எங்கும் உள்ளன. நகரில் வசிக்கும் பலர் வீட்டு வேலைக்குத் தனது ஊரிலிருந்து ஏழைக்குழந்தைகளை அழைத்துவந்து, ஏதோ அவர்களுக்கு உதவுவதுபோல் தனது வீட்டில் வேலைக்கு வைக்கிறார்கள். ஏழைக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றால் அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களது ஏழ்மை நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது சுரண்டிப் பிழைப்பதைத் தவிர வேறென்ன?
சமுதாயத்தில் எவ்வாறு குழந்தைகள் நடத்தப்படுகிறார்கள், எத்தகைய தீங்குகள் இழைக்கப்படுகின்றன என்பதைப் பற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சில ஆய்வு நடத்தின. குழந்தைகளைச் சீண்டுதல், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் சில்மிஷம் செய்வது போன்ற அவலங்கள், குழந்தைகளின் உற்றார் உறவினர்களாலேயே இழைக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இத்தகைய கொடுஞ்செயல்களை எவ்வாறு கையாள்வது என்பது அறியாமல் குழந்தைகள் மனத்தளவில் பாதிக்கப்படுகின்றனர். எதற்கெடுத்தாலும் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுக் குறைசொல்வது அவர்களுக்கு விருப்பமானவற்றை மறுத்தல், தனி அறையில் வைத்துப் பூட்டுதல் போன்ற அநீதிகள் சாதாரணமாக பல இல்லங்களில் நடக்கின்றன.
மேற்கு வங்கத்தில் மிதுனபுரி என்ற கிராமத்தில் பாபர் அலி என்ற பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர் எவ்வாறு தனது சுயமுயற்சியால் தனது கிராமத்தில் அக்கம் பக்கத்து வசதியில்லாக் குழந்தைகளுக்கு தான் கற்றதைப் பகிர்ந்து கொள்கிறார் என்பது நெகிழ வைக்கும் செய்தி. அந்தக் கிராமத்திலிருந்து அரசு பள்ளிக்கூடம் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள குழந்தைகள் வயிற்றைக் கழுவ வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். பாபர்அலி தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று படித்துத் திரும்பி வந்த கையோடு, சிரமத்தைப் பாராமல் கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்குத் தினப்பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இவரது தன்னலமற்ற செயலால் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகள் இவரது வீட்டைச் சுற்றி உட்கார்ந்து பயில்கின்றனர். மிக இளமையான தலைமையாசிரியர் என்ற சிறப்பு 16 வயதான பாபர் அலிக்கு உண்டு. அந்தச் சிறுவனுக்கு உள்ள சமுதாய உணர்வு எவ்வளவு பேருக்கு வருகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விசேஷ சட்டங்களில் குழந்தைகளுக்கு எதிராகப் பல குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. கட்டாயக் கருக்கலைப்பு, சிசுக்கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல், குழந்தைகளைப் பரிதவிக்க விடுதல், குழந்தைகளைக் கடத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துதல், கற்பழிப்பு, இயற்கைக்கு மாறாகப் புணர்தல், பால்ய விவாகம், குழந்தைகளை வேலையில் அமர்த்துதல் போன்ற பல குற்றங்கள் இதில் அடங்கும். இந்தியாவில் 42 சதவிகித மக்கள்தொகையினர் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். இது உலகில் உள்ள குழந்தைகளின் மக்கள்தொகையில் 20 சதவிகிதமாகும். இவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க வேண்டியது நமது கடமை. தில்லிக்கு அருகில் இந்த ஆண்டு நிகழ்ந்த நித்தாரி தொடர் கொலை, குழந்தைகளின் உடல் உறுப்பு அறுவடைக்காகச் செய்யப்பட்டது போன்ற கொடுஞ்செயல் மீண்டும் நிகழக்கூடாது. குழந்தைகளைக் கடத்தி இழிவணிகமுறை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தொழிலில் ஈடுபடுத்துவதற்காக "குழந்தைகள் வணிகம்' சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படுவது இந்தியாவில் அதிகமாகியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நலப்பிரிவு கவலை தெரிவித்துள்ளது. சுமார் 4 லட்சம் குழந்தைகள் பருத்தி ஆலைகளில் பணிபுரிகின்றனர்.
குஜராத்தில் சூரத் நகரம் வைரம் அறுக்கும் தொழில்களுக்கு உறைவிடம். ஆனால் இந்த அபாயகரமான தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று பல குழந்தைகள் நல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.
முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு சுமார் 1000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். தங்கச் சங்கிலி பறிபோனாலோ, பொருள் திருடப்பட்டாலோ மக்கள் கூக்குரலிடுகின்றனர். ஆனால் குழந்தைகள் காணாமல் போவதைப் பற்றிப் பேசுவதில்லை. காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வானொலி, தொலைக்காட்சியில் காணாமல் போனவர்களைப் பற்றி தகவல் கொடுப்பதோடு முடித்துவிடுகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் குழந்தைகள் காணாமல்போன வழக்குகளைக் குற்றப் புலனாய்வுத்துறை பிரத்யேகமாகக் கவனித்து, காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க முனைப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணித்துள்ளது. தமிழ்நாட்டில் 2008-ம் ஆண்டு 117 குழந்தைகளும், இந்த ஆண்டு இதுவரை 75 குழந்தைகளும் காணாமல் போய் உள்ளனர்.
குழந்தைகள் உதவி மையங்கள் முக்கிய நகரங்களில் இயங்குகின்றன. உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1098. குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் புகார் கொடுக்கலாம். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.
சென்னை நகரில் குழந்தைகள் நட்பக காவல்நிலையம் அமைக்கத் திட்டம் இருந்தது. இத்தகைய காவல் நிலையங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட வேண்டும். ஓடி விளையாடு பாப்பா என்று சொல்வது போய் குழந்தைகளை ஓட ஓட விரட்டுகிறோம். "பிள்ளைப் பிராயத்தை இழந்தோமே' என்று ஒவ்வொருவரும் ஏங்கும் நாள் உண்டு. அந்தப் பிள்ளைப் பிராயத்தைக் குழந்தைகளிடமிருந்து பிடுங்காமல் அவர்களிடமே கொடுப்போம். குழந்தைகளைப் போற்றும் நாடு தான் வளம் பெறும் என்பதை மறந்துவிடக் கூடாது.
கட்டுரையாளர் :ஆர். நடராஜ்
நன்றி : தினமணி
Saturday, November 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment